Translate

Wednesday, November 8, 2017

வாழ்க்கையெனும் பாடம்


அன்னையவள் அடைக்காக்க,
அதிலொரு சுகம் நான் காண,
அன்புடன் அவளணைக்க,
ஆறுதலாய் எனக்கிருக்க,
அணைந்ததடா சிறிது சிறிதாய்
ஆரவார நடைத்தொடங்க.

அருகிலிருந்து எனைக் காத்தாள்,
அனைத்தையும்
அன்னம் போல் ஊட்டி விட்டாள்,
அன்றாட நிகழ்வுகளை கதைகதையாய்
கற்பனை காட்சிகளையும் எமக்குரைத்து.

காணத்தான் துவங்கி விட்டேன்
கனவுகளை என்றிலிருந்தென உணராமல்.
காட்சிகளோ விரிந்தது.
கதைகளாய் தொடர்ந்தது.
காலமது கனிந்தபோது
காதலில் கால் பதிய,
கவிழ்ந்ததே இமையிரண்டும்
கனவுகளை தொடங்கி வைத்து.

கவிதைகளேன கதையளந்து,
கட்டறுந்த கன்றுகளாய் சுற்றியலைந்து,
கல்வியை மறந்து நாங்கள்
காவியமாய் இதை நினைத்தோம்.

இடையிலொரு இழப்பாக
இடி தாக்க,
இற்றுப்போன கொடிகளாய் மடி சாய்ந்தோம்.
வாழ்வெனும் கடமையை அன்றுணர்ந்தோம்.
மாற்றி எமைத் தேற்றிக் கொண்டு
மாறுதலில் நிலைக் கொண்டோம்.

பாடங்களில் குறியாக,
படிப்புகளோ வெற்றியாக,
பட்ட சுமை பறந்தோட,
பட்டங்களின் சுமையோடு,
புது சுமையாய்
மனசுமையை,
சுமந்துக் கொண்டு
வெளி நடந்தோம்.

வாழ்வெனும் பெருங்கதையில்
புதியதொரு அத்தியாயம்,
வேலைத்தேடி கால் தேய்ந்தோம்.
தேவைகளின் அழுத்தத்தால்
காதலது இருட்டறையில்,
சிறையானது
எட்டிப் பார்க்க முடியாமல்.

பணிகளோ மாலையிட,
கால்கள் அதில் பதிய,
முளைப்பெடுத்தது அருகம்பில்லாய்
காதலது மெதுவாக
எட்டி பார்த்தது சிறையிலிருந்து.

ஆறுதலாய் அணைத்துக் கொண்டோம்
கவலைகளை மறைத்துக் கொண்டு.
காலமது என்று கனியும்,
காத்திருந்தோம் கைப்பிடிக்க.
கன்னியவள் முதிர்ந்தாலும்
காதலோ இளமையாக,
அணையிட்ட நீர் போல,
அலையலையாய் ஆடினாலும்,
பொங்கியெங்கும் சிதறாமல்,
பொருத்திருந்தது காலத்திற்காய்.

ஆண்டவனின் சோதனைகள்
அகன்றது ஒருவாறாய்.
அளவில்லா ஆசையுடன்
அள்ளிக் கொண்டோம் ஒரு நாளில்.
ஆவலுடன் வாசித்த
அனைவருக்கும்
நன்றிகளை நாங்களுரைத்து,
அடுத்ததாய் வாரிசை
காணவே காத்திருப்போம்.

சுபம்! சுபம்!! சுபம்!!! 🙏

--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: