ஏட்டிலும் இருக்கு,
எழுத்திலும் இருக்கு,
சொல்லிலே இருக்கு,
ஆனால்,
புரியவில்லையே,
சுதந்திரம் என்னவென்று.
கொள்கை கொள்கையென்று
எட்டு திக்கும் முழக்கம்.
கொள்ளைப் போவதோ
எண்ணிலா பக்கம்.
அடிமையென்றே
சுதந்திரம் பெற்றோம்.
அடிபணிந்தே கிடக்கின்றார்
ஆள்பவரோ ஆட்டுவிக்க.
தடியெடுத்தவன் தண்டல்காரனாய்
கோலெடுத்தவன் கொண்டல்காரனாய்
கோரமாய் போகிறதே - அழகான
கோலமாய் திகழ வேண்டியது.
கொள்ளையடிப்பது சுதந்திரமோ,
கொலை செய்வதும் சுதந்திரமோ,
கற்பழிப்பதும் சுதந்திரமோ,
எதிலும் ஏமாற்றுவது சுதந்திரமோ,
உரசி உரசி பார்த்ததினால்
உணர்வற்றதுவோ இந்தியனுக்கு.
முனையிலே முக்கியெடுக்கிறான்
மீனவரையும் ஒருவன்.
உச்சியிலே இடிக்கின்றார் மத்தளமாய்
உள்ளுக்குள் குடைசலோ ஆயிரமாய்.
மதிப்பிழந்து போகிறதே
திருநாட்டின் பெருமையெல்லாம்.
குளிரிலும் விரைக்காமல்
விறைப்பாய் நிற்கின்றான்
சடலமாய் திரும்புகிறானே
சக்தியற்ற ஆட்சியினால்.
கொந்தளிக்குமோ கோபம் எம் மீதும்
சுட்டிக் காட்டி சொன்னதினால் !
உறைக்காதோ இருக்கின்ற நிலை
உள்ளமும் பொங்கி எழுகாதோ ?
குழித்தோண்டி புதைத்தாலும்
குமறுவதில்லை எரிமலையாக.
பாதைத்தேடி அலைகிறான்
பாவம் அப்பாவி இந்தியன்
ஓடுகிறது நெருப்பாறு இணையாக
ஒரு பக்கமோ தொடர்கிறது பள்ளத்தாக்கு
ஒரு வழிப்பாதையாய் மலை மீது
ஒடுங்கியே செல்கிறான் கவலையோடு.
ஒப்பற்ற புகழ் பெற்று
ஓங்க வேண்டும் அவன் நிலையும்.
ஒளி பொழியும் சூரியனாய்
ஒளிர வேண்டும் அவன் வாழ்வும்.
சுதந்திரத்தைப் புரிந்துக் கொள்வோம்
கூட்டுறவாய் இணைந்துக் கொள்வோம்.
கோபுரமாய் உயர்ந்து நிற்க, எடுப்போமே
இந்நாளில் மீண்டும் உறுதியினை.
இனிய இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
உங்களில் ஒருவனாய்,
தவப்புதல்வன்.
No comments:
Post a Comment