Translate

Monday, November 24, 2008

ஐயோ.. அப்பாவுக்கு பசிக்குமே..!

அப்பா என்றே,மெதுவாக அழைத்தேன்.
பதிலோ இன்றி, மவுனமே ஒலிக்க,
மீண்டும் அழைக்க தயங்கி நின்றேன்.
தேவையென்ற நிலையில், குரலை உயர்த்த,
'உம்..' என்ற பதிலோ உறுமலாய் கேட்க,
உடம்பிலோ உதறல், நாவிலோ வறட்சி.

அழைக்க வந்தது, மறந்து போக,
இந்த நிலையில் உடனே வந்தது,
அணைத்து கொஞ்சும் அம்மாவின் நினைவு.

அம்மாவின் மறைவு மனத்திலே முட்ட,
காரணம் நானென, அப்பா நினைக்க.

சூழ்நிலை எல்லாம் ஒத்துப் போக,
குற்றவாளியாய் நானும் கூண்டிலே நிற்க,
எண் சாண் உடம்பும் ஒரு சாணாய் குறுக,
விடுதலைப் பெறவோ மனமோ துடிக்க.

வழியோ இன்றி, இதயமோ தவிக்க,
நடந்தவை எல்லாம் நினைவிலே ஓட,
விளக்கங்கள் அனைத்தும், கண்ணீரில் கரைய,

வந்தெனைத் தாக்கிய வார்த்தைகள் யாவும்
உள்ளிலும் வெளியிலும் ஊசிகளாய் குத்த,
ஆறுதல் மருந்திட ஆட்களோ யாருமின்றி,
ரணப்பட்ட மனமோ ரத்தத்தை சிந்த,

என்னைத் தவிர உறவுகளில்லாஅப்பாவை விட்டு
விலகிச் செல்ல ஒப்புதலில்லா மனத்துடன் நானே,

என்றேனும் உணர்வார், நிலைதனை அறிவார்.
என்றென எனக்கு ஆறுதல் கொண்டு,
பாசத்தைக் கூட்டி, மீண்டும் அழைத்தேன்,
உணவையிட்டு பசியைப் போக்க.

இற்று போகா நினைவுகள்!

பார்வை மட்டும்
உனையேத் தொடர,
உயிர் மட்டும்
உடலில் இருக்க,
நினைவுகள் மட்டும்
நீக்கம் அடைந்தால்!
துன்பம் என்ற
உணர்வுகள் இன்றி,
நடக்கின்ற பிணமாய்
நானும் வாழ்வேன்.
ஆனால்,
ஏக்கம் கொண்டு
மனமும் அலைய,
துன்பம் என்ற
உணர்வுகள் தொடர,
மனத்தின் வலிகளை
உணரும் இதயம்
நிலையின்றி துடிக்க,
வழியின்றி திகைத்தேன்
வலிகளை மறக்க.

Friday, November 21, 2008

மாணிக்கப் பாட்டி!

அழைத்து விட்டாள்
உறவு வழி
பேரன் பேத்திகளை.
காணிகளை
பகிர்ந்தளித்தாள்
பேரன்களுக்கு.
நகைகளையோ
வழங்கி விட்டாள்
பேத்திகளுக்கு.
காசு பணம்
அத்தனையும்
அளித்து விட்டாள்.
கையிலிருந்த
ஜோடி வளை
இரண்டைத் தவிர.
விழி மூடும்
தருணம் வரை,
விழி நீரை
சிந்தா நிலை
வைத்திருந்த,
கரம் பிடித்த
மாணிக்கத்தின்
முதல் நினைவான
வளைதனை
தடவி விட்டாள்,
வரிந்தவனையே
தழுவுவதாய் .
வரிந்து கொண்டவளை
வலுவாக கைப்பற்றி,
வருத்தங்கள் அவளடைய
வழிகளைக் கொடாமல்
வளைத்தணைத்தே
வாழ்க்கை தனை
நடத்தி விட்டு,
வின்னுலகம் சென்றவனை
வழித் தொடர்ந்தே,
விரைந்துச் செல்ல
விழிப் பதித்த
நிலையிலிருந்தாள்
வாரிசுகளற்ற
மாணிக்கப் பாட்டியவள்.

