Translate

Wednesday, January 10, 2018

யார் உணர்வார்?


குளித்து முடிந்(த்)தேன் தினந்தோறும்
குனிந்த தலை உயர்த்(ந்)திட வழியின்றி.
குருத்து துளிர்க்கும் உணர்வு காணோம்.
குறைகள் ஏதுமில்லை. இயம்பிட்டார் உறுதியாக.

குருகுருக்கும் பார்வைகளால்
குறுகுமே ஓரடியாய் முழு உடலும்.
குருதியிலோடும் உணர்வுகளால்
குதறத்தோன்றும் அனைவரையும்.

குற்றமென்று யாரைச் சொல்ல,
குத்தகைக்காய் எனை படைத்த இறைவனையா?
குறி சொன்னாரே, அவரோ, அடுத்ததாய்?
குறுக்கிட்டு எமையிணைத்த உறவுகளா?

குடும்பத்தில் துள்ளிக் குதித்தேன்,
குமரியாய் ஆனப்பின்னும்
குழந்தையாய் அடம் பிடித்தேன். – அவை
குலைந்து போனது ஓர் நாளில்

குன்றுகளாய் சுற்றியிருந்து
குண்டுகளால் எனை துளைக்க
குறியின்றி அலைகிறேன்
குறிப்பிட்ட ஒன்றுக்காய்.

குறையா(க)க்கி எனை முடிக்க விருப்பமில்லை.
குமைகிறது எனதுள்ளம் பெருஞ்சூட்டில்.
குற்றவாளி கூண்டிலே(ற்)ற நினைக்கவில்லை.
குற்றம் புரிந்தவளாய் பதிந்திடவும் விரும்பவில்லை.

கூட்டி கழித்து பார்க்கின்றேன்
குப்பைகளாய் மனமெங்கும்
குவிந்து கிடக்கும் நினைவுகளோ
குத்துகிறது முட்களாக.

குழப்பங்களோ சேறு போல
குட்டையாய் சேர்ந்திருக்க,
குளத்து நீராய் மாறிடுமோ?
குறை நீங்கி நிறைப்பெறுமோ?

குளவிளக்காய் ஒளி வீச
குருத்தொன்றை தத்தெடுத்தால்
குறைந்திடுமோ வலி சிறிது
குகையிருளில் வழித்தேடி -
மனம் அலைகிறது.

குறுக்கு வழி ஏதுமின்றி
குணமான வழியுரைத்து
குன்றிலேறி தலை நிமிர,
குறிப்பீரோ தங்கமான தகவலொன்றை?

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன் 🙏

No comments: