Translate

Sunday, September 27, 2015

ஈக்கள் - குறுங்கவிதைகள்

அங்கு

ஆசையாய் நீயிருந்தாய்
உன்னுடன்
நானிருந்தேன்.
ஆசையை ஏன் மறந்தாய்
நானில்லாமல்
போவதற்கு.

===============================

எந்த நேரத்திலும்
குழி வெட்டப்படலாம்
எனக்கு.
வெளியே சென்றுவர
இடஞ்சலாய்.
"சாலையில்"

===================================

ஆழ்ந்த உறக்கத்தில்
அவன்,
கிச்சுகிச்சு செய்து ( மூட்டி )
விளையாடியது
"ஈக்கள்"

============================

கருகுயிலின்
நிறத்தைச் சுட்டி,
எள்ளியாடின
செங்குளவிகளும்
வெள்ளைத்தேள்களும்

===============

ஆடியால் நான் தவிக்க,
ஆடியில் நீ சிரிக்க,
ஆடியெனும் காரணத்தால்
ஆடிபாடி மகிழ்வோடு
தாய் வீடு சென்று விட்டாய்.

ஆடியால் = ஆடி மாதத்தால்
ஆடியில் = முகம் காணும் கண்ணாடி / கண்ணாடி 

Thursday, September 24, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


ஆட்சி செய்யும் அவன் நிழலில்
அண்டியிருக்கும் உம் நிலையில்,
அன்பான வாழ்வுமக்கு
அன்றாடம் நலனோடு,
அனுபவிக்கும் மகிழ்வுதனை
அள்ளித்தர வேண்டியின்று
பிரார்த்தித்தே வாழ்த்தினோம்.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 

1) Sabari Saranya 24/9
2) Ragunath Nagas 24/9
3) Raghavachari Gopalan 24/9
4) Nuthakki Rk 24/9
5) Neethu Prasaad 25/9

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - T.A.P.வரதகுட்டி



வாழ்வெனும் பெருஞ்சுழலில்
போராடிக்கடந்து விட்டீர்,
வெற்றியுடன் அறுபத்தாறை.
கடக்க வேண்டும் ஆண்டுகளினி
நீர் துதிக்கும் இறை அருளால்
வலுவான நலனுடன்,
நிறைவான மகிழ்வுடன்,
சிறப்பான நிலையுடனென
பிரார்த்தித்தே வாழ்த்தினோம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
தலைவர் T.A.P.வரதகுட்டி அவர்களே.

தங்களுடன் என்றும்,
A.M.பத்ரி நாராயணன், சேலம்.
அழைப்பேசி:: 9941476945
Mail: dhava.ambi@gmail.com    



Monday, September 21, 2015

நீங்களும் பிரம்மாக்களே!





கருக்கொள்ளும் எண்ணங்கள்
உருக்கொள்ளும் செயல்விசையாய்.
கற்றுத் தேர்ந்த அறிஞர்களாய்
உயிர் கொடுப்பீர் தெய்வங்களாய் (பிரம்மாக்களாய் )
இயக்கும் விசை பலவற்றை
இணைத்து வைப்பீர் குறியெண் கொண்டே.
சிக்கல்களாய் செயலிருக்கும்
சிந்தனையில் மனமிருக்கும்
முடிவினிலே பொருளிருக்கும்
சிலை வடிவாய் அதுவிருக்கும்.
அத்தனையும் கொலுவிருக்க
கைவண்ணம் அதிலிருக்கும்.
வெற்றி மீது வெற்றிக் கொண்டே

வெல்கவென வாழ்த்தினேன் இன்றே.

#25/06/2009 அன்று, எங்கள் மகள் பணி புரிந்த அலுவலகமான Chennai  "ORACLE"   FAMILY DAY வில், மென்பொறியாளர்களை வாழ்த்திய வாழ்த்து மடல்  

தேன் சுவை


இனிப்பிலே கசப்புணர்வு
கசிந்துவரும் தேனிருந்தால்,
அருகினிலே
வேப்பமரத் தோப்பிருக்கும்.

பன்னீராய் மனம் பரப்பும்
இனிப்புமது கூடியிருக்கும்
ரோசாத்தோட்டம்
அருகிருந்தால்.

பல்சுவை உணர்ந்தாலும்
இனிப்புச்சுவை கூடியிருக்கும்
மலையிலே தானிருக்கும்
மலைத்தேனாய் அதுவிருக்கும்.

தேனின் சுவைகளிலே
கொம்பாய் முன் நிற்கும்
எட்டாத உயரத்திலே
மரத்தின் உச்சியிலே.
அதையே 
கொம்புத்தேனேன்பார். 

அறியா சிறுவனெனக்கு
அறிய செய்ய தெரியவில்லை.
பட்டதை எழுதி வைத்தேன்,

அறிந்தவர் திருத்திக் கொடுக்க.

எழுதிய தேதி21/06/09   

தேர்தல் - குறுங்கவிதைகள்

தேர்தல்

ஓட்டு போடுவது
ஜனநாயக கடமையென
ஊருக்கு சென்று வந்தேன்
இரண்டாயிரம் செலவழித்து.

என் தோழனும் ஓட்டு போட்டான்
இரண்டாயிரம் வாங்கிக்கொண்டு,
ஊருக்கு செல்லாமலே.

-----

தேர்தலுக்கு முன்


வேட்பாளரோ பக்தனாய்
வாக்காளரோ தெய்வமாய்.

-----------

தேர்தலுக்கு பின்

வெற்றிப்பெற்ற வேட்பாளர்
தெய்வமாய்.
வாக்களித்த வாக்காளர்
பலிகளாய்.

----------------


தேர்வானவர்

தன் தேவைகளை
பெருக்கிக் கொண்டார்.
வாக்களர்களின் கண்களை
வாகாய் மறைத்து.

-------------



வண்ணம்

கரை வேட்டிகளோ
வெள்ளை வெளேர்.
கருமிருட்டாய் 

உள்ளிருக்கும் மனம்.

விதைத்தாளோ

ஆணவம் மட்டும் ஆனது
அறிவுக்கண் திறக்கவில்லை.
வயதோ ஆனது
உன் மனமோ வளரவில்லை.

உறவுகளின் தன்மையை
பெண்ணே, நீ உணரவில்ல.
என்றுதான் உணர்வாயோ.
ஏற்றம் நீ அடைவாயோ

உணவிலே உடலது வளர்வது போல்
நஞ்சிலே மனத்தை வளர்க்காதே.
ஓடையாய் உன் மனத்தை எதிர்பார்க்க,
ஒழுகும் பாத்திரமாய் ஆனதேன் ?

குற்றமில்லையோ உன்னை சொல்லி.
உன் வளர்ப்பு அப்படியோ?
அன்னையவள் விதைத்தாளோ / வளர்த்தாளோ
அன்னத்திலே விசவிதையை ஊன்றியவள்

கழியுமோ ?

பால் குடித்த  பாலவயது,
பருவத்திலே பழகத் துடிக்குது.
பக்குவமாய் வளர்ந்திட
பகுத்தறியும் வயதிது.

பாழாய் போன நினைவுகள்
பந்தாடிப் பார்க்குது.
பழுத்த இந்த வயதிலே
பக்குவம் எய்துமோ ?

பாதையாய் இருக்குமோ
பறந்தந்த காலம்.
பாவமென்று பார்க்குமோ
பரிதவிக்கும் இந்நிலையிலே.

பஞ்சனை கொஞ்சல்கள்
பரவசமாய் நெஞ்சிலே.
பழகி ருசித்த நினைவுகள்
பழுதாய் இன்று போனதேன்?

படுத்தது கணக்கில்லை
படுக்கையில் பலமுறை.
பாசியாய் மருந்தெங்கும்
படர்ந்ததே உடலெங்கும்.


படுத்தலாய் இருக்குமோ
பரலோகம் போகையில்.
பரமனடி சிந்தையால்

பாவங்கள் கழியுமோ ?

நான்




சூரியன் உதிக்கிறது
வெளிச்சம் படர்கிறது
கண்ணுக்கு தெரிகிறது.
ஆனால், மனமோ?
இருட்டிலே இருக்கிறது
பாதையின்றி தவிக்கின்றது
அறியாமல் விழிக்கிறது
நிலையின்றி துடிக்கிறது.

பகல் பொழுது கழிந்தது.
பகலவன் மறைந்தது
மாலையும் வந்து
இருட்டும் ஆனது.

உள்ளமுடன் உடலும் சோர்ந்தது.
படுக்கையில் வீழ்ந்தது – ஆனால்
மனதுக்கு உறக்கமில்லை.
வழியும் கிடைக்கவில்லை.

அணுவிலும் அணுவாய்.
அவ்வணுவிலும் துரும்பாய்
அனைத்திலும் நிறைந்திருந்து
அலைக்கழிக்கும் இறைவா!

பட்டமாய் பறப்பேனா?
பாடமாக இருப்பேனா?\
பட்டழிய செய்வாயா?

பாவியாய் பெயரெடுத்து.

என் உயிரே!



அருகிலே இருத்தி (வைத்து)
அணைத்துக் கொஞ்சும்
அன்னையாய் நீ
சகோதரியாய் நீ.
மனைவியும் மகளுமாய் நீ

ஏன் நட்புடன்,
அண்ணனும் தம்பியுமாய் நீ
ஆனால், என்று மாறுவேன்,
நீயாய் நான்?

தெவிட்டா இன்ப தேன்தமிழே. 

ஏனிப்படி?



உள்ளம் நோக துடிக்கிறேன்
உண்மை சொல்லி அழுகிறேன்.
உணர்வுகளை அறியாரும்
உறவினரும் ஏற்காரே.

உற்றுத்தான் பார்க்கிறாய்
உறக்கத்திலிருந்து விழித்தது போல்.
உகுக்கும் விழிநீர் கண்டு
உன் கைகளைக் கொட்டி சிரிக்கின்றாய். 

உன்னிடம் ஏன் அழுதேன்
ஊமையாய் கேட்பாய் என்றா ?
உள்ளது புரியுமென்றா?

உறுதுணையாய் இருப்பாய் என்றா?

ஒரே நாள்


சிந்தனையிலிருந்து மீண்டு
சிலிர்த்தது மனது.
சில்லென்று ஒரு நினைவு,
சிக்கியதை நினைத்து.

ஒரு நாள் அது
ஒன்றாய் இருக்கிறது.
பிறந்தநாள் உனதும்.

காதலால் நம் உறவும்.

Sunday, September 13, 2015

அறியாமல்



எமது துடிப்போசை
நீ உணர்ந்து,
இடைப்பட்டக் காலத்தில்
வலைப்போட்டு பிடித்தாயோ.

பெருமீனிடம் தப்பித்ததாய்
நான் மகிழ்ந்தேன்.
நீ மசால் தடவப்போவதை

அறியாமல். 

நின்று போனால் - குறுங்கவிதைகள்


நின்று போனால்


காலம் தவறின்றி

விரைவாய் கழிய,

வாழ்க்கை அத்துடன்

தேய்ந்து போக,

நினைவுகள் முற்றாய்

அழிந்து போகும்

காற்று நுழைதல்


நின்று போனால்.




அவன்


வாழ்வில்

தர்மவான்.

ஆனால்???

எல்லோரிடமும்

கையேந்தும்

பிச்சைக்காரன்.



போச்சிடா....

தள்ளி வைத்தனர்

சமரசம் பேசிய

‘’உறவினனை’’


சேர்ந்துக் கொண்டனர்

சண்டைப்போட்ட

‘’சம்பந்திகள்’’


புரிஞ்சிகோங்க 

புகழ்ச்சி சொற்களில்
புன்னகை விரியும்.
புகழ்ச்சியின் தொனியில்
உண்மை விளங்கும்.



காவலாய்.

நான் விழித்திருக்கிறேன்
அவர்கள் உறங்கும்போது.
அவர்கள் விழித்திருக்கையில்
நான் உறங்கி போகிறேன்.