Translate

Thursday, November 30, 2017

கண்ணீரை ருசிக்கின்றாய்




கண்ணே என்றாய்.
கனியமுதென்றாய்.
கல்லும் கரையும் வண்ணம்
கற்கண்டாய் சொல்லுதிர்த்தாய்.

கவர்ந்தாயே என்னை
கனிந்தேனே மனம்.
கல்யாணம் ஆனதும்
கடுஞ்சிறையானதே..

கற்பனையிலும் நினைக்கவில்லை
கனவிலும் காணவில்லை.\கண்டதில்லை.
கந்தலான உன் மனதை
கடுகளவும் உணரவில்லை.

கண்ணிருந்தும் இழந்தவளாய்,
கற்றிருந்தும் அறிவிழந்து,
கல் கட்டி குதித்து விட்டேன்,
#குடுக்கையாய் அதை நினைத்து.
காதலித்த என் மனத்தை
காயப்படுத்தி ரசிக்கின்றாய்.
கண்களில் வழியுமந்த
கண்ணீரை ருசிக்கின்றாய்

கட்டியது கோட்டையுமல்ல,
தகதகக்கும் பொற்கூண்டுமல்ல,
தகதகவென கொதிக்கும்
இரும்பு சிறையை நானுணர்ந்தேன்.

பொற்கூண்டாய் இருந்தாலும்,
ரத்தினத்தில் இழைத்தாலும்,
தோளோடு தோளணைக்கும்
இதயமே போதுமெனக்கு.

வேட்டைநாய் உன்னிடத்தில்
வெந்து நான் மடியுமுன்னே,
வேடியாய் உன்னை முடிப்பேன்
வெற்றி உரைத்திட முடியாமல்.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏

#குடுக்கை(யாய்) = குண்டு சுரைக்காய் காய்ந்த பின். கிராமங்களில் நீச்சல் பழக, நீரில் மூழ்கிவிடாமலிருக்க இடிப்பில் கட்டிக் கொள்வது.

#வேடியாய் = வேடன் என்பதின் பெண்பால்
30\11\23017