Translate

Saturday, January 27, 2018

என் தேவதை



பொட்டிடும் என் முகம் பார்த்து
பொன்விழி மலர நீயும்
பிஞ்சு விரலால் என் கைப்பற்றி
புன்னகைப் பூக்கின்றாய்.

இளவரசியாய் உனை வளர்ப்பேன்.
பட்டத்தரசியாய் ஆகுமுன்னே
பலகலைக் கற்றுத் தருவேன்,
பாயும் பெண்புலியாய் மாற்றிடுவேன்.

நீ சிரிக்க, நானழுதால் தெரியாது,
நீ அழுதால் நான் சிரிக்க முடியாது.
உன்னை அடைய
எப்பிறவி புண்ணியம் செய்தேனோ?

உனை அடைந்த நிலை நினைத்தால்
உள்ளம் சுக்கு சுக்காய் நொறுங்குதடி.
பெற்றவளை நினைத்து விட்டால்
என் வயிறு எரியுதடி.

பாவம்
அவள் நிலை யாரறிவார்?
கன்னியவள் கழியாமல்
கரு உனை அடைந்தாளோ?

காமுகரின் கடைச்சரக்காய்
கசக்கத்தான் பட்டாளோ?
காதலென உருவேற்றி
கருவேற்றி பறந்தானோ?

ஆணென பெற்றெடுத்து
தன்னினம் கண்டதால்
கழிவடையென நினைத்து
கழித்துத்தான் விட்டாளோ?

கள்ளிப்பால் கிடைக்கலையோ?
குழி வெட்ட தோதில்லையோ?
கழுத்துத் திருக தோணலையோ?
சாக்கடை ஏதும் அங்கில்லையோ?

விழித்திறக்க நிலையினிலே
குப்பை மேட்டில் உன்னை வீசி விட,
இறைச்சியாக உண்ண நினைத்து
நாய்களும் சூழ்ந்து கவ்வ,

பாலின்றி மயங்கியிருந்தும்,
பல் பட்ட வலியாலே
வீரிட்டு நீ கத்த
வீதி வழி வந்த நான்
விரைந்து வந்தேன் குப்பைக்கருகில்.

பங்காளியாய் எனை நினைத்து
பல்லைக்காட்டி உறுமியது.
பக்கத்தில் கற்களின்றி
பரிதவித்த என் நினைவில்

பட்டதே மணற்குவியல்
பாய்ந்தள்ளினேன் கைகள் நிறைய.
பறக்கவிட்டேன் கண்களை நோக்கி
பலமாய் குரலை எழுப்பியபடி.

தூரமாய் ஓடிய நாய்களனைத்தும்
துரத்திக் கடிக்க துடித்து நின்றது.
பச்சை ரத்தம் வழிந்தோட
தூக்கி வந்தேன் விரைவாக.

இந்த கதை எதுவும் உனக்கு
எக்காலத்திலும் எட்டாமல்
என் தேவதையாய் உனை வளர்ப்பேன்
இறை தந்த வரமல்லவா நீ?


ஆக்கம்:-
தவப்புதல்வன்

A.M.பத்ரி நாராயணன்.

No comments: