Translate

Tuesday, February 6, 2018

இயந்திரம் வேண்டாம் மாமா.



அம்மாவின் பக்குவத்தை
அருமை(ழகா)கப் புடுச்சுக்கிட்டே.
அம்மா வளர்த்த என் உடம்பை,
மெருகேத்தி நீயும் விட்டே.
நீயறைக்கும் சாந்துலே
தெரு முனையும் மணக்குதடி.
நீ அரைச்சி அரைச்சி செய்வதாலே
உன் உடம்பும் மினுக்குதடி.
இத்தனை வருச வாலிபமும்
உன் கையால் வந்ததடி \ இருக்குதடி.
பாத்துப் பாத்து அரைப்பதாலே
பாந்தமாய் இருக்குதடி.
கல்லுலே அரைச்சாலும்
சந்தனமாய் இருக்குதடி.
வயிறு நிறைஞ்ச பின்னாலும்,
நாவு இன்னும் கேக்குதடி.
இன்னும் கொஞ்சம் சாப்பிடுனு
தட்டு நிறைய வைக்கயிலே,
என்னால தடுக்க முடியலடி.
ஆசையாய் என் கையாலே,
நீ செஞ்ச சமையலையே
ஊட்டி வீட்டேன் நானுனக்கு
என் மேலே சாஞ்சிக்கிட்டு
சினுங்குறியே அழகாக.
சீண்டி உனை நான் பார்க்க,
சாந்தரைக்கும் நேரத்திலே,
துணைக்கு நானு வரட்டுமானு
சந்தடியின்றி உள்நுழைந்தேன்.
சாந்தரைக்க துணை வேண்டாம்
சந்தடி சாக்குல கைய வெப்ப,
நேரமுனக்கு சரியில்லனு
அருகிருந்த சொம்பத் தூக்க,
அச்சங்கொண்ட பூனப்போல
மெதுவாக பின் வாங்கி நா நடிக்க,
கன்னங்குழிய சிரிக்கும் - என்
கள்ளியடி நீ.
காலையிலே அரைச்ச சாந்து,
படுக்கையிலும் மணக்குதடி.
நாலு புள்ள பெத்த பின்னும்
நங்கையாட்டம் இருக்கிறடி.
அக்கம் பக்கம் ஆட்களெல்லாம்
எனை ஏக்கமுடன் பாக்குறாடி..
எதிர்வீட்டு காந்தாமணி,
கண்ணுலே சாடைக் காட்டி
காரணத்தைக் கேக்குறாடி.
அஞ்சு வீடு அப்பாலுள்ள
அழகம்மா நமுட்டலா சிரிக்கிறாடி.
நானு வர்ர சமயத்திலே
மூக்கு உறுஞ்சி இழுக்கிறாடி.
சண்டைக்கு போயிடாதே
சடுதியிலே தெருவுக்கு.

மக்களெல்லாம் மாறி போயி
அம்மிகல்ல ஏறு கட்ட,
இயந்திரமா மாறிப்போச்சி
இயந்திரமா அவர் வாழ்க்கை.
காசு கொடுத்த பின்னாலும் – நீ
காது கொடுத்து கேக்கலடி.
அதெல்லாம் வேண்டாம் மாமா
தளந்து போகும் என்னுடம்பு.
அரைச்சு வெக்கிறேன் குழம்பு, மாமா
இங்கிதமா சொல்லிப்புட்டே.

சுவையாக செஞ்சு தர்றேன்
சுகமாக நாமிருப்போம்.
நாலு காசு கையிலிருந்தா
கூடுதலா பலமிருக்கும்.
குழந்தைங்க படிக்கட்டும்
குடும்பம் நல்லா வளரட்டும்.
அவங்களுக்கு தோணிச்சினா
அப்ப அது வாங்கிக்கிட்டும்.
அமுத்தலாய் சொல்லியபடி
ஆசையா அணைச்சுக்கிட்டே.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏🙏


No comments: