Translate

Monday, January 8, 2018

நம்மிலொரு இளம்பெண்


பத்து மாத கணக்கது,

பறக்குதே நாட்களது.
பழுதின்றி பாதுகாத்து,
பகலிரவு ஏதுமின்றி
பக்கமாய் ஒருகளித்து 
படுத்தவள் பாதுகாத்தாள்
படர்ந்து வளரும் சிசுவதனை.
பஞ்சு போன்ற பாதங்கள்
படுமிடமெல்லாம் உணர்ந்திடுவாள்
பட்டென உதைக்கையிலே
பாசமுடன் வலி பொறுப்பாள்.
பவளயிதழை மடக்கி அவள்
பல்லதில் பதியும் கடித்திடுவாள்.
பல நினைவுகள் மனத்திலோடும்
பாதியிலே கலைந்து விடும்
பட்டென்ற மறு உதையில்.
பாசமாய் அணைத்தபடி – இவள்
படுத்திய பாடெல்லாம்
பகிர்ந்திடுவாள் அவளன்னை சிரித்தபடி.
பாதங்களின் அழுத்தமெல்லாம்
பலமானது சிறிது சிறிதாய்.
பார்த்தபடி கணக்கிடுவாள்
பத்து நாட்கள் இருப்பை எண்ணி.
பரவச நினைவில் பூரித்திடுவாள்
பட்டுடல் யார் நிறமோ?
பழுப்பது எவ்வினமோ?
பார்த்து விட கண்களது
பரப்பரக்கும் நினைவுகளில்.
பாசமான கணவனுக்கும்
பரிசமிட்ட உறவுகளுக்கும்
பாதுகாப்பாய் பெற்றெடுத்து
பாசமுடன் அவள் அளிப்பாள்.
பாலகனாய் அவனிருந்தால்
பட்டு சட்டை மேலுடுத்தி
பரவசத்தில் மகிழ்விப்பாள்.
பாலகியாய் உருவெடுத்தால்
பச்சை பட்டு உடை உடுத்தி
பாசமுடன் அரவணைப்பாள்.
பகிர்தலில் பங்கமின்றி
பசித்துண்ணும் உணவு முதல்
பாடியாடி உறங்க வைத்து,
பட்டக் கல்வி படித்தோங்க,
பக்குவமாய் வளர்த்திடுவாள்.
பச்சிளம் சிசுக்களைக் 
கையாளும்
பக்குவத்தை 
தாய் வழியே கற்றிருந்தாள்
அடுத்தடுத்த உடன் பிறப்பால்..
பச்சரிசி பல் காட்டி
பரவசத்தில் நடை போடும்
பச்சையுடம்பு சிங்காரி
படத்திலுள்ள பாவாயி நினைவுகளோ
பக்கம் பக்கமாய் நீள்கிறது.
பாவம் நீங்களென – நான்
பார்த்து முடித்துக் கொண்டேன்.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்,
A.M.பத்ரி நாராயணன்.🙏

No comments: