Translate

Thursday, February 15, 2018

கொடுத்த உருவுக்கு நன்றியுடயோன்



செலவில்லா காவல்காரன்.
சோளக்காட்டு பொம்மக்காரன்.
காவலுக்கு கெட்டிக்காரன்.
திருடவரும் ஆட்களுக்கும்,
அச்சத்தை அவன் கொடுப்பான்.
கொத்தும் பறவைகளையும்
தானாக
பயந்தோட செய்திடுவான்.
தலையிலே
ஓய்வெடுக்க அமர்ந்தாலும்
கையத்தூக்கி துரத்தமாட்டான்.

தொழில் உரு மாறிப்போச்சி.
மனித உடுப்பும் மாறிப்போச்சி.
இவன் மட்டும் மாறவில்லை.
என்றுமிவன் சட்டித்தலையன்.
முகம் நிறைய வெள்ளைப் பூசி,
கண்களோ முட்டைப்போல
கருப்பு வண்ண மையிட்டு,
என்றுமவன் நின்றிருப்பான்
கைகளை விரித்தபடி.

வேட்டியிலிருந்து மாறியவன்
கால்சராய் மாட்டிக்கொண்டான்.
அடிச்சாலும், உதைத்தாலும்
ஏனென்று கேட்க மாட்டான்.
கூலி வேண்டும், உயர்வு வேண்டும்
என்றவனும் கேட்க மாட்டான்.
வெயிலிலும் மழையிலும் நனைந்தாலும்,
உள்ளும், வெளியும் நைந்தாலும்
வாய் திறந்து சொல்ல மாட்டான்.
காவலே கடமையென
கண் விழித்து,
கோலொன்றால் நின்றிருப்பான்
மக்கிப்போய் உதிரும் வரை
அவனை யாரும் பொருட்படுத்தார்.
ஐய்யகோ… என்றிருக்கும்
பகுதிகளாய் நைந்து தொங்கும் போது.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: