Translate

Thursday, October 31, 2013

அறிவியல் - குறுங்கவிதை (ஹைக்கூ...)

எமது சகோதரியின் மகன் வழி பேரன் வசந்த் கிருபா எம்முடன் உரையாடிக் கொண்டிருந்த போது, நீங்கள் கவிதை எழுதுகிறீர்கள் அல்லவா? எனக்கு, அறிவியல் குறித்து குறுங்கவிதை (ஹைக்கூ...) எழுதிக் கொடுங்கள் என கேட்டுக் கொண்டதற்கிணங்க. 

அனுபவித்த நிகழ்வுகளை 
அறிந்து கொள்ள முனைந்தவராய் 
ஆராய தலைப்பட்டார் 
அனுதினமும் புதுபுதிதாய்.

அறிவியல் இதுதான் பேராண்டி.




Wednesday, October 30, 2013

பார்வையற்றோர் வெற்றி பெற முடியாதா? - பார்வையற்ற மாற்றுத்திறனாளி திரு. சுப்பிரமணியம்.






'Orbit' Subramaniyam 

பார்வையற்றவராய் இருப்பினும் வாழ்வில் வெற்றியடைய முடியுமென நிருபித்து, பார்வையற்ற பலருக்கும் பயிற்சி அளித்து, வேலை வழங்கி, தலை நிமிர செய்துக் கொண்டிருக்கிறார், திருச்சியிலுள்ள 'ஆர்பிட்' நிறுவனத்தின் செயலாளராக இருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி  திரு. சுப்பிரமணியம்.

பார்வை இழந்தால், வாழ்க்கையே இருண்டு விட்டதென இடிந்து போய் முடங்கி விடாமல், தன்னம்பிக்கை ஊட்டி, மற்ற சாதாரண மனிதர்களைப்போல, தங்கள் சொந்த காலில் நிற்பதற்கு, 1973ல் "ஆர்பிட்"   துவக்கப்பட்டது.

தொடக்கத்தில் ஐந்து (5) பார்வையற்றவர்கள் மூலம், 'சாக்பீஸ்' 'சோப்பு' போன்ற எளிய பொருட்களை மட்டுமே தயாரித்து விற்றோம். பார்வையற்றவர்களால் சரியாக தயாரிக்க முடியாதென எந்த நிறுவனமும் ''ஆடர்களை'' எங்களுக்கு வழங்கவில்லை.

ஆனால், எங்கள் திறமையை உணர்ந்த, திருச்சி  ''பெல்'' நிறுவனம் , கனரக பொருட்களுக்கான ஆடர்களைத் தந்தது. கொடுத்த ஆடர்களை சரியாக முடித்துக் கொடுத்ததால், ஆடர்கள் குவிய ஆரம்பித்தன. 

இதனால், 100 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை தரும் அளவுக்கு வளர்ந்துள்ளோம்.முறையாக பயிற்சிக் கொடுக்கப்பட்டதால், பார்வை உள்ளவர்களை விட, 20 சதவீதம் அதிக திறனுடன் உழைக்க முடிகிறது. காரணம், பார்வையற்றவர்கள் வேடிக்கைப் பார்க்காமல்,  கவன சிதறல் இல்லாமல் பணியாற்ற முடிகிறது.

எங்களது அயராத உழைப்பால், கடந்த 2012ல் ராணிப்பேட்டையிலும் புதிதாக கிளை நிறுவி, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோம். 

2001 மற்றும் 2009ம் ஆண்டிற்கான "சிறந்த தனியார் நிறுவனம்" என்ற விருதினை தமிழக அரசிடம் பெற்றுள்ளோம். 2010ல் உடல் ஊனமுற்றோர் தினத்தன்று, ''சிறந்த நிறுவனம்'' என்ற விருதை ஜனாதிபதியிடமிருந்து பெற்றோம். தைவானில், 2012ம் ஆண்டு, 23 நாடுகள் பங்கேற்ற 'வொர்க்கபிலிட்டி ஆசியா' மாநாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும், 200 நிறுவனங்கள் பங்கேற்றதில், எங்கள் நிறுவனம் சிறந்த நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாராட்டப்பெற்றோம்.

தன்னம்பிக்கையுடைய பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக திகழ்வதுடன், மற்ற பார்வையற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து, பயிற்சி கொடுத்து, வளர்ந்தது விடும் அவரையும், அவர் நிறுவனத்தையும், மென்மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துவோம் நண்பர்களே.  

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை.



மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால், உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு, திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான விண்ணப்பிக்கும் காலம் கடந்து விட்டபடியால், அடுத்த 2014ம் ஆண்டு உயர்கல்வி பயலுபவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேவையான விபரங்கள் கீழே.

1) பிளஸ்2 பொது தேர்வில்,  1,200 மதிப்பென்களுக்கு 955 மதிப்பென்களுக்கு மேல் பெற்றிருக்க         வேண்டும்.

2) பெற்றோர் ஆண்டு வருமானம் ரூபாய் 6 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3) தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், வேறு கல்வி உதவித்தொகைகள்  பெறக்கூடாது.

4) இத்திட்டத்தின் கீழ், தமிழக மாணவர்கள்  4,883 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும்.               இதில் 50 சதவீதம் பெண்களுக்கும், மூன்று சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கும்                           ஒதுக்கப்பட்டுள்ளது.

5) தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்களின் வங்கிக்கணக்கில் உதவித்தொகை நேரடியாக செலுத்தப்படும். ஆகவே தேசியமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கை துவக்கி, கணக்கு எண்,வங்கியின் பெயர், முகவரி, மாணவ, மாணவியரின் இ-மெயில் முகவரி, ஆதார் எண் (இல்லாதவர்கள், கீழ் காணும் விலாசத்தில் விசாரித்துக் கொள்ளவும்.) தொலைபேசி எண் முதலியவற்றை, தெரிவிக்க வேண்டும்.

6) மாற்றுத்திறனாளியாக இருப்பின், அதற்குரிய படிவத்தை, உரிய மருத்துவ அதிகாரியிடம் பெற்று அனுப்ப வேண்டும். 

7) சான்றொப்பமிட்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேற்காணும் அனைத்து தகுதிகளும் பெற்றிருப்பின், அம்மாணவர்கள்,    கீழ்காணும் இணையதளங்களில் உள்ள விண்ணப்பத்தை, பதிவிறக்கம் ( டவுண்லோடு) செய்து, அப்படிவத்தை பூர்த்தி செய்து, மேற்காணும் சான்றுகளை இணைத்து ,

 "இயக்குனர், 
கல்லூரி கல்வி இயக்ககம்,
ஈ.வே.கி.சம்பத் மாளிகை,
9வது தளம், 
சென்னை- 600 006" 

என்ற முகவரிக்கு 2014ல் தேர்ச்சி பெரும் பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 


இணையதள முகவரிகள்:


 

**    தேவையானவர்கள், இத்தகவலை பத்திரபடுத்திக் கொள்ளவும்.  

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Tvn Tvnarayanan



Tvn Tvnarayanan


சிந்தனையில் தேக்கமின்றி,
சரியான வழி செல்லும்,
சலசலப்புகள் ஏதுமின்றி 
சாந்தமாய் வழிந்தோடும். 
சந்தோஷக் கலவையுடன் 
சங்கீதம் இழையட்டும். 
சாமி அவர் அருளாலே 
சதமடித்தும் நீர் வாழ,
சலனங்களை ஒதுக்கி விட்டு, 
சரணடைந்தோம் அவனிடமே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.





https://www.facebook.com/photo.php?fbid=665636993475946&set=p.665636993475946&type=1&theater

இன்று உலக சிக்கன நாள்




சிக்கனம் என்பது என்ன, என்பதே பலருக்கு புரிவதில்லை. தேவையான பொருட்களை வாங்காமலும், குறைத்து வந்குவதுமே சிக்கனமென சிலர் நினைக்க, செய்யக்கூடிய ஊதாரி செலவில் சிறிது குறைத்தாலே, சிக்கனமெனவும் சிலர் வாதிடுகிறார்கள். 
 
அதேபோல் ஊழலாலும், லஞ்சத்தினாலும் பல்வேறு சொத்துக்களை சேர்த்து அனுபவித்து வரும் அரசியவாதிகள், சிக்கனம் பற்றி பேசும்போது, வேதனையுடன் சிரிப்பு வருகிறது. சாத்தான் வேதம் ஓதியதுபோல.

சிக்கனம் என்பது என்ன?

அவரவர் வசதிக்கேற்றபடி தேவையான, ஆடம்பரமற்ற  பொருட்களை மட்டுமே வாங்குவதுடன், தற்பெருமைக்காக தேவையற்ற செலவுகளை செய்து வீணாக்கும் செயலை செய்யாமலிருப்பதே சிக்கனமாகும்.

நலமாக வாழ்வோம், வளமாக வாழ்வோம், மகிழ்வாக வாழ்வோம் தேவையான செலவுகளை செய்து சிறப்பாக வாழ்வோமென சிக்கன நாளில் வாழ்த்துகிறோம்.

Monday, October 28, 2013

ஒரு மணி நேரத்தில் எயிட்ஸ் பரிசோதனை முடிவு.



எயிட்ஸ் நோயை கண்டறிய மேற்கொள்ளப்படும் 'கோல்ட் ஸ்டாண்டட்' சோதனை மூலம் முடிவு தெரிந்துக் கொள்ள, இரண்டு வாரங்கள் ஆகும். இதற்கான கட்டணம் அமெரிக்காவில் 200 டாலர்களாகும்.

ஆனால் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பாஸ்டன் நகரில் உள்ள பாஸ்டன் நானோ தொழில்நுட்ப மையத்தின் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் அனிதா கோயல் தலைமையில், அந்நிறுவன விஞ்ஞானிகளின் தீவிர ஆராய்ச்சியினால்,   "ஜீன் ரேடார்" என அழைக்கபடும் புதிய கண்டுபிடித்துள்ளார்.

அதன் மூலம் நானோ தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'நானோ சிப்'பில்  சோதனைக்குரியவரின் எச்சில்( உமிழ்நீர்), ரத்தம், இதன் ஏதோ ஒன்றின் துளி வைத்து, புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவியில் பொருத்தினால், ஒரு மணி நேரத்தில், எயிட்ஸ் பரவியுள்ளதா, இல்லையா? என தெரிந்து விடும். அதனால் ஆரம்ப கட்டத்திலேயே நோய் பாதிப்பை அறிந்து கொண்டு, உரிய சிகிச்சை மூலம் எயிட்ஸ் நோயிலிருந்து முழுமையாக விடுபட முடியும். 

ஒரு முறை சோதனை செய்ய, 2 டாலரிலிருந்து  4டாலர் வரை செலவாகும். அதாவது 100 மடங்கிலிருந்து 50 மடங்குவரை குறையும். அத்துடன் விரைவான முடிவும் கிடைத்து விடுகிறது.

எயிட்ஸுக்கான புதிய நானோ கருவியைக் கண்டு பிடித்துள்ள டாக்டர்  அனிதா கோயல் மற்றும் துணைபுரிந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களை  தெரிவித்துக் .கொள்வோம்.  

Friday, October 25, 2013

நன்னெறி, அறநெறி கல்வியின் அவசியம்.






மதுரை காந்தி மியூசியம், ஒவ்வறொரு வருடமும் "காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றுத் தேர்வை" காந்தியடிகளின் நூற்றாண்டான 1969 முதல் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் நடத்தி வருகிறது.

இத்தேர்வு திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு, காந்தியடிகளின் 'என் வாழ்க்கை வரலாறு' எனும் புத்தகம் தரப்பட்டு, அதிலிருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன. வெறும் வாழ்க்கை வரலாறு தேர்வாக மட்டுமல்லாமல், மாணவர்களின் பண்பு நலன்களை வளர்க்கும் வகையில் தேர்வுகள் உள்ளன. ஆங்கிலத்திலும் இத்திட்டம் உள்ளது.

நன்னெறி, அறநெறி குறித்த ஈடுபாடு குறைந்து கொண்டே வருவதால், சமுதாயத்தில் ஏற்படும் குற்றங்களுக்கு காரணமாக உள்ளதால், மாணவர்களிடையே நன்னெறியையும் அறநெறியையும் வளர்க்கவும், உணர செய்யவும் இத்தேர்வு ஒரு முன்முயற்சியாக திகழ்கிறது.

தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர், செயலாளர், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை - 20 என்ற முகவரியி தொடர்புக் கொள்ளலாம்.


Thursday, October 24, 2013

அஞ்சலி ...



வாழ்வின் கால ஓட்டத்திலே
சோதனைகளை  பல கடந்து,
வயது முதிர்ந்த நேரத்திலே
வேதனைகளை சுமந்தபடி,
இறைவனின் அருள் கிடைக்க
அவனடி புகுந்தார் நேற்று.
அவர் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திப்போம் உளம் உருக.

கையறு நிலையால்,
விழி கோர்த்த துளியுடன்,
இதோ நீர் கானா பூவளையம்
இன்று உமக்காக.




விழியற்றவரும் நெசவு செய்ய கைத்தறி.



பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நெசவு செய்ய கைத்தறியைக் கண்டு பிடித்துள்ளார், கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் டெக்ஸ்டைல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரில் பேராசிரியராக பணியாற்றும், பேராசிரியர் ராஜ்குமார் ரங்கநாதன்.

மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூர் என்ற இடத்தில் 'கிராமின் சராசிக் பிரதிஸ்தான்' என்ற அமைப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய  பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, நெசவு நெய்யும் பயிற்சி அளிப்பதுடன்,வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது. 

இங்கு 40க்கும்  மேற்பட்ட  பார்வையற்ற இளைஞர்கள், பழைய சேலைகளை 4 செ.மீ.,    அளவுக்கு ரிப்பனாக வெட்டி, கைப்பின்னல் முறையில் கையாலேயே தரைவிரிப்பு தயாரிக்கும் வேலை செய்கின்றனர். கைப்பின்னல் என்பதால், ஒரு நாளைக்கு,இரண்டு தரைவிரிப்புகளை தயாரித்து, 70 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டி, வறுமையில் வாடினர்.


அவர்களின் வறுமையைப் போக்க நினைத்த தொண்டு நிறுவனம், "ரூட் டேக்" என்னும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும், கிராமிய தொழில் மேன்பாட்டுக் குழுவிடம் பார்வையற்றவர்கள், எளிதில் பயன்படுத்தி, தரை விரிப்பை தயாரிக்கும் விதத்தில், புதிய கைத்தறி இயந்திரத்தை கண்டு பிடித்து தர கேட்டுக் கொண்டனர்.

  கிராமிய தொழில் மேன்பாட்டுக் குழுவின் அறிவுறுத்தல் படி, சாதாரணமாக இருக்கும் கைத்தறியின் வடிவமைப்பை சற்று மாற்றி, எடை அதிகமுள்ள பகுதியின் எடையையும் குறைத்து, பார்வையற்றவர்கள் இயக்கம் வகையில் மாற்றியதுடன், பார்வையற்ற நேசவாலரை அழைத்து, எந்த சிரமமும் இல்லாமல் தறியை இயக்க முடிகிறதாவென சோத்தித்து, தேவைக்கேற்ப மேலும் மாற்றி இலகுவாக இயக்கும் வகையில்  தயாரித்துள்ளார்.


இவர் கண்டுபிடித்துள்ள கைத்தறியின் மூலம், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஆறு தரைவிரிப்புகளை தயாரிக்கலாம். அதனால் 70 ரூபாய் வருமானம் ஈட்டியவர்கள், இனி 250 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இப்பொழுது, அங்கு பணியாற்றும் அனைத்து பார்வையற்ற நெசவாளர்களுக்கும், கைத்தறி இயந்திரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

பார்வையற்றவர்களுக்கான கைத்தரியைக் கண்டுபிடித்துள்ள பேராசிரியர் ராஜ்குமார் ரங்கநாதன் அவர்களை நாமும் பாராட்டுவோம். அவரின் கண்டுபிடிப்பை வெளியிட்டு சிறப்பித்த புதியதலைமுறை இதழுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வோம். 

  

Tuesday, October 22, 2013

இவர்கள் காரணமல்ல...



இனிமேல் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களை குடிகாரர்கள் என்று யாரும் சொல்லக்கூடாது. குடிப்பதற்கு காரணம் இவர்களல்ல. மரபணுக்கள் தான் காரணம்.

மது குடித்தவர்களுக்கு செரிமானம் ஆவதற்காக ''ஆல்கஹால் டிகைடிரோ  ஜென்ஸ்" என்னும் வேதிப்பொருள் உருவாகிறது. இந்த பொருளை உருவாக்குவதில், மரபணுக்களே முக்கிய காரணியாக உள்ளது.  மரபணுக்கள் இந்த பொருளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் வகையில் இருந்தால், அவர்களின் மது பழக்கம் சிறிது சிறிதாக அதிகரிக்கிறது. ஒன்றும் அறியாத இந்த அப்பாவி மக்கள், இந்த மரபணுக்களால் எவ்வளவு பாதிக்கபடுகிறார்கள் பாருங்கள். பாவம் இவர்கள். பழி ஒரு இடம். பாவம் ஓரிடமா? 

மேலும் மலேரியா,டிப்தீரியா, சின்னம்மை, தொழுநோய் போன்றவைக்கும்  மரபணுக்கள் சிறிதளவு காரணமாக இருக்கிறதென ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

சீனா, ஜப்பான், கொரியா போன்ற மங்கோலிய இனத்தவர்கள் வாழும் நாடுகளில், மது பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் மரபணுக்கள் உள்ளனவாம். இதுவும் ஆராய்ச்சி தான். இந்த அக்கிரமத்தை யாரிடம் போய் சொல்ல?.









ஹையோ ஹெல்மெட்டா? இனி சலிப்பில்லை!



ஹெல்மெட்டுகளின் எடை காரணமாகவே, போலீசார் உள்பட பலர் ஹெல்மெட்டுகள் அணிவதை தவிர்க்கின்றனர்.

இதற்கோர் தீர்வை, சுவீடனை சேர்ந்த இரு பெண்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த ஹெல்மெட்டை தலையில் அணிந்திருந்தால் , அணிந்திருப்பது போலவே தெரியாது. விபத்து நேரிட்டால் மட்டுமே இதனுள் பொருத்தப்பட்டுள்ள தன்னிச்சை உணர்வு கருவிகள்  (சென்சார்கள் )  தானாக  செயல்பட்டு காற்று நிரப்பும் பையாக  செயல்பட்டு ஹீலியம்  வாயுவை கண்ணிமைக்கும் நேரத்தில் நிரப்பி,  ஹெல்மெட் போல் உப்பி, தலை அடிபடாமல் காக்கிறது.






மேலும் இந்த ஹெல்மெட் விமானத்திலுள்ள கறுப்புப் பெட்டி போலவும் செயல்படுகிறது. வண்டி ஓட்டுபவர் அணிந்து செல்லும்போது, வண்டி செல்லும் வேகம், காற்றின் வேகம், காற்று அடிக்கும் திசை போன்றவற்றையும்  இந்த ஹெல்மெட் மூலம் அறியமுடியும்.

  இந்த  ஹெல்மெட் பேட்டரி மூலம்  இயங்குவதால், மாதம் ஒருமுறை அக்கறையாக சார்ஜ் செய்துக் கொள்ள வேண்டும். 

 குறிப்பு :கன்னா பின்னாவென்று வண்டியை வேகமாக செலுத்துபவர்கள் , இந்த ஹெல்மெட் நம்மைக் காட்டிக்  கொடுத்து விடுமே என அணியாமல் சென்றால்,,,,,, இதற்குமேல் எதுவும் சொல்லதேவையில்லை. ஆமாம்.....



http://news.yahoo.com/invisible-bike-helmet-keeps-riders-safe-looking-cool-193120928.html

Monday, October 21, 2013

இ இ இ இ........ ஹி...ஹி ... ஹீ... ஹீ....


எமது முகநூல் நண்பர் பேராசிரியர் M Venkatesan Msc Mphil அவர்கள் முகநூளில்
இப்படி பதிவிட,
இப்படிதொடர்ந்தது எமது பதில் கருத்து.
இப்படியே  தொடருமா உங்கள் எண்ணக் கருத்துகளும்.

 
இரவு எட்டே முக்கால்
இனியும்
இரண்டு எடுத்து வைத்தால்
இனிய
இருப்பிடம் வரும்
இனிக்கும்
இனிய மாலை
இரவு வணக்கம்
இனியோரே .
 
 
 
இன்றைய பொழுதில்
இதமான நிலையில்
இனிதானதாய்
இயம்பினீரே
இன்புற்றிருக்க.

இனியும் வருக
இன்பம் தருக
இயம்புவீரோ
இடைவெளியின்றி.

இல்லாளும்
இன்னிசை பாடி
இசைவாய்
இடுவாரே
இவரின்
இச்சையறிந்து.

இச்செய்கை
இவ்வையகமிதில்
இழையோடும்
இகழா நிலையோடு.


Saturday, October 19, 2013

இனிய இரவு வணக்கம்

கவிஞர் கண்ணதாசனின் அனுபவ கூற்றுடன்,
இனிய இரவு வணக்கம் நண்பர்களே.

தெரியுமா?



1) கவிஞர் கண்ணதாசனுக்கு 14 பிள்ளைகள்.

2) ஒரே பள்ளியில் தான் படிக்க வைத்தார்.

3) தேர்ச்சி பெற்ற அனைத்து பிள்ளைகளுக்கும் 1960லேயே 100 ரூபாய் பரிசளித்தார். அந்த காலத்தில் அது பெரும் தொகை.

4) ஒரு முறை ஒரு பிள்ளை மட்டும் தேர்ச்சி பெறவில்லை. அனைவருக்கும் 100ம், தேர்ச்சி பெறாத பிள்ளைக்கு 200ம் பரிசளித்தார். எப்படியிது சரியாகுமென மற்றவர்கள் கேட்க, சொன்ன காரணம் தெரியுமா?

சந்தோசத்திலிருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும், அது மேலும் சந்தோசத்தைத் தரும். ஆனால் சொக்ச்மான மனநிலையில் இருப்பவர்களை . தேற்றுவது கடினம்.அவர்களை மேலும் காயப்படுத்தாமல் இருக்கலாம் அல்லவா என்றார்.

என்ன நினைத்து அப்படி செய்தாரோ தெரியாது. ஆனால் அன்று தேர்ச்சி பெறாமல் 200 ரூபாய் பரிசு பெற்ற பிள்ளை, இன்று மருத்துவராக இருக்கிறார்.

ஆனால், அவர் யாரென எமக்கு தெரியாது. உங்களுக்கு தேரியுமா?

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - இராசசேகரன் சீதாராமன்



காலமது கழிந்து விட்டது,
வருடம் ஒன்று விரைவாக.
கனவுகளாய் நினைவுகள்
வருகிறதோ சென்றதெல்லாம்?
இனியும் தொடரட்டும்
இனிவரும் நாட்கள் யாவும்
இன்னிசையாய் திகழட்டுமென
இன்றைய நாளில் நட்புடன் வாழ்த்துகிறோம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.




Friday, October 18, 2013

வாழை தோப்பை காக்க..., வாழ்த்துவோம் நண்பர்களே!,



வாழை சாகுபடியில் நீர் தட்டுபாடு, நோய் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பைவிட இருக்கும் பெரும் சவால், வேகமான காற்றிலிருந்து வாழை மரங்களை காப்பதுதான். இதில்தான் விவசாயிகளுக்கு பெருத்த நட்டம் ஏற்படும்.

பருவக்காற்று வீசும் காலங்களில் கம்புகளால் முட்டுக் கொடுப்பது, மண் அணைப்பது, இலைகளை கவாத்து செய்வது, 'பிளாஸ்டிக் பெல்ட்'டால் கட்டுவது போன்றவற்றை செய்து வாழை மரங்களைக் காப்பது வழக்கம். இருப்பினும் 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசினால் மரங்கள் அடியோடு சாய்ந்து விடும். 

கடலோர பகுதிகளில் வீசும் காற்றைத் தடுக்கவும், கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புழுதியை தடுக்கவும் பொதுவாக சவுக்கு மரங்களை வளர்ப்பர். அதேமுறைப்படி வாழை மரத்தோப்புகளையும் காக்க எண்ணியே, வீரிய ரக சவுக்கு மரத்தை உருவாக்கியுள்ளார், கோவையில் உள்ள, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு ஆராய்ச்சியாளர் . புவனேஸ்வரன்.

வீரிய ரக சவுக்கு:

10க்கு மேற்பட்ட உயர் ரக சவுக்கு மரங்களிலிருந்து, மாதிரிகள் எடுக்கப்பட்டு, 'குளோனிங்' முறையில் தாவர இனப்பெருக்கம் முறையில், "காசுரினா ஜூங்குனியானா" என்ற வீரிய ரக சவுக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பயன், பயன்படுத்தும் முறை:

இந்த ரக சவுக்கை வாழைத்தோப்பின் நான்கு திசைகளின் ஓரத்திலும் மூன்று வரிசைகளாக ஒரு மீட்டர் இடைவெளியில் குறுக்கு மறுக்காக நட வேண்டும். இச்சவுக்கை வளர்ப்பதால், காற்றின் வேகத்தை 46 சதவீதமும், மண் அரிப்பை 76 சதவீதமும் கட்டுப்படுத்தலாம். மேலும் தோட்டத்தி தட்பவெப்ப நிலை சமன் ஆவதுடன், காற்றில் உள்ள தழைச்சத்தையும் மண்ணில் நிலைநிறுத்துகிறது. இச்சவுக்கு மரம் மூன்று ஆண்டுகளுக்கு பயன்படும். பின் சவுக்கு மரங்களை அறுவடை செய்வதின் மூலம் உபரி வருமானமும் கிடைக்கிறது.

தொடர்பு கொள்ள: 0422 - 2484100

**வாழைத்தோப்புகளைக் காக்க, வீரிய ரக சவுக்கு மரங்களைக் கண்டு பிடித்த மர ஆராய்ச்சியாளர் புவனேஸ்வரன் அவர்களை வாழ்த்துவோம், நண்பர்களே.


Thursday, October 17, 2013

உலக வறுமை ஒழிப்பு தினம்



இன்று (17/10/2013) உலக வறுமை ஒழிப்பு தினம். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி, உலகின் எந்த ஒரு மூலையிலும் வறுமையால் ஒருவர் பாதிக்கப்படுவது, அவரின் மனித உரிமை பறிக்கப்படுகிறது என சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடி வந்தார். இவரது முயற்சியால் தான் " உலக வறுமை ஒழிப்பு தினம்" 1987, அக்டோபர் 17ம் தேதி உருவாகியது. பிறகு ஐ.நா.சபையினால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.

பாகுபாடின்றி வறுமையை ஒழிப்பதும், அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, இருப்பிட வசதி, மருத்துவம், சுகாதாரம், கல்வி, உடை, வேலை வாய்ப்பு எனும் அடிப்படை வசதிகள் கிடைக்க செய்வதே முக்கிய கருத்தாகும். இவை இல்லாத அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாகவே கருதப்படுவர். இந்த வசதிகள் எதுவுமே இல்லாத மிக பெரும்பாலான மக்கள் வாழும் இந்த நாட்டில் உள்ள, நாட்டை நிர்வாகிக்கின்ற அதிகார வர்கத்தினர், ஒரு குடிமகன் நாள் ஒன்றுக்கு ரூபாய் 20ம், 30 ம் சம்பாதித்தாலே வறுமைக் கோட்டிற்கு கீழ் இல்லாதவர்கள் என நிர்ணயிக்கிறார்கள். இந்த கொடுமையை எங்கு சொல்ல.

மக்கள் ஏழ்மைநிலையில் தள்ளபடுவதற்கு முக்கியமாக அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், புதிய தொலைநோக்கு திட்டங்கள் செயல் படுத்தப்படாமல் இருப்பது, கல்வியறிவின்மை, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என பல காரணங்கள்.

இன்று ஒரே நாளில் வறுமையை ஒழிக்க முடியாது. இருப்பினும் சிறப்பான தொலைநோக்கு திட்டங்கள் பலவற்றை விரைவாக தீட்டி, , திறமையானவர்களின் பங்களிப்புடன், நேர்மையாக செயல்படுத்தினால், இன்றைய மக்கள் வறுமையிலிருந்து சிறிது சிறிதாக மீளவும், வருங்கால சந்ததியினர் வளமாக வாழவும் வழி கிடைக்கும். "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ?"
என பாடலாசிரியர் மருதகாசி எழுதியது படி, வறுமை கோட்டிலேயே வசிப்பதை ஒழிக்கலாம்..கல்வி வழங்குதலும், ஆரம்ப அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தலும் வன்முறைகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

பின்குறிப்பு: எத்தனை படங்களை பதிப்பது. பார்க்கப் பார்க்க கண்கள் குளமாகிறது.

திரைபடம் : விவசாயி
இசை : மகாதேவன்
பாடல் : மருதகாசி
பாடியவர் : T.m.s

கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...

முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி ... விவசாயி ....

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....

கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி .... விவசாயி ....

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி .... விவசாயி ....