Translate

Monday, April 22, 2013

பூமி அன்னையின் நாள்.


புதுமை எனும் பெயரிலே,
பாழ்படுத்தி விடாமல்,
புனிதமாய் போற்றுவோம்
பூமி அன்னையை என்றுமே.

பூத்துக் குலுங்கி மலர்ந்திருக்க,
புனித நீரும் நிறைந்திருக்க,
புத்துணர்வுடன் வாழ்ந்திருக்க,
பங்கமதை புரிய வேண்டாம்.

இன்றைய நாள்
பூமி அன்னையின் நாள்.
நினைவிலே கொள்வோம்.
நீடித்தே இயற்கை மனம் கமழ
நிலைத்திருக்க செய்வோம்.

மதிய வணக்கம் நண்பர்களே

Sunday, April 21, 2013

பக்கங்கள் 8 மறக்கவியலா நினைவுகள்


வாழ்க்கை பந்தம் 

"எங்கிருந்தோ வந்தாள் 
உன் சாதி, பெண்சாதி நானென்றாள் .
அன்று வரை யானறியேன்,
என்ன தவம் செய்து விட்டேன்"

ஆமாம் அந்த கன்னிப்பெண், எம் பெண்சாதியாய் ஆனாரே அன்று அம்மையார். மாலையிட்ட மங்கையவர், கரம் பிடித்து கைதியானாரோ, பொன்தாலி தானணிந்து.அந்த இராஜராஜேஸ்வரியே வந்தாரோ எம் மனைவியாய் அவரும். துணைவியும் தாங்க... ( இப்படி சொன்னால் அர்த்தம் அனர்த்தமாகிடுமோ?  ஹா.. ஹா.... ஹா. ) 

எமையும் சுமந்தார்,
கருக் கொண்டு குழந்தைகளையும் சுமந்தார்.
வீட்டு பொறுப்பையும்  சுமக்கின்றார்.
வாழ்க்கையை சுமக்கின்றார்.
தன்  சுகங்களை நினைவிலே சுமந்தபடி. 

~~~~~~~~~~~~~~~~~~~
பெண் பார்த்த படலம் 
~~~~~~~~~~~~~~~~~~~~

மெதுவாய் நான்,
பின்னோக்கி ஏறினேன்.
முன்னோக்கி நுழைந்தேன்.
மாப்பிள்ளை இருக்கை,
விரைந்தனர் உதவ,
மறுத்தேன் தடுத்து,
வந்தாள் பூங்கொடியாய் 
வணங்கினாள் பொதுவாக,
அமர்ந்தாள் காட்சியாக,
தலைக் குனிந்தவளாய் அவள் 
ஓட விட்டேன் பார்வையை,
அவள் விழி மீளவில்லை 
தரையிலிருந்து மேல் நோக்கி.
நினைத்துக் கொண்டேன் அன்று 
பலி ஆடு, நானா? அவளா?


தீரவில்லை இன்றும் அது.
தீராது என்றும் அது.


முடிச்சிட்ட நேரமுடன் 
முடிந்து போன கதையிதுனு,  
முத்தாப்பாய் சொன்னீரோ  
முடிவுக்கு யான் விரைய.
~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுவையாய் உணவிட்டார் சுகமாய் யாமிருக்க.
தாயாய் ஆனாரே நோய்வாய் படுகையிலே.
சீராட்டி விடை புரிந்தார் சிசுவாய் எமக்கூட்டி.
தொட்டிலாய் எமை சுமந்தார் தாயுள்ளம் கொண்டவராய்.
கைமாறாய் எதை செய்தேன் கையறு நிலையினிலே.

பிறவியொன்று தானிருப்பின்,
அவரை சுமக்கும் தாயாக யானிருந்து,
சீராட்டி வளர்த்திடவே, சிற்றுள்ளம் குளிர்ந்திடவே,
பொட்டிட்டு, பூ வைத்து, பொன் மாட்டி அழகு காண வேண்டும்.
ஆவி பொருள் அத்தனையும், அவருக்கே அர்பணிக்க, 
அருள வேண்டி பிரார்த்திப்பேன் இறைவரிடம்.
பட்ட கடனை அடைக்க அல்ல,
பட்ட வேதனையை யானறிய,
சிறைக் கொண்ட நாளதுவும் கரைந்தது வருடங்களாக.
ஆண்டுகளோ முப்பத்தி இரண்டிலிருந்து அடுத்ததற்கு அது விரைய,
யாம் நகர, அவரோ எம்முடன் அடி வைக்க,
தொடரும் பயணமது இலக்கை நோக்கி அதன் வழியே.


முடிக்கும் முன்னே:--

 மாலை சூடிய நாளில் மணாளனாய் .



மாலையிட்ட மங்கை எங்கே? கேள்விக்கணைகள் உங்களிடமிருந்து தொடருமுன்னே,  பதிலுரைத்து விடுகிறேனே.

கருப்பு கருப்பு தான்... புடிச்ச கலரு கருப்புதான். புரிஞ்சிக்காம, வெள்ளையாய் வெளிச்சம் போட, வெள்ளையடித்து, அழகு பார்த்து, வெண்ணிலவாய், வெண்புறாவாய் தேவதையை வெளிக்காட்ட, எம் சகோதரிகள் முயற்சிக்க, ஐயோ வேண்டாமே இதற்குமேலே......          போட்டு விட்டேன் இடையிலே கத்திரியை (புகைப்படத்தில் தாங்க.)



அகிலாண்ட நாயகன் குடிக்கொண்ட 108 தளங்களில் திருபதி திருமலைக்கு அடுத்ததாய் தமிழ்நாடு சேலம் சின்ன திருபதி கோவிலில் குடிகொண்டு அருள் புரியும் ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாளை, உகாதித் திருநாளில் தரிசிக்க சென்ற போது






Saturday, April 20, 2013

உதிர்ந்த பாகமாய்....




திருத்தி விட உறுதி எடுத்தேன் 
திருடனான உனை.
திருடி விட்டாயே ஒரு நாள்  
திருமணம் பெயரில் எனை.

மாலையிட்டாய் ஒரு நாள் 
மகிழ்ந்தேனே அந்நாள்.
நீ திருந்தியதாய் எண்ணி.
நான் திருத்தியதாய் நினைத்து.

போகலாம் ஊரை விட்டு,
தொலைக்கலாம் உறவை என்று,
கூடலில் குளிர்வித்தாய் 
குளிர்ந்தேனே கூடலால் உடலுடன் குரலிலும்.

சமரச வாழ்வுடன் 
சாதிக்க நினைத்து 
சம்மதித்தேன் தயக்கமின்றி 
சாதனை செய்ய எண்ணி.

தொலைத்து விட்டு வந்தேன் 
ஊரையும் உறவையும். 
புரியாமல் போனது 
தொலைப்பதற்கு மேலும் உள்ளதென்று.

சில நாள் கழித்து புரிந்தது 
எனையும் விற்று விட்டு 
நீயும் தொலைந்து விட்டாய்,
நானும் தொலைத்து விட்டேன் என்று.

காத்திருக்கிறேன் நான் 
பேராசையுடன் (வேதனையுடன்) எதிர் நோக்கி.
யாரேனும் மீட்பார்களா? - நான் 
உதிர்ந்த பாகமாய் ஆகுமுன்னே.

Sunday, April 14, 2013

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2013 -(2)

இனிமையாய் நாட்களும், எளிமையாய் கடக்க,
புத்துணர்ச்சி கொடுக்கும் புதுமையான நிகழ்வுகள்.
அத்தனையும் பாடங்களாய் அனுபவம் கிடைக்க,
சுவாசிக்கும் நினைவுகள் சுகந்தமாய் பரவ,
இயம்பும் சொற்கள் இனிதாய் விளங்க.
இயங்கும் வாழ்க்கை எல்லையின்றி விரிய
நாடும் உள்ளங்கள் நற்மொழி பகர.
நடப்பவை எல்லாம் இடையூறின்றி,
செம்மையாய் தொடர்ந்து செவ்வனே முடிய,
பணிதல்கள் யாவும் பல்வேறு வழியில்
நினைவுகள் முழுவதும் முற்றற்று நிலைக்க,
பகிர்ந்தோம் வாழ்த்தை வெற்றியதில் திளைக்க.





அன்பு உள்ளங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.





http://www.facebook.com/photo.php?fbid=570103689695944&set=a.118822278157423.8875.100000889537867&type=1&theater&notif_t=photo_comment

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2013






ஆண்டுகள் ஒவ்வொன்றாய்  பல கடந்து போகையிலும் 
புதிதாய் ஒன்று பிறக்கையிலும், கொள்கைகள் இதுவென்று 
சத்தியங்களாய் உருகொடுத்து சபதங்கள் பல செய்வோம்,
குறிகோள்கள் பல கொள்வோம். உறுதிகள் பல எடுப்போம்.

உள்ளபடி அத்தனையும்  ஆழ்ந்த உறக்கத்திலே, 
கும்பகர்ணனாய் வீழ்ந்திருக்க.
ஓ.. அவனும் தான் விழித்திருப்பான், 
மாதம் ஆறு முழுதிலுமே..
அதுவுமில்லை நம்வாழ்வில்.
உணர்வுகளுக்கு விழிப்புமின்றி, 
கழிகிறது ஒவ்வொன்றும் முழுதாக.
உறக்கம் களைந்த சிறு பொழுதினிலே,,
தமிழ் புத்தாண்டு நெருங்கிருக்க,
தாங்கொண்ணா மகிழ்வுடனே, 
தங்கத்தட்டில் உமை இருத்தி 
தாய் தமிழால் நாம் உறவாடி,
நலம் பயக்கும் செயல்களை. 
நாடியதை முடித்திடவே,.
உறவுகளை புதிப்பிப்போம், 
புது வாழ்வாய் சீரமைப்போம்.

புது ஒளி நம் வாழ்வில் நிலையாய் புகிந்திடவே,
தமிழன்னை அருள் வேண்டி,
தமிழ்  புத்தாண்டில் வாழ்த்திடுவோம் 
வாழியே நலமும்,வளமும் பெற்றென்று.


அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .






Wednesday, April 10, 2013

பாச உயிருக்கு நினைவுகளால் சமர்ப்பணம்.



சாபமதை பெற்றிடவே அஞ்சியவனாய் யமனனவன்,
அனுப்பி வைத்தானோ சோதிடன் ஒருவனையே? 
(வந்தானோ யமனவனே, சோதிடன் உருக்கொண்டு.)

வித்தகனாய் செதுக்கி வைத்தான் பிரம்மனவன்.
கருஞ்சிலையாய் மின்னினாளே அழகு பதுமையாயவள் .

இரும்பிதயம் கொண்டவர்களையும்  கவர்ந்தாளே தன்  செயலால்,
ஆனாலும் துருப்பிடித்துக் கொண்டதே அவர்களிதயம்.

விருந்தோம்பலை கண்டவரும், விருந்தினை உண்டவரும் 
உருகித்தான் போனாரே, இவள் காட்டிய உபசரிப்பில்.

வந்த சில நாளில் "மகாலஷ்மி" ஆனவளோ  
தீய்ந்த பின்னே "சனிப்பீடை" ஆனாளே.

இரட்டை நாக்கு கொண்டவர்களின் 
வாய் கொள்ளா வார்த்தைகளோ   
தீ துண்டங்களாய் வெளி வந்து விழுந்ததே,.

வீட்டை விட்டு போனதில்லை, 
விபசாரியென பெயர் கொடுத்தார்.

தீயிட்டு முடித்தனரே, அவளை சடலமாய் பார்த்திடவே.
விழுக்காடு நூறைத்தோட மகிழ்ந்திருக்கும் அவர் கல்நெஞ்சம் நிறைவாக.

சீதையை வாங்கிக் கொண்டாள், பூமித்தாய் வாய் பிளந்து.
மீண்டுமவளோ  பூசிக்கொண்டாள் திருநீறாய் இரண்டு முறை.

சுட்ட பின்னும் திறக்கவில்லை அவள் வாயை,
சுடுகாடு போகும் நிலையிலும்.

பெற்ற உள்ளம் பரிதவிக்க,
பார்த்த கண்கள் பற்றியெரிய,

நெற்றிக்கண் இருந்திருந்தால்,
புகுந்த வீடே பொசுங்கி இருக்கும் அவளைப்போல.

என்னம்மா நடந்தது? கலங்கியபடி,
வளர்த்த உயிர் அதிர்ச்சியாய் கைப்பிடிக்க,

ஈன்றெடுத்த பிள்ளைப் பாசம் 
அவள் வாயைக் கட்டி வைக்க,

உள்ளத்து இரணத்தை விட சிறிதாக உணர்ந்தாளோ ,
முழுக்க தீப்பட்ட உடல் ரணத்தை.

வேண்டாம் அப்பா, என்னுதிரம் அங்கிருக்கு,
வாழட்டும் வளரட்டும் நலமாக என்றபடி,

சிறிதாய் வாய் திறந்தவளோ, விழிநீர் சிறிதும் சிந்தாமல்,  
விழிகளை நிலைத்தபடி, தலை சாய்த்தாள் 
இப்புவியை விட்டு பிரிந்தவளாய்.

முடிந்ததே அவள் வாழ்வு, 
முழுமையது அடையாமல்.

அழகாக நடைப்பயின்றாள், - தன் 
அவல வாழ்வு யாருக்கும் காட்டாமல்.

சாட்சிகள் இல்லையெனினும், 
இறைவனே சாட்சி என்பார்.

அரசனவன் அன்றே கொல்வான் 
இறைவனவன் நின்று கொல்வான் 
அன்றொரு நாள் உரைத்து சென்றார்.

இன்றுவரை ஏனோ காணவில்லை.
தண்டனை கிடைந்ததாய் தெரியவில்லை.

நினைவுகளுக்கே வலியம்மா,
என்று அதை காண்போமென்று.





பி.கு: சுமார் 20 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்.சமிப நாட்களில் ஏனோ அலைக்கழிக்கிறது அவள் நினைவு. அவள் நினைவுகளுக்கு எம்மால் முடிந்த சிறிய சமர்ப்பணம்.

தவப்புதல்வன்..

உன் தாயும் பெண்தானடா!



காதலியாய் நினைத்துக் கொண்டு, காமத்தில் எண்ணம் கொண்டு,
கன்னியவளைக்  காதலித்தாய். காதலோ ஒருதலையாய் ஆகிவிட,
கர்ஜித்ததோ உன் மனமும், கற்பழித்துக் கொன்றுவிட.

கந்தக அமிலத்தில் உருக்குலைக்க நினைத்தாயோ?
   காட்சிப்பொருளாய் மாற்றிவிட துணிந்தாயோ?
கயமை அதுவென நினைவிலே உறுத்தாமல்,
   கண் மறைத்ததோ உன் உணர்ச்சி?.
கடமைகளை நீயும் மறந்து போக,
   கண்டந்துண்டமாய் அவளும் சிதைய,
கடும் சிறையில் நீ தனித்திருக்க,
   கடும் உளைச்சலில் குடும்பமோ மூழ்கியிருக்க,
நிர்கதியாய் போனதே, உன்னை வளர்த்த குடும்பமது.

கடற்கரையில் இணையாக, கலகலப்பாய் மகிழ்வோடு,
    கதைகள் பல கதைத்தபடி, காலமெல்லாம் இன்பமென,
கண்ட உன் கனவுகளோ, காற்றிலேஅநோப்பி விட்டாய்,,
   காமத்தின் வெறியாலே,  கண்மூடிய நிலையாலே, 
அழகு பதுமை பிணமாக, குடும்பமோ சோகத்தில் தள்ளாட,
    கரையுமே உன் வாழ்க்கை, காலமெல்லாம் நடைப்பிணமாய்..

காதலித்தேன் என்றொருவன், உன் தாயை கொன்றிருந்தால்,
     உன் பிறப்பு ஏதடா,பூமித்தாய் மடியினிலே?
காதல் என்றவுடன், கண்டவனிடமும் அனுப்பி வைப்பாயோ?
    கட்டில் ஏற்றிவிட துடிப்பாயோ, கன்னியவள் உன் சகோதரியை?

குழந்தை கூட விரும்பும் பொருளை,
   மறைத்து வைக்கும் எடுத்துக் கொண்டு.
இல்லையென்று போனாலோ அழுதுதான் கதறுமது,
    உனைப்போல சிதைக்கவே நினையாது என்றுமேயது.
கண் விழிக்கா உன் அறிவாலே, கண் கேட்ட பின்னாலே,
   கதிரவனின் ஒளிக் காண, கடுந்தவத்தின் பயனேது?






--
இப்படிக்கு
A.M.பத்ரி நாராயணன்.

Thursday, April 4, 2013

முத்தமிட்ட கைகள்




கணக்கற்ற கவிப்புலிகள் புவியிலே நடமாட,
   அஸ்வமேத யாகமென கவிக்குதிரை ஓடவிட்டேன்.

வேகமாய் ஓடிடவே, அன்பாய் நீங்கள் தூண்டி விட,
  கரும்முகிலோ எமைக் கட்டிலாய் தாங்க,

விண்ணிலே வலம் வந்தேன், வேகமாய் புவி சுற்ற.
   கடும் புயலாய் இல்லாமல், வசந்தகாற்றாய் நீர் இருக்க,

அற்புதக்காட்சிகளை விழி மலர, நினைவுகளில் பதித்தபடி,
   உலகையே சுற்றி வந்து, உயர்வை யான் அடைவேனோ?

எண்ணத்தின் ஓட்டமோ, எழுத்திலே எதிரொலிக்க,
   கருத்துகளில் கண் விழித்தேன், கனவுகளில் யான் இருந்து.

இதமான பொழுதினிலே, முத்தமிட்டதாய் உணர்கின்றேன்,
    கருத்திட்ட உம் கைகள், தட்டிக் கொடுத்த போதெல்லாம். 


உங்கள் 
தவப்புதல்வன்.
A.M.பத்ரி நாராயணன்.



** இதை வாசிக்கின்ற நண்பர்கள், தங்கள் பக்கத்தில் பதிவிடுவதுடன், தங்கள் நண்பர்களுக்கும் இணைப்பு இடும்படி (Please  share and also tag ) அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உலகில் வாழும் தமிழர்கள் அனைவரிடமும் இக்கவிதை மூலம் சென்று வர நினைக்கின்றேன். தங்களின் அன்பான ஆதரவு கிடைக்குமென நம்புகிறேன். இனிய வாழ்த்துக்கள் நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்


Muththam itta kaikal.

Kanakkatra kavippilikal, Puviyile nadamada,
  Ashwamedha yakamena Kavik kudhirai oda vitten.

Vekamay odidave, Anbay ningal thoondi vida,
  Karum mukil megamo, Kattilay emai thanga,

Vinnile valam vandhen, Vegamay puvi sutra,
  Kadum puyalay illamal, Vasandha katray nir irukka,

Arpudha katsikalai, vizi malara, Ninaivukalil padhiththapadi,
  Ulakaiye sutri vandhu, Uyarvai yan adaiveno?

Ennaththin Ottamo, Ezuththile edhirolikka,
  KaruththukaLil kan viziththen, Kanavukalil yaan irundhu.

Idhamana pozuthinile, Muththam ittadhai unarkinren,
  Karuththitta um kaikal, Thattik koduththa podhellam.

Loving,
Dhavappudhalvan
Badri Narayanan A M


**Beloved ones who read my poem!!! Please share the poem in your page if you like it J, and also tag your friends coz I wish to meet all Tamilians all over the world :O… Will you fulfill my wish???

Wednesday, April 3, 2013

வாய் பேசாதோர், காது கேளாதோர் தேர்தலில் போட்டியிட சட்டம்



தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மாற்றுத்திறனாளிகள், மூன்று சதவீதம் [3%] பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், உயர் கல்விக் கற்றவர்களாகவும், கருத்துப் பரிமாற்றத்தில் வல்லவர்களாகவும் உள்ளனர்.   

[* அப்படியா? அவ்வளவு தூரம் வாய்ப்புகளும், வசதிகளையும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இந்திய மற்றும் தமிழக அரசுகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதா!!!!!!! ]   
வாய் பேசாதோர், காது கேளாதோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாமல் இருந்தனர். எனவே இவர்களும் போட்டியிட ஏதுவாக, 1994ம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37 – 3அ மற்றும் 38 – 3அ, ஆகியவற்றை திருத்தம் செய்து, 2012 நவம்பர் 16ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மானிய கோரிக்கையில் அரசு தெரிவித்து உள்ளது.

·         அப்பாடா...! இப்போது சட்டத் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எப்பொழுது நடைமுறைக்கு வருமோ?

செய்தி:- காலைக்கதிர் நாளிதழ் ( 02/04/2013)
·          
·         வாய் பேசாதோர், காது கேளாதோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக சட்டத் திருத்தம்  செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சார்பில்
எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.