Translate

Saturday, February 2, 2013

என்றும் நிறையா நினைவறைகள்


விழி வழிக் காட்சிகளாய்
   கணக்கற்ற நிகழ்வுகளும்,

செவி வழி தகவல்களாய்
   எண்ணற்ற செய்திகளும்

நினைவுப் பெட்டகத்தில்
   அடுக்கடுக்காய் பதிந்திருக்க,

முடிச்சிட்ட நினைவுகளும்
    துண்டித்த நினைவுகளும்

பிசுறுகளாய் இருந்தாலும்
   நூலிழையாய் தொடர்ந்திருக்க,

கடக்கின்ற காலங்களுடன்
   இயல்பான செயல்களாய்

புதுப்புது செய்திகளும் நிகழ்வுகளும்
   இடைசெறுகலாய் உழ்நுழைய,



தளும்பியதாய் தோன்றினாலும்
   தடையில்லா ஓட்டங்களினால்


சப்தமின்றி சதமடிக்கும்
   சாதனைக்கு வழியில்லை.


பின் குறிப்பு: அப்பா, எவ்வளவு செய்திகள் காட்சிகள் பார்த்ததும், படித்ததும், கேட்டதும். மூளையே நிரம்பி தலையே பாரமாக இருக்கிறது என சிலர் சொல்லுகிறார்கள். அதைப்போலவே எமது கோவை சகோதரியும் சொல்லக் கேட்டதும், தொன்றிய எண்ணச்சிதறல்.

ஏது பயன்?

கணக்கில்லா காட்சிகள்
கண் முன் இருப்பினும்,
மதிப்பார்வை இருந்தும்,
விழிப்பார்வை இல்லையெனின்
ஏது பயன்?

கோடானகோடி செல்வம்
கொடுத்து வைத்திருப்பினும்

விழிப்பார்வை இருந்தும்,
மதிப்பார்வை இல்லையெனின்
ஏது பயன்?

மதிப்பார்வை ஆழமாயிருந்தும்
விழிப்பார்வை கூர்மையாயிருந்தும்
கொடுப்பினை இல்லையெனின்
ஏது பயன்?

சான்றோர் சொல் மறந்து
சாலப்பெரும்பிழையை
சலனமின்றி நீ புரிந்தால்
அருளிய வாக்குக்கு
ஏது பயன்?

நமக்குள் - குறுங்கவிதை

வித்தியாசமே இல்லையென
நினைத்திருந்தேன் - உன்னை
சந்திக்க வரும் வரை.

மேலேற இயலா நிலையில்
" நானும் "
கீழிறங்க  முடியா நிலையில்
" நீயும் " 

Friday, February 1, 2013

ஓ.... கடவுளே!

தனது கணவரை இழந்த எமது சகோதரி திருமதி.பிரபாவதி ஜெனார்தனம் அவர்களின் கதறல்.




சுற்றம் சுற்றியே இருந்தாலும்,
உற்றத்துணையை ஏன் பிரித்தாய்?
மன்னிக்கா குற்றமென்ன?
மரணிக்க செய்ததென்ன?

வெளிச்சமும் இருட்டும்
வாழ்வின் நியதிதான்.
விரைவிலே இருள செய்து,
நிலை குழைந்து நிற்க செய்தாய்.

விழியிழந்த முடவரைப் போல்
வழியின்றி முழிக்கின்றேன்.
இடைவிடாமல் பிரார்த்தித்தேன்- ஏன்
இடையிலே உறவை  துண்டித்தாய்?

நிற்கதியாய் நிற்க வைத்தாய்
வேடிக்கைப் பொருளாய் எனை மாற்றி.
சோதனையை செய்து விட்டாய்.
வேதனையில் தவிக்க விட்டாய்.

வாழ்வின் துணை உடனிருந்திருந்தால்,
பயின்றிருப்பேன் என் நடையை,
தும்பிக்கையாய் நம்பிக்கையுடன்
நின் அருள் துணைக் கொண்டே.

நின் அருளோ மறைந்ததம்மா.
என் துணையை இழந்தேனம்மா.
திகைத்துத்தான் நிற்கின்றேன்
வழிப்பாதைத் தெரியாமல். 

கண்ணீர் அஞ்சலி

எமது சகோதரி திருமதி.பிரபாவதி அவர்களின் கணவரும், தாய் மாமா மகனுமான ஜெனார்த்தனம் அவர்களின் மறைவை ஒட்டி இரங்கற்பா...



அனுபவித்தது போதுமென்று
அறியா வழி நோக்கி
அந்தரத்தில் விட்டனையோ
அருங்குடும்பத்தினையே!

ஆசைகள் போதுமென்று
அடைத்து விட்டு போனீரோ ?
அத்தனை நிகழ்வுகளையும்
அழித்து விட்டு சென்றீரோ?

ஆழ்கடல் மௌனமாக
அமிழ்ந்ததோ நின் பேச்சு?
அளவற்ற நினைவலைகள்
அலையடித்தது எம் மனத்தில்.

ஆதி முதல் அந்தம் வரை
அறிந்தவர் யாருமில்லை.
ஆற்றல் பெற்றவராய்
ஆட்டுவித்தீர் அனைவரையும்.

அங்குசமாய் உம் செயல்கள்
ஆனை(ணை)களாய்  பலர் அடங்க,
அறியாமல் போனீரே
ஆயுதத்தின் வலிமையையே.

அல்லலுறும் நிலைக்கொடுத்து ,
ஆட்டுவிக்கும் ஆண்டவனின்
அருளென்று கூறாமல்
அடைக்கலமானீர் ஏன் விரைந்து?