அப்பா என்றே,மெதுவாக அழைத்தேன்.
பதிலோ இன்றி, மவுனமே ஒலிக்க,
மீண்டும் அழைக்க தயங்கி நின்றேன்.
தேவையென்ற நிலையில், குரலை உயர்த்த,
'உம்..' என்ற பதிலோ உறுமலாய் கேட்க,
உடம்பிலோ உதறல், நாவிலோ வறட்சி.
அழைக்க வந்தது, மறந்து போக,
இந்த நிலையில் உடனே வந்தது,
அணைத்து கொஞ்சும் அம்மாவின் நினைவு.
அம்மாவின் மறைவு மனத்திலே முட்ட,
காரணம் நானென, அப்பா நினைக்க.
சூழ்நிலை எல்லாம் ஒத்துப் போக,
குற்றவாளியாய் நானும் கூண்டிலே நிற்க,
எண் சாண் உடம்பும் ஒரு சாணாய் குறுக,
விடுதலைப் பெறவோ மனமோ துடிக்க.
வழியோ இன்றி, இதயமோ தவிக்க,
நடந்தவை எல்லாம் நினைவிலே ஓட,
விளக்கங்கள் அனைத்தும், கண்ணீரி ல் கரைய,
வந்தெனைத் தாக்கிய வார்த்தைகள் யாவும்
உள்ளிலும் வெளியிலும் ஊசிகளாய் குத்த,
ஆறுதல் மருந்திட ஆட்களோ யாருமின்றி,
ரணப்பட்ட மனமோ ரத்தத்தை சிந்த,
என்னைத் தவிர உறவுகளில்லாஅப்பாவை விட்டு
விலகிச் செல்ல ஒப்புதலில்லா மனத்துடன் நானே,
என்றேனும் உணர்வார், நிலைதனை அறிவார்.
என்றென எனக்கு ஆறுதல் கொண்டு,
பாசத்தைக் கூட்டி, மீண்டும் அழைத்தேன்,
உணவையிட்டு பசியைப் போக்க.
2 comments:
அப்பா பற்றிய உணர்வுகளை எழுதியுள்ளது படித்தேன். இயல்பாக உள்ளது. வாழ்த்துகள்.
Vetha.Elangathilakam.
Denmark.
மகிழ்ச்சி சகோதரி தங்கள் கருத்து பதிவுக்கு.
Post a Comment