Translate

Friday, September 21, 2007

வாழ்த்தினோம் உவந்தே.

வெல்லும் வேகம்
வெள்ளம் போல
வென்றது கண்டு
கொண்டது உள்ளம்.
மகிழ்விலே ரத்தம்
உச்சியிலிருந்து
பாதம் வரையும்,
பாயும் நேரம்
தோன்றும் இன்பம்.
உடலே சிலிர்த்து,
கண்ணம் உருண்டு,
முகமும் சிவக்கும்.
கைகளும் முறுக்கி
உதறிக் கொள்ளும்.
வாயும் திறந்து
கீதம் பாடும்.
கால்களும் குதித்து
முரசு கொட்டும்.
தொடர்ந்தே வென்று
உந்தன் பெயரை
நாட்டிக் கொள்க.

ஓ...... வெண்ணிலவே !!

நீ தேய்வதை
பார்க்கும் போது
வருத்தமும்,
நீ வளர்வதை
கானும் போது
மகிழ்ச்சியும்
அடைந்த நான்.
இப்பொழுதோ
தொடர்ந்து வருத்தத்திலே.
ஏனென்றால்
என் பார்வையே
தொலைந்து விட்டதால்.

அறிந்தேன் !!!

விதி தான் நமக்கு
விதித்து இதுவென
விதியை நொந்து
விசனத்தால் மனம்
விதிர்த்திருந்தேன்.

மதியால் வெல்லும்
மதிதான் நமக்கு
மதிப்பைத் தரும்
மதியை உணர்ந்தேன்
மகிழ்வுடன் நானே.

Thursday, September 20, 2007

எல்லாமே காதல்.

அன்பும் ஒரு காதலே.
ஆசையும் ஒரு காதலே.
பாசமும் ஒரு காதலே.
பற்றும் ஒரு காதலே.
நட்பும் ஒரு காதலே.
நாடலும் ஒரு காதலே.
உள்ளத்தைத் தொடும் காதல்.
உயிரையும் கொடுக்கும் காதல்.
உயிரையும் வாங்கும் காதல்.
உற்சாகம் தரும் காதல்.
நீந்த வைக்கும் காதல்.
நீர்த்து போகும் காதல்.
மூழ்கடிக்கும் காதல்.
மூச்சை முட்டும் காதல்.
பொங்கி வழியும் காதல்.
பொல்லா அரக்கக் காதல்.
உறவாட முயலுமே காதல்.
உறவை முறிக்குமோ காதல்.
வாழச் செய்யுமோ காதல்.
வழுக்கிச் செல்லுமோ காதல்.
துள்ளச் செய்யுமே காதல்.
துவளவும் செய்யும் காதல்.
துடிக்க செய்யுமே காதல்.
துன்பத்தையும் தருமே காதல்.
ஆட்டிப் படைக்கும் காதல்.
ஆறா எண்ணக் காதல்.
ஆறுமோ மனக் காதல்.
மறையுமோ வெட்கக்காதல்.
மறைக்குமோ அச்சக்காதல்.
வாய் சொல்லா மனக்காதலை
சொல்லுமோ
கண்கள் காதல்.
அறிய முடியா காதலால்
தவித்தேன்  காதலால்.
அறிந்தாயா  காதலை
உரைப்பாயா  காதலை.

Wednesday, September 19, 2007

நகைக்கின்ற உறவுகள்

ஏக்கத்தின் பிடியிலே நாமிருக்க,
நாட்களோ செல்கிறது மெதுவாக.
மனமோ எண்ணுகிறது விரைவாக.
காலம் கடத்தினேன் உனை நினைத்தே.
மகிழ்ச்சியெனும் மழை வெள்ளம்
மனத்தினிலே சேர்த்திடுவோம்.
ஆர்பரிக்கும் மகிழ்ச்சியைத் தான்
அணைக்கட்டி சேர்த்திடுவோம்.
சேர்ந்திருக்கும் நினைவுகளை
காத்திடுவோம் என்றென்றும்.
இன்பமாய் இருந்திடவே
பாய்ச்சிடுவோம் சிதறாமல்.
இன்றிருக்கும் நிலையினிலே
தொலைப்பேசி உதவியின்றி,
தொடர்புக் கொள்ள வழியின்றி,
தவிக்கின்ற நமைக் கண்டு,
நகைக்கின்ற உறவுகளை,
பொருட்படுத்திக் கொள்ளாமல்,
இணைகின்ற காலம் வரை,
இன்புற்றிருப்போம் இதன் வழியே
இணைப்புகளை இணைத்திருந்து.


Tuesday, September 18, 2007

எரித்து விடாதே.......

ஒத்திகை செய்தேன்
உனைக் கண்டதும் பேச.
ஏனோ தெரியவில்லை
வரத்துடித்த வார்த்தைகள்
தொண்டையுடன் திரும்பியது
மீண்டும் இதயத்திற்கே.
மெய் மறந்தேன்- உன்
புற அழகைப் பார்த்து.
ரசித்திருந்தேன் - உன்
அக அழகை உணர்ந்து.
ஏனோ தவறிவிட்டேன்
எனை அறியச் செய்ய.
கருத்தொன்றை வைத்திருப்பாய்
எனைப் பற்றி.
நான் அறியச் செய்வாயா
மனம் திறந்து.
விருப்பமொன்று இருந்தாலும்
பேசவோ மறுக்கின்றாய்.
அறியாதவளாய் நடிக்கின்றாய்.
வழுக்கித்தான் செல்கின்றாய்.
பட்டியலாய் இருக்குமோ
குற்றங்கள் என் மீதும்.
காதலைச் சொல்லியா..
தவறிழைத்தேன்.
கருத்திருந்தால்
தயங்காமல் சொல்லிவிடு.
காக்க வைத்து
எனை எரித்து விடாதே.
தூக்கிப் போட்டு
எனைக் கொன்று விடாதே.
விருப்பமென்றால்
சொல்லி விடு விரைவாக.
ஊஞ்சலிட்டு ஆட்டிக் கொள்வோம்
நம்மை மகிழ்வாக.

முனகல்கள்

உன்னைக் கண் கொண்டு
காண முடியாதவாறு
என் கண்கள்
ஒட்டப் பட்டுவிட்டன.

உன் மகிழ்விலும், ஏக்கத்திலும்
பங்கு கொள்ள முடியாதவாறு
என் வாய்
தைக்கப் பட்டுவிட்டது.

உன் கண்ணிரை துடைக்கவோ,
பாராட்டவோ முடியாதவாறு
என் கைகள்
கட்டப் பட்டுவிட்டது.

ஆனாலும் உன் சிறு அசைவும்
என் காதுகளை விடைக்கச் செய்து,
மகிழ்விலும், வருத்தத்திலும்
கண்ணீர் கசிவதை
நீ அறிவாயா ?

என் முனகல்கள்
எனக்கே கேட்காத போது
உனக்கெங்கே
கேட்கப் போகிறது ?.

Monday, September 17, 2007

ஓ... நிலவே !!!

ஒளிந்திருந்து பார்க்கிறாயா
படுத்துறங்கும்
என்னவளின்
ஒய்யார அழகை.

உன் ஓராயிரம் ஒளிக்கற்றைகள்
அவள் மெய்யழகை துளாவ,
தவிக்கின்றேன் நான்
உன்னை அனுமதிக்கும்
கூறையின் ஓட்டைகளை
அடைக்க முடியாமல்.


நொடியிலே....

இருக்கும் நீ
இல்லை அடுத்த நொடியிலே.

உன் துடிப்போ
இயற்க்கையின் பிடியிலே.

முடிவின் விளிம்பிலே
மீண்டார் பலர் அருளிலே.

உச்சியிலே இருந்தோர்
தலைகணத்தால்
வீழ்ந்தார் அறியா மடுவிலே.

Saturday, September 15, 2007

கணபதியே ! வரமதை அருள்வாயே .

செய்யும் செயலின்
விரைவைக் கருதி
முடிவதை எடுத்து
கருத்தேனக் கொண்டார்.

கொள்ளும் எண்ணம்
சிதறா வண்ணம்
செயலைச் செய்ய
புத்துருக் கொடுத்தார்.

முதலென வரவே
நலமதை நினைத்து
வலமதைக் கொண்டார்,
நினைத்ததை முடித்தார்.

வாழ்வெனக் கொண்டால்
போட்டியது உண்டு.
வெற்றியதில் அடைய
விவேகமுடன் உழைப்பீர்.

நாடும் வீடும்
நலமது பெறவே
வழிதனை அறிய
பணிவுடன் பணிந்து
கணபதியைத் துதிப்பீர்.

Tuesday, September 11, 2007

மனமிருந்தால்...

ஒப்பந்தமாய் இருந்தேனோ ?
ஓர் பந்தமாய் வந்தாயோ ?
ஒப்பற்று போனேனோ ?
ஒப்பேற்றிக் கொண்டாயோ ?

