Translate

Friday, March 17, 2017

வங்கி கடன் பெறுவது எப்படி?

இன்றொரு தகவல் - வங்கி கடன் பெறுவது எப்படி?

Yalini Sree:
 தொழில் தொடங்க கடன் எந்த வங்கியில் கிடைக்கும்?

Dhavappudhalvan Badri Narayanan A M:
1) கிராம, நகர கூட்டுறவு வங்கிகள், தேசியயுமையாக்கப்பட்ட வங்கிகள், சிட்கோ எனப்படும் சிறுத்தொழில் வளர்ச்சி வங்கி, டிக் எனப்படும் மாவட்ட தொழில் வளர்ச்சி வங்கி, கிராம விவசாய கடன் வங்கி மற்றும் பல தனியார் வங்கிகளும் கடன்கள் வழங்குகின்றன.

கேட்கப்படாத கேள்விகளுக்கு சில விளக்கங்கள்:

1) முதலில் என்ன தொழில் தொடங்கப்போகிறோமென முடிவு வேண்டும்.

2) அதற்கான முதலீடு எவ்வளவு தீர்மானிக்க வேண்டும்.

3) தொழிலறிவுக்கான சான்று. அதாவது படிப்பு அல்லது அனுபவம். அதற்கான சான்று. பெட்டிக்கடை வைக்க இது தேவையில்லை.

4) ரூபாய் 20,000/= ( இருப்பாதாயிரம் ) வரை ஜாமீனோ, முன்வைப்பு தேவையில்லை. அதற்கு மேற்பட்ட கடன்களுக்கு நாம் கடனுக்கு அணுகும் வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு ( நிபந்தனைகளுக்கு ) உட்பட்டு நடக்க வேண்டும்.

5) பெட்டிக்கடைக்கு, பொதுவிடமெனில், அரசு அனுமதியும், வாடகையிடமெனில் வாடகை ஒப்பந்த சான்றும் இருக்க வேண்டும். சிறு சுயத்தொழில் வீட்டிலேயே எனில் சொந்த வீடாக இருந்தால் வீட்டு வரி சான்றும், வாடகை வீடெனில் வாடகை சான்றுடன், உரிமையாளர் ஒப்புதல் சான்றும் தேவைப்படும். சிறு தொழிலெனில் அரசு ஒப்புதல் சான்றுடன், வாடகை இடமெனில் வாடகை சான்றுடன், உரிமையாளர் ஒப்புதல் சான்றும் தேவைப்படும்.

6) ரூபாய் 20,000/= ( இருப்பாதாயிரம் ) க்கு மேற்பட்ட தொகையெனில் குறைந்தபட்சம் 15% சதவிகிதம் நாம் முதலீடு செய்ய வேண்டும்.

7) சில தொழில்களுக்கு தேவையான கடன் தொகையை சில வங்கிகளில் பிரித்து வாங்க வேண்டிய நிலையும் ஏற்படும். உதாரணமாக தொழில் உபகரணங்களுக்கு ஒரு வங்கியிலும், மூலப்பொருட்களுக்கு ஒரு வங்கியிலும் வேறு சில நிகழ்வுகளுக்கு மற்றொரு வங்கியிலும் கடன் பெற வேண்டியிருக்கும்.

8) எத்தனை வங்கிகளில் கடன் பெற்றாலும் அந்தந்த வங்கிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாம் முன் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

9) வங்கிகளின் கடன் தவணைகளை குறிப்பிடும் தேதிகளில் தவறாமல் செலுத்தி வந்தால் அபராத வட்டிகளை தவிற்கவியலும். சலுகைகளிருப்பின் அனுபவிக்கயியலும்.

10) எக்காரணத்தைக் கொண்டும் கடன் தள்ளுபடியாகும் என எதிர்பார்ப்பதும், செலுத்தாமலிருப்பதும் தவறான வழக்கமாகும். உங்களிடம் கடன் வாங்கியவர் கொடுக்காமலிருந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதுபோல் தானே வங்கி கடன்களும்.

11) தொடங்கவிருக்கும் தொழில் வாங்கி விற்பது என்பதாயின் கடன் பெற்ற நாளிலிருந்து வட்டி கணக்கிடப்படுவதுடன் தவணைகள் குறிப்பிடும் காலத்திற்கு செலுத்த வேண்டிய நிலை ஆரம்பமாகிவிடும்.

12) உற்பத்தி சார்ந்த தொழிலானால் தொழில் தொடங்க குறிப்பிட்ட காலத்திற்கு பின் கடன் தவணை செலுத்த வாய்ப்பு கிடைக்கும். கடன் தொகையும் தேவைக்கேற்ப அவ்வப்போது வழங்குவார்கள்.

13) அரசுகளின் கடன் மானியம் இருப்பின் வங்கி கடன் கணக்கு முடியும் சமயத்தில் தான் சரி செய்து கடன் கணக்கை முடிப்பார்கள். மானியத்திற்கு வட்டி கணக்கிட மாட்டார்கள்.

14) ஆரம்பத்தில் கடன் தவணையை முழுமையயாக செலுத்தயியலாவிடின் கூட, கட்டக்கூடிய தொகையை தவனைத் தேதி தவறாமல் செலுத்துவதுடன், தொழில் வளர்ச்சி அடைய அடைய கடன் தவணையை கூடுதலாக செலுத்தி கடன் அடைத்து வந்தால், அத்தொழிலை விரிவுபடுத்த முற்படும்போது, முன் கடன் கொடுத்த வங்கியிலேயே இலகுவாக (ஈசியாக) கூடுதல் கடன் பெறவியலும். நீங்கள் தொழிலிலும், வாழ்விலும் உயர்வடையாவுமியியலும். வேறு வங்கிகளில் கடன் பெற அணுகினால், அத்தொழிலுக்கு கடனில்லா சான்று கேட்பர்.
உ-ம்: எமது மாற்றுத்திறனாளி நண்பரொருவர், மாற்றுத்திறனாளிகளுக்கான பூட்ஸ் கேளிப்பர்களை பழுது நீக்கும் ( ரிப்பேர் செய்யும் ) தொழில் தொடங்க, வெறும் 2000/- ரூபாய்கள் கடன் பெற்று தொழில் தொடங்கியவர், கடனை நேர்மையாக திருப்பி செலுத்தியதால், சிறிது சிறிதாக அவர் தொழில் விரிவு படுத்தி முன்னேற அவ்வங்கியே பல லட்சங்கள் கடன் கொடுத்துதவ தானாக முன்வந்தது.
அதே போல ஒரு வயது முதிர்ந்த பெண்மணி ( பாட்டி ) ஒரு வங்கிக்கு முன் தரை விரிப்பு விரித்து பழங்களை விற்பனை செய்து வந்தார். அவர் 5 ரூபாய்,10 ரூபாயென வங்கியில் சேர்த்து வந்தார். திடிரென ஒரு நாள் குடும்பத்திற்கும், கடைக்கும் பணம் தேவைப்பட, வங்கியில் சிறிய கடன் வாங்கியவர் கடன் தவனையை சரியான தேதியில், வங்கி துவங்கியதுமே முதல் நபராய் வந்து செலுத்தி விட்டு செல்வார். அவர் வந்தாலே தேதியின்னதென்று வங்கி பணியாளர்களே கூறி சிறப்பிக்கும் அளவிற்கு நடந்துக் கொண்டார். நாமும் அப்படியே நடப்போமென உறுதி கொண்டு செயல்படுவோம்தானே நண்பர்களே..

15) மாற்றுத்திறனாளிகளுக்கு சில தொழில்களில் கூடுதல் அரசு மானியமும் உண்டு. அதை விசாரித்தறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யாரும் தானக வந்து சொல்லமாட்டார்கள்.

16) குறைந்த அளவு கடனெனில் வங்கியில் நம் பெயரில் சிறு சேமிப்பு கணக்கும் ( எஸ்.பி அக்கௌண்ட்- S.B A/c), பெரிய கடன்களுக்கு நடப்பு கணக்கு எனப்படும் கரண்ட் அக்கௌணட் ( Current A/c ) இருக்க அல்லது துவக்க வேண்டும். வங்கி கணக்குகள் துவக்கவும், வங்கிகளுக்கேற்ப நிரந்திர முன் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

#வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் ஏதேனும் குறைகளோ, விடுபடுதல்களோ இருப்பின், அதை அறிந்து, திருத்திக் கொள்ளும் பொருட்டும், தெளிவு படுத்தவும் அனுபவ மற்றும் துறை சார்ந்த நண்பர்களும் கருத்திட்டு உதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

--
என்றென்றும் மாற்றுத்திறனாளர் நலனில்,
மாற்றுத்திறனாளர் நண்பன்
A.M.பத்ரி நாராயணன்.
@ தவப்புதல்வன்.

வாழ்க்கை



விடியல் என்றும்
முடிவதில்லை.
முடிந்தால்!
அன்று
நாம் இருப்பதில்லை.

விடியலுக்கு விரைவோம் நண்பர்களே!