Translate

Wednesday, November 13, 2013

சீதாப் பழம் ( Sugar-apple )-மறக்கவியலா நினைவுகள்



 


சீதாப் பழம் ( Sugar-apple ), இதைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த சுவையான பழத்திற்கு, ஒரு சுவையான செய்தியுண்டு. புளியமரத்தின்  கீழ் வடை சுடும் பாட்டி போலவே, எங்கள் கிராமத்தில் அந்தந்த  காலங்களில் வரும் பழங்களையும், காய்களையும் ( நெல்லிக்காய், கொய்யாக்காய், கெளாக்காய் மற்றும் சில) மரத்திற்கு கீழ்  தரையில் சாக்குப்பை விரித்து , ஒரு பாட்டி  கூறுக் கட்டி விற்பார். சீதாப்பழம் எமக்கு மிகவும் பிடித்த பழம். யாம் சிறுவனாய் இருந்தபோது, அப்பழம் வரும் காலத்தில், இலவசமாக முதல் பழம் கொடுத்து, யாம் சாப்பிட்ட பிறகுதான் விற்பனை தொடங்குவாராம்.


அவர் இறந்த பிறகு, அவர் மகள் தங்கம்மா ( இவரும் வயது முதிர்ந்தவர்தான்) பழ  வியாபாரத்தை தொடர்ந்தார்.  இவரும் சீதாப்பழம் வந்ததும், அவரின் அம்மாவைப் போலவே  முதல் பழம் கொடுத்து விட்டு, தனது தாயை நினைத்து அழுவார். அவரின் தாய், ஒவ்வொரு வருடமும் முதல் சீதாப்பழம் எமக்கு கொடுத்து விட்டு தான் விற்பனை தொடங்க வேண்டுமென, இறக்கும் தருவாயில் சத்தியம் வாங்கிக் கொண்டாராம்.


அதுபோலவே, இந்த தங்கம்மா பாட்டியும் இறக்கும் வரை சீதாப்பழம் கொடுத்தார். இவர் திருமணம் செய்துக் கொண்டாரா  இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற அவாவும் அப்போது இருந்ததில்லை. அவர் தனியாகத்தான் வசித்து வந்தார்.   அவர் மரணம் இயற்கையானது அல்ல.  கொலை செய்யப்பட்டார் என்பது வேதனைக்குரியது. அவர் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்திற்காக என்று ஒரு சாராரும், சுற்றத்தார்களே, அவர் வீட்டை அபகரிக்கவும், பணத்திற்காகவுமே இச்செயலென ஒரு சாராரும் கூறியதுண்டு.

இருப்பினும் எமக்கு பெரிய வருத்தமுண்டு. அவர் மாலை 5 மணி சுமார் விற்பனையை முடித்துக் கொள்வார். வீட்டுக்கு வந்தபின் ஓரிரு சமயங்களில்  சாராயம் ( அதுதாங்க கள்ளச்சாராயம் ) அருந்தும் பழக்கம் உடையவர் என்பது எமக்கு தெரியாது. முதன் முதலாக எமது பள்ளித்தோழரும், நண்பருமான   பாபு, இந்த விஷயத்தை சொல்லி, இந்த நேரத்தில் வீட்டிற்கு சென்று, பழங்களை வாங்கினால், அவருக்கு கணக்கு தெரியாது என கூறி அழைத்து சென்றார். அப்போதிருந்து, அவர் சாராயம் அருந்தியுள்ளச் சமயங்களில், நண்பர்களுடன் சென்று கணக்கின்றி சாப்பிட்டு விட்டு, கையில் உள்ள காசை கொடுத்து விட்டு வருவோம்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதைப்போல, அவரிடம் மாட்டிக் கொண்டோம். எத்தனை நாட்கள் இப்படி என்னை ஏமாற்றினிர்கள்  என கேட்க, இருக்கட்டும் தங்கம்மா              ( கிராமங்களில் இன்றும் சிலரை பெயரிட்டு அழைப்பது வழக்கத்தில் உள்ளது), எவ்வளவு காசு நாங்கள் கொடுக்கிறோம். தனியாக இருக்கும் உன்னை, நீ சேர்த்து வைத்திருக்கும் காசுக்காக யாராவது கொலை செய்து விட்டு போனால் என்னவாகும் என கேட்டு  அமைதிபடுத்தி விட்டோம். ஆனால் சிறிது காலத்திலேயே, அவர் கொலை செய்யப்பட, அதிர்ந்து விட்டோம், சொன்னபடியே நடந்து விட்டதேயென்று. இந்த சீதாப் பழங்களை பார்க்கும் போதெல்லாம் அவர் நினைவு நெஞ்சை ஆக்கிரிமிக்கும். அவர் நினைவுக்காக இப்பதிவு சமர்ப்பணம்



No comments: