Translate

Tuesday, November 26, 2013

அனுபவங்கள்- இன்றொரு தகவல்... - தன்னம்பிக்கையாளர்கள் -1



இன்று  பணி நிமித்தமாய் சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பிக்  கொண்டிருந்தோம். வழியில்  

1) கால் பாதிப்படைந்த ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர், விந்தி விந்தி நடந்துக் கொண்டிருந்தார். அவரை நிறுத்தி விசாரித்தோம். எம்.ஏ., பொருளாதாரம் படிப்பதாகவும், இன்று தேர்வுயெனவும், சேலத்திற்கு அருகிலுள்ள கிராமத்திலிருந்து வருவதாகவும் தெரிவித்தவரிடம், வாழ்த்துக் கூறி, தொடர்ந்து அவரிடம் தொடர்புக் கொள்ள, தொலைப்பேசி எண்களைக் கேட்டதற்கு, எம்மிடம் கைப்பேசியில்லை என்றதும், எமக்கு ஒரு வியப்பு. இவர் எம்மிடம் மறைக்கிறாரோ, விரும்பவில்லையோ என நினைத்து, கேட்டே விட்டேன். என்னப்பா சாதாரணமாக பள்ளிக் குழந்தைகளிடமே கைப்பேசி புழங்குகின்ற நேரத்தில், உன்னிடம் இல்லையென்கிறாயே.

எங்கள் குடும்ப வசதிக்கு, கைபோன் வைத்துக் கொள்ள இயலவில்லை. பொருளாதாரம் படிக்க வேண்டும் என்ற ஆவலினால், எம்.ஏ. பொருளாதாரம் படித்துக் கொண்டு இருக்கிறேன் என்றதும், எமக்கு மிக்க வருத்தமாகி விட்டது. அவரிடம் யாம் கூறியதற்கு வருத்தம்  தெரிவித்ததுடன், வாழ்த்துக்களையும் கூறி, உதவிகள் தேவைப்படின் தயங்காமல் எந்த சமயத்திலும் முன்கூட்டியே தெரிவிக்கவும், முடிந்ததை செய்த உதவுகிறேனென சொல்லி, கல்லூரிக்கருகில் விட்டு விட்டு வந்தோம்.

சிறிது தூரம் வந்ததும், ஒரு கையிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர், அவரிடமும் பேச்சுக் கொடுத்தோம்.

2) சிறு வயதிலேயே வலது கையை விபத்தில் இழந்து விட்டதாகவும், 10ம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும், தற்போது ஒரு ஹார்ட்வேர் கடையில் வேலைப்பார்ப்பதாகவும், சம்பளம் போதுமானதாக இல்லை. எனவே அரசு வேலை எதுவாக இருப்பினும் உடனடியாக வாங்கி தந்து உதவும்படி கேட்டார், அத்துடன் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வேலை கேட்க போவதாகவும் தெரிவித்தார். முதல்வரை ஒரு முறை சந்தித்து விட்டால் வேலை கிடைத்து விடும் என்றும் நம்புகிறார். ஒரு பக்கம் அவர் செயல்பாடும், சொற்களும்  நகைப்பை ஏற்படுத்தினும், மற்றொரு பக்கம் அவர் அறியாமையைக் கண்டு மிகவும் வருத்தத்தையே ஏற்படுத்தியது. தற்போது இருக்கும் சூழ்நிலையை எடுத்துக் கூறி,  வாழ்க்கைக்கு  வருவாய், சில தொழிலுக்கான வழிமுறைகளை  தெரிவித்து அனுப்பி வைத்தோம்.

அந்த நேரத்திலேயே கால் இழந்த ஒரு மாற்றுத்திறனாளியை சந்தித்தோம்.

3) மூன்று சக்கர மிதிவண்டியில் வந்தார். நடுத்தர வயதானவர். உடன்பிறந்தவர் யாருமில்லை. தாயும் இல்லை. வயதான தந்தை மட்டும் உடன் இருக்கிறார். வருமானம் அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை மட்டும். தந்தைக்கு முதியோர் உதவித்தொகை இதுவரை இல்லை. மூன்று சக்கர மிதிவண்டியும், செயற்க்கைக்காலையும் சேலத்தில் ஒரு அறக்கட்டளை மூலம் பெற்று இருக்கிறார். இந்த வயதிலும் தன்னம்பிக்கையோடு திகழ்கிறார். ஒரு டம் டீ கேன் ஒன்று யாரேனும் கொடுத்து உதவினால், பேருந்து நிலையத்தில் "டீ" விற்பனை செய்து கூடுதல் வருமானம் ஈட்டிக்கொள்வேன் என்றார். மிகவும் மகிழ்வாக இருந்தது. 

முகநூல் வழியாக தகவல் வெளியிட்டு உதவிப் பெற்றுத் தருகிறேன் என கூறி மேலும் தன்னம்பிக்கை     அளித்து அனுப்பினோம். 

# யாரினும் உதவ விரும்பினால் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.







No comments: