Translate

Wednesday, April 10, 2013

பாச உயிருக்கு நினைவுகளால் சமர்ப்பணம்.



சாபமதை பெற்றிடவே அஞ்சியவனாய் யமனனவன்,
அனுப்பி வைத்தானோ சோதிடன் ஒருவனையே? 
(வந்தானோ யமனவனே, சோதிடன் உருக்கொண்டு.)

வித்தகனாய் செதுக்கி வைத்தான் பிரம்மனவன்.
கருஞ்சிலையாய் மின்னினாளே அழகு பதுமையாயவள் .

இரும்பிதயம் கொண்டவர்களையும்  கவர்ந்தாளே தன்  செயலால்,
ஆனாலும் துருப்பிடித்துக் கொண்டதே அவர்களிதயம்.

விருந்தோம்பலை கண்டவரும், விருந்தினை உண்டவரும் 
உருகித்தான் போனாரே, இவள் காட்டிய உபசரிப்பில்.

வந்த சில நாளில் "மகாலஷ்மி" ஆனவளோ  
தீய்ந்த பின்னே "சனிப்பீடை" ஆனாளே.

இரட்டை நாக்கு கொண்டவர்களின் 
வாய் கொள்ளா வார்த்தைகளோ   
தீ துண்டங்களாய் வெளி வந்து விழுந்ததே,.

வீட்டை விட்டு போனதில்லை, 
விபசாரியென பெயர் கொடுத்தார்.

தீயிட்டு முடித்தனரே, அவளை சடலமாய் பார்த்திடவே.
விழுக்காடு நூறைத்தோட மகிழ்ந்திருக்கும் அவர் கல்நெஞ்சம் நிறைவாக.

சீதையை வாங்கிக் கொண்டாள், பூமித்தாய் வாய் பிளந்து.
மீண்டுமவளோ  பூசிக்கொண்டாள் திருநீறாய் இரண்டு முறை.

சுட்ட பின்னும் திறக்கவில்லை அவள் வாயை,
சுடுகாடு போகும் நிலையிலும்.

பெற்ற உள்ளம் பரிதவிக்க,
பார்த்த கண்கள் பற்றியெரிய,

நெற்றிக்கண் இருந்திருந்தால்,
புகுந்த வீடே பொசுங்கி இருக்கும் அவளைப்போல.

என்னம்மா நடந்தது? கலங்கியபடி,
வளர்த்த உயிர் அதிர்ச்சியாய் கைப்பிடிக்க,

ஈன்றெடுத்த பிள்ளைப் பாசம் 
அவள் வாயைக் கட்டி வைக்க,

உள்ளத்து இரணத்தை விட சிறிதாக உணர்ந்தாளோ ,
முழுக்க தீப்பட்ட உடல் ரணத்தை.

வேண்டாம் அப்பா, என்னுதிரம் அங்கிருக்கு,
வாழட்டும் வளரட்டும் நலமாக என்றபடி,

சிறிதாய் வாய் திறந்தவளோ, விழிநீர் சிறிதும் சிந்தாமல்,  
விழிகளை நிலைத்தபடி, தலை சாய்த்தாள் 
இப்புவியை விட்டு பிரிந்தவளாய்.

முடிந்ததே அவள் வாழ்வு, 
முழுமையது அடையாமல்.

அழகாக நடைப்பயின்றாள், - தன் 
அவல வாழ்வு யாருக்கும் காட்டாமல்.

சாட்சிகள் இல்லையெனினும், 
இறைவனே சாட்சி என்பார்.

அரசனவன் அன்றே கொல்வான் 
இறைவனவன் நின்று கொல்வான் 
அன்றொரு நாள் உரைத்து சென்றார்.

இன்றுவரை ஏனோ காணவில்லை.
தண்டனை கிடைந்ததாய் தெரியவில்லை.

நினைவுகளுக்கே வலியம்மா,
என்று அதை காண்போமென்று.





பி.கு: சுமார் 20 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்.சமிப நாட்களில் ஏனோ அலைக்கழிக்கிறது அவள் நினைவு. அவள் நினைவுகளுக்கு எம்மால் முடிந்த சிறிய சமர்ப்பணம்.

தவப்புதல்வன்..

No comments: