Translate

Wednesday, October 30, 2013

பார்வையற்றோர் வெற்றி பெற முடியாதா? - பார்வையற்ற மாற்றுத்திறனாளி திரு. சுப்பிரமணியம்.






'Orbit' Subramaniyam 

பார்வையற்றவராய் இருப்பினும் வாழ்வில் வெற்றியடைய முடியுமென நிருபித்து, பார்வையற்ற பலருக்கும் பயிற்சி அளித்து, வேலை வழங்கி, தலை நிமிர செய்துக் கொண்டிருக்கிறார், திருச்சியிலுள்ள 'ஆர்பிட்' நிறுவனத்தின் செயலாளராக இருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி  திரு. சுப்பிரமணியம்.

பார்வை இழந்தால், வாழ்க்கையே இருண்டு விட்டதென இடிந்து போய் முடங்கி விடாமல், தன்னம்பிக்கை ஊட்டி, மற்ற சாதாரண மனிதர்களைப்போல, தங்கள் சொந்த காலில் நிற்பதற்கு, 1973ல் "ஆர்பிட்"   துவக்கப்பட்டது.

தொடக்கத்தில் ஐந்து (5) பார்வையற்றவர்கள் மூலம், 'சாக்பீஸ்' 'சோப்பு' போன்ற எளிய பொருட்களை மட்டுமே தயாரித்து விற்றோம். பார்வையற்றவர்களால் சரியாக தயாரிக்க முடியாதென எந்த நிறுவனமும் ''ஆடர்களை'' எங்களுக்கு வழங்கவில்லை.

ஆனால், எங்கள் திறமையை உணர்ந்த, திருச்சி  ''பெல்'' நிறுவனம் , கனரக பொருட்களுக்கான ஆடர்களைத் தந்தது. கொடுத்த ஆடர்களை சரியாக முடித்துக் கொடுத்ததால், ஆடர்கள் குவிய ஆரம்பித்தன. 

இதனால், 100 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை தரும் அளவுக்கு வளர்ந்துள்ளோம்.முறையாக பயிற்சிக் கொடுக்கப்பட்டதால், பார்வை உள்ளவர்களை விட, 20 சதவீதம் அதிக திறனுடன் உழைக்க முடிகிறது. காரணம், பார்வையற்றவர்கள் வேடிக்கைப் பார்க்காமல்,  கவன சிதறல் இல்லாமல் பணியாற்ற முடிகிறது.

எங்களது அயராத உழைப்பால், கடந்த 2012ல் ராணிப்பேட்டையிலும் புதிதாக கிளை நிறுவி, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோம். 

2001 மற்றும் 2009ம் ஆண்டிற்கான "சிறந்த தனியார் நிறுவனம்" என்ற விருதினை தமிழக அரசிடம் பெற்றுள்ளோம். 2010ல் உடல் ஊனமுற்றோர் தினத்தன்று, ''சிறந்த நிறுவனம்'' என்ற விருதை ஜனாதிபதியிடமிருந்து பெற்றோம். தைவானில், 2012ம் ஆண்டு, 23 நாடுகள் பங்கேற்ற 'வொர்க்கபிலிட்டி ஆசியா' மாநாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும், 200 நிறுவனங்கள் பங்கேற்றதில், எங்கள் நிறுவனம் சிறந்த நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாராட்டப்பெற்றோம்.

தன்னம்பிக்கையுடைய பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக திகழ்வதுடன், மற்ற பார்வையற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து, பயிற்சி கொடுத்து, வளர்ந்தது விடும் அவரையும், அவர் நிறுவனத்தையும், மென்மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துவோம் நண்பர்களே.  

No comments: