Translate

Showing posts with label வில்லங்கம். Show all posts
Showing posts with label வில்லங்கம். Show all posts

Saturday, August 29, 2015

வில்லங்கம்



இதைத் தடவினால்
நரைமுடி இல்லை என்கிறார்
ஏனோ அவர் முடி மட்டும் !
“நரை”

இதை சாப்பிட்டால்
கண்பார்வை கூர்மை என்கிறார் 
ஏனோ அவர் கண்ணாடி மட்டும்
“சோடா புட்டி”

இதை தேய்த்தால்
பற்கள் பளப்பளா என்கிறார்
ஏனோ அவர் பற்கள் மட்டும்
“கரை படிந்து” / “ செயற்கை பற்கள் “

இதை உபயோகித்தால்
சருமம் எவ்வயதிலும் மினுமினு என்கிறார்
ஏனோ அவர் சருமம் மட்டும்
“ களையிழந்து ”


இப்பயிற்சி செய்தால்
நூறிலும் இளமை என்கிறார்
ஏனோ அவர் மட்டும்
“ தளர்ந்தவராய் “

இந்நீர்கருவியின் நீர்
கிருமியில்லா தரத்தில் நூறு என்கிறார்   
ஏனோ அவர் அருந்துவது மட்டும்
‘’ புட்டி தண்ணீர் ‘’

மருத்துவம் செய்துக்கொள்ள
இங்குள்ளதே உயர்வு என்கிறார்
ஆனால் அவர் சிகிச்சை மட்டும்
‘’ மேல் நாட்டில் ‘’

பட்டாசு வெடித்தால்
ஓசான் ஓட்டை என்கிறார்.
ஏனோயில்லை அவர் நினைவில் மட்டும்
‘’ குண்டுகளால் சேதம் ‘’

இலவசங்களை கண்டித்தது
மேடையில் முழங்குகிறார்
ஏனோ அவர் கை மட்டும்
“ மேசை அடியில் ‘’

சுத்தம் சுகாதாரம்
எல்லா இடத்திலும் பேச்சு
ஏனோ அவர் எறியும் குப்பை மட்டும்
‘’ சாலையில் ‘‘

இறைவன் படைத்த நீர்
அனைவருக்கும் பொது என்கிறார்.
ஏனோ அவர் குவளை நீர் தர மறுக்கிறார்
‘’ அண்டை வீட்டுக்கு ‘’

கூப்பாடு போடுகிறார்
குடிநீரில் சாக்கடை என்று.
ஏனோ அவர் சாக்கடை மட்டும்
‘’ ஓடையில் ‘’


இன்னும் ஏதேதோ நீள்கிறது 
இருந்தாலும் மனம் நிறுத்துகிறது. 
எங்கோ இருந்த நினைவுகள் – ஏனோ
உணர்விலே நுழைந்து கேட்கிறது  
நீ செய்வது மட்டும்

‘’ சரியா? ’’