நாள் பொழுது போகுமோ ?
இனிமை எங்கு போனதோ ?
தடையேதும் ஒன்றுமில்லை,
செயல்படுத்த நினைத்து விட்டால்.


தேடிச் செல்ல தேவையில்லை,
நமக்குள் இருக்கும் அன்புதனை.
வருத்தம் என்றும் வாராதே,
அறிய செய்ய மனமிருந்தால்.

உன்னிடமும்....

உன் வார்த்தையைக் கேட்கின்றேன்
நான் நிசமென நம்புகின்றேன்.
உன் செயலைப் பார்க்கின்றேன்.
பொய்யை உணர்கின்றேன்.
கண்ணால் கண்டதும் பொய்,
காதால் கேட்டதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய்.
விசாரிக்கும் போது
நழுவுகிறாயே வாலைமீனாய்.
வென்று விட்டாய் நீ.
தோற்று விட்டேன் உன்னிடமும்,
தோல்விகளையே சந்திக்கும் நான்.

Monday, September 10, 2007

பாரதியார் நினைவு நாளில் கவிச்சிந்தனை !

சிந்தனையில் சிறுபொழுதே
சிக்கியிருந்த வேலையிலே
நினைவினிலே வந்தாய்.
நினைத்துனைப் பாட
எழவில்லை நாவும்
எழுத்திலேக் கொட்ட
எட்டாக் கனியாய் நீயும்
ஏந்திய கையாய் நானும்.
கவிதைக்கு நீயும் ஒரு அரசன்
கவிதையிலே நானோர் ஆண்டி.
மழலைக்கு இல்லை மாற்று
அறிய செய்தது உன் கூற்று.
ஒன்றா, இரண்டா ஊட்டி விட்டாய்
எடுத்துச் சொல்லி உனைப் பாரட்ட.
உன் வாழ்விலே என்றும் துயரம்
இருப்பினும் கொடுத்தாய் வீரம்.
இன்றும் ஏனோ ஏறவில்லை
என்பதே துயரம்.
நல்லது செய்ய நினைத்திருந்தாய்
நலம்பட வாழ சொல்லிச் சென்றாய்.
நிலைக்கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்
அன்றே வேகா உன் நெஞ்சம்
என்னவாகுமோ நீ இன்று இருந்திருந்தால் !
என் எழுத்திலே வேண்டும்
உம் இதயம்.
உமையின்றி யார் தருவார்
வாழ்விலே சலனம்.
நினைத்துருகி நிற்கின்றேன்
உம் நினைவு நாளிதிலே.
பின் குறிப்பு:: கவி.பாரதியாரின் நினைவு நாள் செப்டம்பர் 11 ம் தேதி.

Saturday, September 8, 2007

விழிகளே ! விழிகளே !!

விழிகளே ! விழிகளே !!
என்றும் நிலைத்திருங்கள்.

மதி இழந்தபோது
சபித்திருப்பேன்,
ஒளி இழந்து போகட்டும்
என் விழிகளென்று.

இன்றோ உணர்கின்றேன்
என்னுயிர் பிரிந்தாலும்,
விழிகளே நிலைத்திருங்கள்
இருவர் வாழ்வொளிப் பெற்றிடவே.

Monday, September 3, 2007

மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !

உன்னை கண்ட
கண்களுக்கு மகிழ்ச்சி
இக்கோலத்தில் பார்த்ததால்.

நாசிக்கும் மகிழ்ச்சி
உன் சுகந்தத்தை
நுகர்ந்ததால்.

உதடுகளுக்கும் மகிழ்ச்சி
உன் மென்மையை
அறிந்ததால்.

உன்னை வாரி அணைத்த
கைகளுக்கும் மகிழ்ச்சி-நீ
நெருக்கத்தைக் காட்டியதால்.

என் மனத்துக்கும்
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி
இத்தனையும்
உணர்ந்ததால்.

முதல் முதலில்.......

எனைக் கண்ட
முதல் நாளை
உணர்ந்திருப்பாய்
நெஞ்சமோ படபடக்க.

என் மீதான
முதல் பார்வையை
பதித்திருப்பாய்
இமைகளோ துடிதுடிக்க.

எனைப் பார்க்க
வந்திருப்பாய்
கால்களோ
பின்னலிட.

என்னிடம்
பேச நினைத்திருப்பாய்
மேலண்ணத்தில் நா
ஒட்டிக் கொள்ள.

இன்றோ
நாம் ஒருவரானோம்
அத்தனையும்
விலக்கி விட்டு.