Translate

Showing posts with label போனதெங்கே?. Show all posts
Showing posts with label போனதெங்கே?. Show all posts

Wednesday, January 24, 2018

மறைந்து கொண்ட இடமெங்கே?


மன்னவனே! மன்னவனே!!
மனத்தைக் கொள்ளையடித்து போனவனே.
கொண்டாட வழியின்றி
கொண்டு நீ போனதெங்கே?

மல்லுக்கட்டி முயற்சித்தேன்.
மன்றாடி பார்த்து விட்டேன்.
பறித்துக் கொண்ட பின்னாலே
பறந்து நீ போனதெங்கே?

அறியாத பெண்ணென்னை
ஆழ்த்தி விட்டாய் காதலிலே.
கலந்து விட்ட பொழுதினிலே
கரைந்து நீ மறைந்ததெங்கே?

மலரது செழிப்பாக மலருமுனு
மலர்ந்த பின்னே, மனமும் வீசுமுன்னு
கனவுகளில் மூழ்கியிருந்த நேரமதில்
கலைத்து விட்டு காணாமல் போனதெங்கே?


அடிப்பதெல்லாம் அலைகளோ?
சுழல்வதெல்லாம் புயற்காற்றோ
தள்ளாட்டத்தில் என் மனத்தை
தள்ளி விட்டு மறைந்ததெங்கே?

தெளிவற்ற நினைவாலே
தேள் கொட்டிய நிலையாக,
துடிக்கின்ற மனத்துடன் நானிருக்க,
துண்டித்து நீ பறந்ததெங்கே?

துளாவும் உன் கையெண்ணி
துவளும் எனை நினைத்து
துகித்திருந்த என்னை
துடிக்கவிட்டு போனதெங்கே?

யாரிடம் நான் சொல்வேன்?
எப்படியிதை விவரிப்பேன்?
எண்ணியெண்ணி நான் உருக,
தவிக்க விட்டு போனதெங்கே?


ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்


Saturday, September 16, 2017

காதலது நிசமானால் - போனதெங்கே?




கண்கள் உனது மின்னலடிக்க,
கவிதைகளை நான் வடிக்க 
கண்ணெதிரே வந்தவளே 
கனவாய் மறைந்து போனதெங்கே?

கன்னங்குழிய சிரித்து விட்டு,
கண்ணீரில் மிதக்க விட்டு,
கலக்கத்தில் நான் புலம்ப 
காணாமல் போனதெங்கே?

கஸ்தூரி மனம் போல 
கமழுமந்த உன் வாசம்.
காற்றிலே கலந்தது போல் 
காதலை மறந்து ( துறந்து ) போனதெங்கே?

கலந்துரையாடிய நேரமெல்லாம் 
காதினிலே எதிரொலிக்க,
கண் முன்னே இல்லையெனினும் 
காணுகிறேன் மனத்தினிலே.

கடும் கல்லும் மண்ணாக 
கரைந்து நானும் உனையடைய 
கதை சொன்ன என் பைங்கிளியே 
கவர்ந்து செல் எனை விரைவாக.    



-- 
ஆக்கம் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

#பொருத்தமான புகைப்படம் தேர்ந்தெடுத்து கொடுங்கள் நண்பர்களே....

Tuesday, October 18, 2016

போனதெங்கே? - 11





இறைவனவன் சிலை வடிக்க
இயற்கையாய் அவள் செழித்திருக்க
இல்லாளாய் உமக்கமைய
இழிமகளை நாடி போனதெங்கே?

அவள் ஆசையுடன் காத்திருக்க
அவளின்றி எவளையோ நீ கால் பிடிக்க
அனைத்தையும் நீயுணர்வாய் என்றிருக்க
அறிந்துக் கொள்ளாமல் போனதெங்கே.?

நாடகமாய் அவள் வாழ்க்கை
நடக்கிறது உன்னாலே
நல்லுறவு இருக்கையில்
நாடி நீ போனதெங்கே?

இன்றுடன் முடியவில்லை
இளமையது உன் வாழ்வில்
இதையே கருத்தில் கொண்டு
இவளை விட்டு போனதெங்கே?

--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.
பத்ரி நாராயணன்.
18/10/2016








போனதெங்கே? - 10




ஆசை கனவுகளுடன் கரம் பிடிக்க
அலையும் நிலையுடன் நீயிருக்க
அறுசுவை உனக்காய் இங்கிருக்க
அனுபவம் தேடி போனதெங்கே?

அவளுனக்கு மனவியடா
அவள் ருசி உணர்ந்தாயோ
அனுபவங்கள் தேடி நீ, மனம்
அலைபாய போனதெங்கே?

உற்றவள் உனக்கென
உரியோர் கொடுத்தனுப்ப
உரிமையில்லா இடம் தேடி
ஊர் மேய போனதெங்கே?

அற்புத உறவவள்
அத்தியாய் பூத்திருக்க
அவளை நீ வாட விட்டு
அமிழ்ந்து நீ போனதெங்கே?


--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.
பத்ரி நாராயணன்.

18/10/2016








போனதெங்கே? - 9




உற்சாகத்தில் நீ திளைத்திருக்க
உறக்கமின்றி அவள் தவித்திருக்க
உருகுலைய செய்து விட்டு
உறவே நீ போனதெங்கே?

பொங்கும் உற்றாய் நீயிருக்க
பொசுங்கும் நிலையில் அவளிருக்க
பேதையவள் நிலைகுலைய
போதையால் நீ போனதெங்கே?

கோவலனாய் நீயிருக்க
கண்ணகியாய் அவளிருக்க
#ஊரறிய செய்து விட்டு
உற்றவனே போனதெங்கே?

உரிமையாய் நீயாள
உடையவாளோ ஏங்கியிருக்க
உணர்வுகளை அறியாமல்
உதறி விட்டு போனதெங்கே?


#அவள் உன் மனைவியென ஊரறிய செய்து விட்டு

--
ஆக்கம்
தவப்புதல்வன் @
A.M.
பத்ரி நாராயணன்.

18/10/2016

Saturday, September 17, 2016

போனதெங்கே? - 8



அடுக்கினேன் என்னுள் அழகாக
புரட்டினேன் தினமும் வாசிக்க
எழுத்துக்களால் ஓவியம் நான் வரைய
மகிழ்வுடன் நீயும் உடனிருந்தாய்.

கருத்துருவெல்லாம் உனை காட்ட
மூழ்கிட வைத்தாய் எனை மறந்து.
ஏச்சுக்களும் பேச்சுக்களும் சுட்டெரிக்க
அத்தனையும் சுகமாய் நாம் ரசித்தோம்.

உரைகளுக்கு நாமும் உயிர் கொடுத்து
நினைவுடன் என்றும் உறவாடி,
நட்பெனும் உரிமையுடன் கை கோர்த்து
விழிகளில் தினமும் கதை படித்தோம்.
     
காலடியில் உலகம் சுழன்று ஓட
சுற்றி வந்தோம் நம்மை மறந்து.
சந்திக்கும் நேரத்தில் வாய் திறந்தோம்
தனிமை நிலையில் நம்மை மறந்தோம்.

தூதுக்கு அனைத்தையும் அணுகியபடி 
அந்தியை நோக்கி தவமிருந்தோம்.
மனத்துக்குள் சுமையை ஏற்றி விட்டு
முழுமையாய் மறைந்து போனதெங்கே?

--

ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Wednesday, August 31, 2016

போனதெங்கே? - 7


அலையலையாய் உன் நினைவு
அனைத்திலும் நம் உறவு
அள்ள அள்ள குறையா அன்பிருக்க
அதில் குறை வைத்து போனதெங்கே?


நதி ஓட்டம் அணை தடுக்க
எங்கள் வாழ்க்கை ஓட்டம் உன்னால் தேங்க
உனது வாழ்வு எதிலோ கலக்க - நீயும்
விதியென விடுப்பட்டு போனதெங்கே?

சிருஷ்டித்த நம் காலம்
சிந்தனையில் புரண்டோட,
சிந்திக்க எனை விட்டு
சிதையில் நீ போனதெங்கே?

ஒரு நாளில் கூடி விட்டு
மணி கணக்கில் இருந்து விட்டு
கலைந்த உறவுடனும் நட்புடனும்
மறைந்து நீயும் போனதெங்கே?

அன்று காக்கை கரையும் நேரத்தில்
முன்னோர்களை நினைத்திருப்பேன்
படையல் படைத்து நிற்கின்றேன்
பறந்து நீ போனதெங்கே?
==========================முடிவு

Tuesday, August 30, 2016

போனதெங்கே - 6


நான் சுமந்த சுமையுடன் நீ தோளில் சுமந்தாய்
தலையிலும் தோளிலும் முழு சுமை கொடுத்து
சுமையின் சிரமத்தை
உணர  செய்து
சுமையிறக்கி நீ மட்டும் போனதெங்கே?

உன் பாடு என் பாடு
பிரிக்கமுடியா நம் பாடு
உன்பாடென கூறாமல் - நீ
அத்தனையும் படுயென போனதெங்கே?


அலைக்கடலாய் எண்ணங்கள்
ஆர்பரிக்கிறது நெஞ்சத்தில்
மூச்சடைத்து  நான் தவிக்க
மூச்சை துறந்து போனதெங்கே? 

தழுவும் காற்றும் அனலென காய,
நடுநிசி பொழுதில் குளிர்நீர் தழுவ,
தழுவிய நீரிலும் ஆவி பறக்க,
தனிமையில் விட்டு போனதெங்கே?

Monday, August 29, 2016

போனதெங்கே - 5


எங்கெங்கும் உன் பிம்பங்கள் 
விழியசைவில் மறைகிறது 
உடமைகள் யாவும் உன் ஏக்கத்தில் 
அக்கவலையற்று போனதெங்கே?

விழி கூறும் செய்திகள் அற்று போக,
வின்னோக்கி இருக்கிறேன் திரும்புதல் காண,
விட்டமும் சட்டமும் உன் உழைப்பினைக் காட்ட,
அத்தனையும் விட்டு நீ போனதெங்கே?

சோற்றுக்கைகள் காய்ந்தபடி இருக்க,

மனத்தின் நினைவுகள் உன்னுடன் உலாவ,
ஏக்க மூச்சுகள் பெரிதாய் ஒலிக்க,
இத்தனையும் செய்ய விட்டு போனதெங்கே?

அதிர்ச்சி கொடுப்பாய் மறைந்து நின்று,
அதிர்ச்சி கொடுத்தாய் நிரந்தரமாய் இன்று.
அறிந்து நான் உறைந்து நிற்க, 
அது பொய்யென கூறாமல் போனதெங்கே?

Saturday, August 27, 2016

போனதெங்கே - 4


நீ ருசித்த உணவுகள்
என் நாக்கு மறந்தாலும்
நினைவோடு செய்கின்றேன்
சுவைக்க மறந்து போனதெங்கே?
உன் உணவு தட்டுகளில்
ஈ, எறும்புகள் மொய்த்திருக்க
தயங்குகிறேன் தட்டகற்ற
சேப்பாமல் இடையிலே போனதெங்கே?
உறக்கத்தை நான் மறந்தேன்
உறக்கத்தில் நீ விரைந்தாய்
அவசரமாய் யார் அழைத்தார்
அவருடன் போனதெங்கே?
குடும்பத்தின் நலனுக்காய்
ஆண்டுகள் சில நூறு கேட்டு நீயும், வாழத்தான் கூடாதோ?
எமை சோதித்து போனதெங்கே?

Thursday, August 25, 2016

போனதெங்கே? - 3







விரல்களை மடக்கி விரிக்கின்றேன்

விடுப்பட்ட கணக்காய் தவிக்கின்றேன்

உதவிக்கு நீயும் உடனின்றி
உதறி விட்டு போனதெங்கே?




செல்ல கொஞ்சல்கள் பகிர்ந்ததினால்
செல்லங்கள் செழிக்கும் நிலைக்கண்டோம்
அவை வதங்கி போகும் நிலையில்
உரமான நீ போனதெங்கே?


கிளை விடும் நேரத்தில்

வேர் அழுகி போனது போல், (ஆணிவேர் அறுந்தது போல)

உறவு செழிக்கும் நேரத்தில்

அறுந்து நீ போனதெங்கே?



சூறைக்காற்றில் ஓட்டை விழுந்து

மூழ்கும் நிலை கப்பல் போல்
குடும்பத்தை இயக்கும் மாலுமி நீ

சுக்கானை விட்டு போனதெங்கே?

Monday, August 22, 2016

போனதெங்கே? - 2



ஓரப்பார்வை நான் பார்க்க - உன்
கள்ளப்பார்வையில் களிப்பிருக்கும்
பார்வையை முழுதாய் பறித்தது போல்
காரிருளில் மறைந்து  நீ போனதெங்கே?

உன் இதயத்துடிப்பை என் செவிமடுக்க
என் கூந்தல் மணத்தை நீ நுகர்ந்தாய்.
விரல்களின் விளையாட்டில் நான் சொக்க,
விளையாட மறந்து போனதெங்கே?

உணர்வுகளின் வேக முத்துக்கள்
உடலெங்கும் பூத்து தித்திக்க
களிநடனம் ஆடிய நாட்களை
கனவுகளாக்கி போனதெங்கே?

ஒன்றுக்குள் ஒன்றாய் குடியிருந்தோம்
ஓராயிரம் இரவுகள் களித்திருந்தோம்
குறை உனக்கு ஏதேனும் வைத்தேனோ
வாழ்வை முடித்து போனதெங்கே?

Wednesday, August 17, 2016

போனதெங்கே? - 1



கட்டி அணைக்கிறேன்
கனவுகளில் உன்னை நான்.
 கட்டிய மணாளா
கரைந்து நீ போனதெங்கே?

தனிப்பட்டு குடும்பம் 
தள்ளாடி நிற்க 
தவிக்க விட்டு நீ
தனியாய் போனதெங்கே?

அப்பாவெனும் குழந்தைகளுடன்
அபலையாய் நான் துடிக்க, 
அத்தனையும் துறந்து விட்டு
அமைதியாய் போனதெங்கே?

அலையலையாய் விழிநீரும் 
அருவியாய் வழிந்தோட,
அள்ளி அணைத்து அகற்றி விட
ஆறுதலாய் நீயின்றி போனதெங்கே?