Translate

Showing posts with label ஆண்டவரின் தரிசனம். Show all posts
Showing posts with label ஆண்டவரின் தரிசனம். Show all posts

Thursday, August 27, 2015

ஆண்டவரின் தரிசனம்


ஏதோ சிந்தனை, கலைகிறது காற்றினாலும், அதனால் ஏற்பட்ட சலசலப்பினாலும். ஹாலில் படுத்துக் கொண்டே, தலைக்கு மேல்புறம்  இருந்த காற்றுப்போக்கியில் ( வெண்டிலேட்டர் ) என் கண்கள் பதிகிறது. அங்கு வெளிபுறமிருந்த மரத்தின் கிளைகள் மேலும் கீழும் அசைந்தபடி, இலைகள் சலசலக்கும் காட்சியை வெற்றுப்பார்வையாய் நான் பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் மின்னலடித்தது போன்றதொரு காட்சி.

கிளைகளின் அசைவுகளுக்கிடையே ஏசுபிரானின் திருவுருவம் உச்சியிலிருந்து தொடங்கி பாதம் வரை சிறுகசிறுக தெரிய ஆரம்பித்து முழு உருவமாய் காட்சி தருகிறார், ஒரு குன்றின் மேல் நிற்பது போல, அதை உணர்ந்து மனத்தில் பதித்துக் கொள்ளும் முன்பாகவே, மேலுமிரு திருஉருவங்கள் கண்ணுக்கு புலப்படுகிறது. மூன்று வெவ்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் திரு காட்சியளிக்கிறார்.

1)      பிதாவிடம் இரு கைகளையும் ஏந்தி, மானிடருக்காக யாசிப்பது போலவும்.
2)      கைகளில் ஆட்டுக்குட்டியை ஏந்தியபடி கோலுடனும்

3)      இரக்க பார்வை பார்த்தபடி ஆசிர்வதிக்கும் கோலத்துடனும்  
இப்படி மூன்று திருவடிவங்களில் காட்சியளித்ததும், ஒரு கணம் என்னை மறந்தேன். எங்குமே ஒரு சேர காணக்கிடைக்காத ஆண்டவரின் மூன்று திருகோலங்களை, புகைப்படமெடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமென்று திடிரென மனத்திலே உதயமானதும்,
புகைப்பட கருவியை என் அருகில் மற்றும் அங்கும் இங்கும் தேடுகிறேன். கிடைக்கவில்லை. வீட்டில் உள்ளவர்களிடமும் புகைப்பட கருவியை தேடி எடுத்துத் தர கூறுகிறேன். ஏனிந்த அவசரம் என்ற வினாவிற்கு, விடை பிறகு தருவதாக கூறி, புகைப்பட கருவியை பெற்று, காற்றுப்போக்கியில் காட்சியளித்த ஆண்டவரின்  திரு உருவங்களை, புகைப்படம் எடுக்க முற்படுகிறேன்.
கிளைகள் மேலும் கீழும் அசைகிறது, இலைகளும் சலசலக்கிறது. ஆனால்.... ஆண்டவரின்  திரு உருவங்களில் ஒன்றுகூட, அதிலும் ஒரு பகுதிகூட கண்களுக்கு புலப்படவில்லை. நான் முன்பு படுத்திருந்த கோணத்தில் படுக்கவில்லையோ என இந்த பக்கம், அந்த பக்கமென்று நகர்ந்து, உருண்டு புரண்டு படுத்து பார்க்கிறேன்.  “”ஆண்டவர் தரிசனம்”” மனத்திலே தங்க, விழிகளுக்கு மீண்டும் புலப்படவேயில்லை.  

#இரவின் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டேன்.
#மேலும் நான் கண்ட சில காட்சிகளை எம்மால் விவரிக்க இயலவில்லை. முடிந்தவரை எமக்கு வந்த இக்கனவினை விவரித்திருக்கிறேன்.

  .