Translate

Friday, January 12, 2018

தொழுதல் எதற்கு?

முகம் நிறைந்த கவலைகளுடன்
மூழ்கியிருந்தது நிறைந்தெங்கும்.
முற்றுபெறா நினைவுகளுடன்
முறையிட்டனர் ஆண்டவனிடம்.

இல்லத்தின் சுகம் மறந்து
இல்லாத சுகம் தேடி
இறைவனை நாடி வந்தார்
இற்றுப்போன நம்பிக்கைகளுடன்.

உறுதியில்லா நிலையாலே
உருக்களோ வடிவின்றி.
உறுத்தும் நிலையாய்
உருக்கொள்கிறது அளவுகளின்றி.

முற்றும் துறந்த ஞானிகளில்லை.
முழுவதும் அறிந்த அறிஞருமில்லை.
முன்னின்று உரைக்க தகுந்தவரில்லை.
முட்டி மோதுகிறது கருவறை அருகில்.

உலகம் சுற்றுவது தன்னிசையெனினும்
உருளுகிறார் மக்கள் சன்னதி முன்னே.
உலையாய் கொதிக்கிறது மனமும் தினமும்
உருள நினைக்கிறது பணத்தில் என்றும்.

முள்மேல் இருப்பதாய் உள்ளம் நினைக்க,
முனைப்பாய் இருந்தார் அதிகமாய் சேர்க்க.
மூழ்கி கிடந்தார் பணிகளை மறந்து
முன்னிலும் கூடுதலாய் வேடங்கள் புனைந்து.

இல்லா பொருளுக்கு உருகுதலைத் தவிர்த்து,
இருப்பதில் மகிழ்ந்து மனமொன்றி ஏற்போம்.
இயங்குதலில் முழுதும் முனைப்புடனிருந்தால்
இருப்பும் தானாய் உயருமே தன்னால்.

நலமுடன் வாழ இறைவனைத் துதிப்போம்.
நாள் தோறும் மகிழ்வாய் *கடன்களை முடிப்போம்.
நல்லுலகம் போற்ற திறமையுடன் இருப்போம்.
நல்லுறவு செழிக்க நயமுடன் உரைப்போம்.

உழைப்பில் நாமும் கவனமுடனிருந்தால்
உடனிருந்து காப்பார் துணையாய் இருந்து.
உண்மையும் நேர்மையும் செயலிலேயிருந்தால்
உயரத்திற்கு வாழ்க்கை தானாய் செல்லும்.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏



*கடன்களை = பணிகளை

No comments: