அகால நேரத்திலும்
அலைந்தது கண்கள்
அளவுலாவியது நட்புடன்
ஆனந்தமாய் முகநூளில்.
அயர்ந்த விழிகளால்
அறுந்தது தொடர்பு.
ஆழ்ந்த உறக்கம்
ஆட்கொண்ட பொழுதில்
அய்யோ! அம்மா!!
ஆடுகிறது வீடு
அலறியது குரல்
அசைந்த புவியால்.
அதிர்ச்சியில் மனம்
அலையலையாய் எண்ணங்கள் .
அலைந்தது பிரிந்து.
அழிவைத் தவிர்த்து
ஆண்டவனே காத்தருளென
அண்டியதோர் நினைவு
வீட்டை விட்டு
வெளியேறி செல்ல
வேண்டிய நிலையில்
அல்லாடியபடி
குடும்பமோ நிற்க,
எண்ணங்களில் ஒன்று
அங்குமிங்கும் விரைந்தது தேடி..
காதொலிக் கருவியும்,
மூக்குக் கண்ணாடியும்,
கால்சராயுமென,
அத்துடன் சேர்த்து
குளிருமே வெளியே
குல்லா தேடியது
அரக்கப்பரக்க.
தள்ளுவன்டியோ
தயாராய் இருக்க,
அமரவே நானும்
தள்ளாடியபடி நகர,
அடங்கியது புவி
ஆட்டத்தை நிறுத்தி.
அமைதி நிலையை
அடையா குடும்பம்,
நிகழ்வுகளின் கனம்
நெஞ்சிலே நிலைக்க,
மௌனமாய் கலைந்தது
மெதுவாய் நகர்ந்து.
அந்நியப்பட்டது உறக்கம்
அலசியது எண்ணங்கள்
ஆரம்பத்திலிருந்து.
அதற்கிடையே நேரமோ விரைய
அரைக்குறையாய் உணர்வுகள்
செயலிழக்கும் பொழுதில்,
அளவிலா வெளிச்சத்தை.
அள்ளித் தெளித்தான் பகலவன்.
அகன்றது விழியிமைகள்
அகலா நினைவுடன்
#அமெரிக்காவில் கலிபோர்னியா நாப்பா என்னுமிடத்தில் 2014 ஆகஸ்ட் 24ம் தேதி ஞாயிறு கிழமை விடியற்காலை 3.20 மணிக்கு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுபடி 6.1 புள்ளியும், 11 கி.மீ. ஆழத்திலும் ஏற்பட்டது. அங்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நாங்களும் அதிர்வை உணர்ந்து அலறி புடைத்து எழுந்தோம். சிறிது நேரம் நீடித்தது. நன்கு உணரமுடிந்தது.