ஏனிந்த துன்பம்!

ஒவ்வொரு முறையும் சகோதரர்களும்,அவர்தம் குடும்பமும்,
சகோதரியின் மகனும் வெளி நாட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு
வந்து விட்டு, விடுமுறை முடிந்து திரும்பும்போது வீட்டில்
உள்ளவர்கள் வெவ்வேறு காரணங்களால் கலங்குவது கண்டும்,
சென்ற 16\11\2008 அன்று
எமது சகோதரி மகன் சுபகர் தம்பதியினர்
மலேசியாவுக்கு திரும்பி புறப்பட்டபோது நடைப்பெற்ற நிகழ்வினை
தொடர்ந்து பிறந்தது
இந்த கிறுக்கல்.


ஏனோ துன்பம்
ஒவ்வொரு முறையும்
எங்களை விட்டு
பயணம் கொள்ள,
புறப்படும் நேரம்
துடிக்கும் நெஞ்சம்
கண்களில் நிறையும்.
தொண்டைக் குழியில்
அடைத்தது போன்று (கொண்டு)
மூச்சை முட்டும்.
புறப்பட்ட பின்போ
கானும் நாளை
கணக்கிட துவங்கும்.
மனத்திலும் கணக்கு,
நாட்காட்டி பார்த்து
கண்களில் கணக்கு.
வாயும் முனுமுனுக்க
விரலிலும் கணக்கு.
தவறின்றி இருக்க
தினமும் கணக்கு.
கானும் வரையும்
தொடர்ந்த கணக்கு,
கண்ட பின்னும்
தொடரும் கணக்கு.
எத்தனை நாள்
எம்முடன் இருப்பாய்?
எந்த நாளில்
எமை விட்டு பிரிவாய்?
என்றன போடும்
கணக்குகள் தொடரும்.
மீண்டும்
புறப்படும் நேரம்
துடிக்கும் நெஞ்சம்......

Monday, November 10, 2008

உம்மை யாம் தொடர்கையிலே

எமது தாயின் கடைசி சகோதரியும் எமது சித்தியுமான கோயமுத்தூர்.திருமதி.விட்டோபாய் ரங்கநாதம் அவர்கள் இறைவனடி அடைந்ததை ஒட்டி 03\11\2008 அன்று அவர் ஆத்மா சாந்தியடைய அவர் கமலபாதங்களை நினைவில் நிறுத்தி சமர்பித்த கவிதாஞ்சலி.
************************************************************************************

உதயம் 13\09\1938. மறைவு 03\11\2008.
$$$$$$$$$$$$$$$$$$ $$$$$$$$$$$$$$$$$$$

அணையிலே
தேங்கியிருக்கும்
நீர் போல,
உம் மனத்திலிருந்த
பாசமதை யாமறிவோம்.

மடை திறந்த
வெள்ளம் போல்
ஆர்பரிப்பு ஏதுமின்றி,
பொங்கி வழியும்
பாசந்தனை
உம் செயல்களே!
மென்மையாய்
வெளிகாட்டும்.


ஏக்கங்களும் தாக்கங்களும்
உம்மையும் தாக்கிருக்கும்!
பக்குவமாய் ஏற்றுக் கொண்டு
பக்கங்களைப் புரட்டி விட்டீர்.

வாழ்ந்துத் தான்
முடித்து விட்டீர்,
வழ்க்கையெனும்
நெடுங்கதையை.

பாசத்திற்கு கைமாறாய்
நினைவுகளில் வைத்திருப்போம்.
உங்களை நாங்கள் இழந்தாலும்
உணர்வுகளில் கலந்திருப்பீர்.
உணர்வுகளும்
நாள் ஒன்றில் அற்று விடும்,
உம்மை யாம் தொடர்கையிலே.


பின் குறிப்பு: உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையிலிருந்து கோவை சென்று எமது சித்தி அவர்களின் ஈமச்சடங்கிலே கலந்துக் கொள்ள இயலவில்லை. எமது சித்தி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன், அவர் பிரிவினால் சொல்லொன்னா துயரிலிருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்ககும் எங்கள் ஆழ்ந்த இரங்களையும் வருத்தங்களையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.