Translate

Tuesday, September 19, 2017

வீட்டு சிறையினிலே


பாஸ்போர்ட் எடுப்பதில்லை.
விசாவும் கேட்பதில்லை.
அக்கம் பக்கம் ஓட்டையில்லை.
அதிகாரமாய் நுழைகிறது
ஆள் பார்க்கா சமயத்தில்
அகல திறந்த கதவு வழியே.

அண்டிக் கொள்ள இடமிருக்க
அகப்படாமல் தப்புகிறது.
அடுப்பங்கரை மட்டுமல்ல 
அடுக்கியுள்ள எம் சேமிப்புகளையும் 
ஆட்டம் காட்டி 
அச்சமின்றி அழிக்கிறது.
 
அட்டைப்பெட்டி மருந்துகளிலும் 
அமிர்தமே கூடுகளில் 
அள்ளியே வைத்தாலும் 
அதனிடம் பலிப்பதில்லை.
அடுத்தடுத்து உள்நுழைந்து
அடுக்கடுக்காய் ரகளை செய்யும்.

மருந்திட்ட பண்டங்களும்
மருந்துக் கட்டிகளும்
மாயமாய் போய்விட 
மாண்டிருக்கும் என நினைத்தால் 
மாற்றுயிடம் பலவற்றில் 
மறுநாளும் ஆட்டம் காட்டும்.,

நசிந்திருக்கும் என நினைத்து 
நாற்றத்திற்கு காத்திருந்து 
நாள் ஐந்து கழிந்த பின்னே 
நாள் முழுக்க சோதனையில் 
கில்லாடி எலிகளோ 
ரகசியமாய் சேர்த்திருக்கும் 

எங்குமில்லை எலிகளென 
ஏமார்ந்து இருக்கையிலே 
என் மனைவியிடம் வசமாக
ஒரு எலி மாட்டிக் கொள்ள,
போட்டு விட்டார் பலப் போடு 
பரலோகம் சென்றடைய.

பூத உடலைத் தூக்கியவர்,
போட்டுவிட்டார் குப்பை மேட்டில்.
''கிழவனவன் என்று சாவான் 
திண்ணை என்று காலியாக்கும்''
காத்திருந்த எலியொன்று 
குடிபுகுந்து மறுநாளில்.

தொடங்கிய வேட்டையோ 
தொடர்கிறது தினந்தோறும்.
எலிகளின் வரலாறோ 
தொடர்கிறது பெரிதாக.
அடைப்பட்டு இருக்கிறோம் 
அகல பெரிய கதவிருந்தும்.

முற்றிடுவோம் இத்தோடு,
மற்றொரு நாளில் உமை  சந்திக்க.  

 -- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: