Translate

Showing posts with label ஆறடியில். Show all posts
Showing posts with label ஆறடியில். Show all posts

Saturday, November 25, 2017

ஆறடியில்



எட்டுபட்டி எங்கும் உன் பேச்சு
ஏன் எட்டவில்லை அவன் பேச்சு?
அரசனாய் ஆண்ட நாட்களையும்
ஆண்டியாய் வாழும் நாட்களையும்
எண்ணியெண்ணி வியக்கின்றான்
எத்தனையெத்தனை மாற்றமென.

அவன் கண்ணிலே நீயிருக்க,
நித்தமும் காணுகிறான் கனவுகளை.
அருகருகே இருந்தாலும், மனம்
அற்றுப்போனது எதனாலோ?

கட்டியணைக்க முடியாமல்
கனவுகளிலும் இம்சிக்கிறாய்.
கோடானகோடி வழிகளும்,
வழி மறிக்கிறது உன்னிடத்தில்.

விழித்திருக்க முடியாமல்
உடலோய்கிறது நிலையின்றி.
உறக்கத்திற்கும் வழியின்றி
மனம் அலைகிறது ஓய்வின்றி.

பத்தடி அறையை
ஆறடியில் அளவெடுத்தான்.
அறை வெப்பம் குளிர்ந்தது
இயந்திரத்தின் உதவியாலே.

ஆனாலும்
குறைக்கத்தான் முடியவில்லை
அவன் உடல் வெப்பம் அதனாலே.
எரிகிறது மேனியெங்கும்
எண்ணை, தீ எதுவுமின்றி.

முடிவுகளுக்கு வரையின்றி
நீளுகிறது எண்ணங்கள்.
முடிந்திடுமோ இப்படியே
முழுவதுமாய் அவன் வாழ்வு?


--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.🙏