Translate

Saturday, December 30, 2017

துவிசக்கர வண்டி

துவிசக்கர வண்டி

தூறுகின்ற மழையினிலும்

சுழன்றடிக்கும் காற்றினிலும்
மேடு பள்ள சாலையிலும்
வளைந்து நெளியும் பாம்பாக
சந்து பொந்து பாராமல்
கணகண மணியோசை
முன்னே சென்று குரல் கொடுக்கும்.
ஓரமென்ற ஓரொலியில்
ஒதுக்கி விட்டு கடந்து செல்லும்.
வண்ணவண்ண சாந்திட்டு
தொங்குகின்ற மணிசரங்கள்.
வளமில்லா ஏழை முதல்
வந்திறங்கிய கோமான் வரை
ஏற்றி சென்ற சொகுசு வண்டி
எண்ணிலடங்கா சரக்குகளையும்
ஏற்றி இறக்கிய மனித வண்டி.
மழை, காற்று, வெயிலென்றால்
குடையேறி தலை காக்கும்.
ஊரெல்லாம் சுற்றி பார்க்க
ஊர்வலமாய் அழைத்து செல்லும்.
வண்டி இயக்கும் மன்னனுக்கு
அமருமிருக்கை படுக்கையாகும்.
இரவு பகல் என்றில்லை
அழைத்து செல்ல முன்னிற்கும்.
குழந்தைகளோ குதுகளிக்க
பெரியவர்களோ விழி விரிய
வழியெங்கும் காட்சிகளை
கதைகளாய் விவரிக்க
பார்த்தபடி பயணிப்பர்.
காவலர்களாய் வீதிகளில் 
ஆங்காங்கே
குறுக்கே நிற்கும் மாடுகளை
வண்டியோட்டி தட்டிக் கொடுத்து
வழிப்பெற்று செலுத்திடுவார்.
அர்ச்சனைகள் ஆயிரம் 
அவர் வாயில் உதிர்த்தப்படி
வழி கிடைக்கும் இடங்களிலே
காற்றிலே பறப்பது போல்
கொண்டு நமை சேர்த்திடுவார்.
காலங்களோ கரைந்து செல்ல,
காணாமல் போய்விட்ட
எத்தனையோ சாதனத்தில்
இதுவுமொன்றாய் கணக்கிலேற,
காட்சிகளில் கண்டு நாம்
கனவுலகில் மிதக்கின்றோம்.
அறியாத தலைமுறைகள்
அடுத்தடுத்து தோன்றி விட
அவர்களனைவருக்கும் 
காட்சிப்பொருளாய் ஆனதே
நாம் ஏறி மகிழ்ந்த துவிச்சக்கர வண்டி.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏

No comments: