Translate

Friday, November 1, 2013

இனிய தீபாவளி


பட்டாசுகளாய் குரலதிர,
மத்தாப்புக்களாய் சொல்லுதிர,
கொலுக்கொள்ளும் ரகங்களாய் 
வெடிகளும் தின்பண்டங்களும்.

வனிதையர் வலமோ,வண்ண உடைகளில் 
வண்டுகளாய் அலைந்தது, வாலிபர் கூட்டம்..
 கையிலொரு வெடியாய் வாயிலொரு பண்டமாய்.
சிதறி பறந்தது.சிண்டுமுண்டுகள்
.
முகத்தின் முத்துக்கள், முந்தானையில் நுழைய,,
கைகளும் உடலும் பரபரப்பாய் இயங்க,
சமையலறையிலொரு பெண்ணுருவம்,
அல்லாடியது அங்குமிங்கும். 

புத்தாடை உடுத்தி, தாய் தந்த இனிப்போ 
நாவிலே ஊறி,  நெஞ்சை அடைக்க,
சிறுமியாய் இருந்து இன்றைய நாள் வரையே,
சிந்தனையில் நினைவோ சிலிர்ப்பாய் ஓட,

ஒருகணம் வாழ்வோ நின்றது போல,
திடுக்கிட்டு உணர்ந்தாள் தீசலின் வாசம்.
நினைவுகளை பூட்டி, நிகழ்வுக்கு வந்து   
பக்குவமாய் செய்து பலகாரம் கொடுத்தாள் 

நாவின் ஊற்றோ கைகளில் இருக்க,
இல்லா மீசையை இருப்பதாய் முறுக்கி,
இளமை நினைவுகளில்  பரவசப்பட்டு .
அலட்டிக்கொண்டது. ஆணென்ற உரு. 

கையிலும் கால்லிலும் நடுக்கமும் கொண்டு,
விழிகளின் ஒளியோ உள்ளுக்குள் செல்ல, 
பல்லில்லா வாயிலே மதிப்புகள்  மெதுவாய்,
அரைப்பட்டுக் கொண்டிருந்தது முதியோருக்குள்ளே.

அனைவருக்கும் இங்கே, அன்புடன் உரைத்தோம்,
ஆனந்தமாய் நாட்கள் அடைக்கலம் அடைய,
அனுபவித்து மகிழ்வீர் கவனமாய் வெடித்து.
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

No comments: