Translate

Showing posts with label சீடனாக ஆசை.. Show all posts
Showing posts with label சீடனாக ஆசை.. Show all posts

Saturday, December 29, 2012

சீடனாக ஆசை.

கவிதைகளாய் வாசித்துக் கொண்டிருந்த உங்களுக்கு ஒரு சிறுக்கதை.

சீடனாக ஆசை.

ஒரு ஊருக்கு அருகில் உள்ள காட்டில் யோகி ஒருவர் தியானம் செய்து வந்தார். அவரின் புகழ் விரிந்திருந்தது. சிஷ்யனாக  அவரிடம் சேர ஆசைக் கொண்டு, குருவே, நான் அனைத்தையும் துறந்து விட்டேன். ஆகவே என்னை தங்களின் சிஷ்யனாக ஏற்று தீட்சை அளிக்க வேண்டும் என கேட்டான்.

அதற்கு, நீ முழுமையான தகுதி அடையவில்லை. மேலும் தகுதியை வளர்த்துக்கொள் என அனுப்பி விட்டார். ஒரு வருடத்திற்கு  பிறகு மீண்டும் வந்த போதும், அதே பதிலை சொல்லி அனுப்பி விட்டார்.  மீண்டும் சில மாதங்களுக்கு பிறகு வந்த போதும், அதையே சொன்னார். அவனுக்கோ பயங்கர கோபம், இருப்பினும் அதை மறைத்துக் கொண்டு,  சிஷ்யனாக என்னை ஏற்றுக் கொள்ளாத வரை இங்கிருந்து நகரமாட்டேன் என சொல்லி, அவர் முனமர்ந்து விட்டான்.  ஆசை, கோபம், பிடிவாதமுடன் திகழும் இவனை காண்கையில், மேலும் ஒன்றைக் கூறினார்.  அப்பா, வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. நீயோ, குடும்பஸ்தனாக திகழ்வதற்கு ஏற்புடையவனாகவே திகழ்கிறாய்.  எம்மிடம் சிஷ்யனாக சேர்வதற்கு உனக்கு தகுதி இருக்கிறதா என உன்னை நீயே பரீட்சித்து (சோதித்து / சோதனை) பார்த்துக்கொள்ள, தேர்வு வைக்கிறேன். அதில் நீ வெற்றி பெறுவதைப் பொறுத்து சிஷ்யனாக சேர்த்துக் கொள்வதைப்  பார்க்கலாம் என சொல்லி,

1) உன் தாயைக் கொலை செய்யவேண்டும்.
2) உன் சகோதரியை மானபங்கபடுத்த வேண்டும்.
3) மது அருந்த வேண்டும்.

இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை செய்து விட்டு வந்து சொல் உன் தகுதியைப்பற்றி எனசொல்லியானுப்பினார்.

சகோதரியை மானபங்கபடுத்து மகாபாவம், தாயைக் கொலை செய்வதோ மகா மகாபாவம், மது அருந்துவது  மட்டுமே யாருக்கும் கெடுதல் இல்லாதது, அதனால் பாவமும் நாம் அடையமாட்டோம் என அவன் நீண்டநேர யோசைனைக்கு பிறகு முடிவு செய்து,  ஒரு மதுக்கடைக்கு சென்று, அந்த யோகியிடம் சிஷ்யனாக சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் மது அருந்த தொடங்கினான்.

போதையோ தலைக்கேற தள்ளாடியவாறு வீடு திரும்பினான்.  அப்போது அவன் சகோதரி குளித்து விட்டு, உடை மாற்ற ஈர உடையுடன் வீட்டுக்குள் சென்றாள். ஈர உடையுடன் சகோதரியைக் கண்டதும், போதையுடன் காமமும் சேர்ந்துக் கொள்ள  சகோதரி என்பதையும் மறந்து, அவள் உடையை இழுத்து மானபங்கம் செய்ய முயன்றான். அவள் கதறி கூச்சலிட,  ஓடி வந்து பார்த்த தாய், அடே பாதகா! என திட்டியபடி, அவனை அறைந்தாள். தடுக்கிறார்களே என்ற கோபத்துடன், அருகில் இருந்த அரிவாளை எடுத்து, தாயென கருதாமல் தலையை வெட்டிக் கொலை செய்தான்.

தாயின் தலை கீழே உருள, சகோதரி அம்மா என்று ஓலமிட, அப்போதுதான் தெளிந்தது அவன் போதை. ஐயோ! தாயைக் கொலை செய்து விட்டோமே. இத்தனைக்கும் காரணம் அந்த யோகி தான் , அவரையும்  கொலை செய்ய வேண்டும் என்று வேகமாக அவர் குடிலுக்கு சென்றான்.  என்னப்பா இரத்தம் சொட்டும் கத்தியுடன் வந்திருக்கிறாய் என்ன விஷயமென கேட்டார்? உங்களை கொலை செய்ய வந்திருக்கிறேன் என்றான். எதற்கென அவரோ அமைதியாக கேட்க,

குருவே, உங்களால் என் தாயையே கொலை செய்து விட்டேன். நீங்கள் வைத்த சோதனைத் தேர்வே  காரணம் என சொல்லி, நடந்ததை முழுமையாக கூறினான். என்னப்பா, உன் தாய் என்கின்றாய், உன் சகோதரி என்கின்றாய், உன்னை நீ நான் என்கின்றாய். அத்தனையும் உன்னிடம் இன்னும் இருக்கும் போது, அனைத்தையும் துறந்து விட்டேன்,  சிஷ்யனாக ஏற்று தீட்சை அளிக்க கேட்டாயே எப்படியப்பா?

அன்று சொன்னது தான் இன்றும் உனக்கு. நீ குடும்ப வாழ்க்கைக்குதான் சரியானவன் என யோகி கூறியதும், ஐயோ, எனது பாவங்கள் போக என்ன வழி என்றான் கதறியபடி. உனது தாய் வயது, மற்றும் அதற்கு அதிக வயதுடையவர்களுக்கு தாயாய் நினைத்து பணிவிடை செய். உன் சகோதரி வயதுடைய பெண்களுக்கு,  சகோதரனாய் முன்னின்று  தேவையான உதவிகளை செய். உழைப்பை மறந்து, உழைத்தாலும் குடும்பத்தை மறந்து, பொறுப்புக்கள் அற்று போதையிலும், மோகத்திலும்  உழல்பவர்களுக்கு பொறுப்புகளை உணர்த்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்து. இதுவே உன் பாவங்களுக்கான பிராயசித்தமாகும் என அருளினார்.

என்ன வாசித்தீர்களா? யோகி கூறியது போல பொறுப்புகள் உணர்ந்து பாவங்களை செய்யாமலும், விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி உதவுவீர்களா?