Translate

Monday, February 12, 2018

வெளுத்திடலாம் வா…..


கல்லுலே அடிச்சு தர்ரேன்
ஆக்கி உனக்கு ஊத்தித் தரரேன்.
அத்தனைக்கும் பின்னாலே
கொடச்சலெனக்கு கொடுக்கரையே.

கண்ட இடத்திலே நீ புரண்டு
கரைகளை பண்ணிக்கிட்டு
கயிறு கட்டிலிலே பாயப்போட்டு
கவுந்து கிடக்கிற எம் மாமோய்…

காலைக் கருக்காலிலே
கழுவிக்கிட்டு புறப்படனும்.
காயவுட்டு கிடக்காதே
கவனிச்சிட்டு படு மாமோய்..

காலும் கையும் வலிக்குது
காலையிலிந்து வேல செஞ்சு
அலுப்பா நாங்கிடக்கேன்.
அமுக்கி விட்டு நீ படுத்தா
அசந்து நானும் தூங்கி புடுவேன்.

ஊரெல்லாம் சுத்தி நீயும்
அழுக்குத்துணி அள்ளிக் கொண்டா.
கொண்டைய முடிச்சி நானும் போவேன்,
அடிச்சு வெளுத்து கொண்டு வர..

பக்கத்திலிருக்க அக்கா கேட்ட,
எப்படி நீ வெளுக்குற
இவ்வளவு வெளுப்பா இருக்குதுனு.
மாமன் செய்யர மாயமுனு சொல்லிப்புட்டேன்
கலுக்குனு சிரிச்சிக்கிட்டு.

கண்ண விரிச்சு வெச்சுக்கிட்டு
வாயப் பொழந்து பாக்கரா
காத்தோட கலந்து வருது
நிசமானு கேக்கர சத்தம்.

ஆத்தாடி வாய மூடு
அங்கிட்டு பாரு,
துணியொன்னு போகுதுனு
அழுத்தி விட்டேன் கையிலே.
அசந்து போயி நிக்குறா
போற துணிய மறந்துப் புட்டு.

ஊரெல்லாம் சொக்குது. – வெள்ளாவி
தனியா வெக்க முடியிலே.
துணைக்கு நீயும் வா மாமோய்
சேர்ந்து நாமும் வெளுத்திடலாம்.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: