Translate

Sunday, June 3, 2007

பெண்ணுக்கு பெண்ணே !!



சென்றான் கோவிலுக்கு
பிரார்த்தனை செய்ய.
கொண்டான் ஆசை
அர்ச்சனை செய்யும்
கன்னியைக் கண்டு.

வசமாக்கிக் கொண்டான்
வாசமிகு வார்த்தைகள்
பல கொண்டு.
முடித்தான் மணம்
வாக்குகள் கொடுத்தே.

நாட்கள் சில கழிய
பெற்றவள் துணை நிற்க
வகை வகையாய்
நீட்டினான்,
வரதட்சனையென
சொல்லாமலே.

வருவது நின்றாலோ,
முடியாமல் போனாலோ,
நாளாக வெறுத்திடுவான்
சொல்லாலே குட்டிடுவான்
தடியாலே தட்டிடுவான்- இனி
வாராதென நினைத்தாலோ
தீயாலே சுட்டிடுவான்.

அவள் மாண்டபின்னே,
அறியா பிள்ளைப்போல,
முட்டி மோதி கதறிடுவான்,
இவன் நிலையறியா
மக்களையும் மாக்களாக்கி.

இடையூறு வந்தாலோ
சடலமான
துணையவளை
தூற்றிடுவான்
தொடர்புகள் பலவென்று.

அறிந்தாலும் மன்னித்தேன்.
அதிர்ந்தவள் மரித்தாளே
தனையே தீயிட்டென
கூசாமல் கூறிடுவான்
சாட்சியவள் இல்லையென்றே.

நாட்கள் சில
கழிந்த பின்னே
வேதனைகள் தீரவென,
சாந்திகள் செய்வோமென்று,
வேடங்கள் பல புனைந்து
தாயவள் அழைத்திடுவாள்
மீண்டும் கோவிலுக்கே.

பாவனைகள் பலசெய்து
தேர்தெடுப்பாள்
மணம் வேண்டி,
மண்ணுருளும்
மங்கையொன்றை.
நடித்திடுவாள்,
பாசமிகு பெண்ணாக.

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசி
வளைத்துப் போட்டிடுவாள்
மகனுக்கு மனைவியென்றும்
தனக்கு மகளென்றும்.

காலம் சிறிது
கழிந்த பின்னே- மீண்டும்
கதையைத் தொடர்ந்திடுவாள்,
கொடுமைகள் தொடங்கிடுவாள்,
மகனின் துணையுடனே.

வட்டியுடன் அசலாக
துரத்திடுமே !
விடாத வினையாக
அனுபவிப்பாள் !!
தன்னாலே அறிந்திடுவாள்.
தாளாமல் துடித்திடுவாள் !!!

செய்த கொடுமைகள்
போகாது பெண்ணே !
விடாத வினையாக
துரத்தும் உம்மை !!

பெண்ணே பெண்ணை
வேரறுக்கும்
கொடுமையை
என்னவென்று சொல்ல !!!.....

No comments: