Translate

Thursday, July 23, 2015

ஓ ஓ... ஐயோ பாவம்.... நானா அதுவா?

சுரங்கம் தோண்டிய எறும்புகள்

என்ன, எறும்பு என்றால் தனது வாழ்விடத்திற்காக சுரங்கம் தோண்டத்தான் செய்யும்.
இதிலென்ன பெரிய தகவல்/ செய்தின்னு நீங்க நினைக்கலாம். வாசித்து பாருங்களேன்.

எங்கள் வீட்டின் தாழ்வாரத்து தரையில் (போர்டிகோவில்)  
ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு ஊர்ந்து
சென்றுக் கொண்டும் வந்துக்
கொண்டுமிருக்கும். வீட்டிலிருந்தோ, வெளியிலிருந்தோ வந்து செல்பவர்கள்,
மிதித்தும், தாண்டியும் சென்றுக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எந்த பிரச்சனையும்
இல்லை. ஆனால், எனக்கு அப்படியா, தவழ்ந்தோ நகர்ந்தோ செல்ல வேண்டுமே!

ஒவ்வொரு முறையும் அப்படி சென்று வரும்போது,
ஜைன மதத்துறவிகளைப் போல, நான் அவ்வரிசையை கடக்கும்போது
இந்த பக்கம், அந்த பக்கமென்று கால் மேதியடியால் ஒதுக்கிவிட்டு சென்று வந்தேன்.
ஆனாலும் தங்கள் இனத்தை அழிக்கின்ற, நசுக்குகின்ற ராட்சதனாக
நினைத்துக் கொண்டு, எமது கால்களிலும், துடைகளிலும் மற்றும்
வெளி சொல்ல முடியாத இடங்களிலும்,
தனது கூறிய பற்களால் / வாயால் கடித்து ரணகளப்படுத்திக் கொண்டிருந்தது.

இத்தொந்தரவை பொறுக்கமுடியாமல்,
இந்த எரும்புக் கூட்டத்தை ஒழித்து விட வேண்டுமென்று,
நான் கடக்கும் இடத்தை விட்டு விட்டு, மருந்து தெளித்தேன்.
ஆஹா ஒழிந்தது இனி வராது என நினைத்தால், சில மணி நேரங்கள் அல்லது மறுநாள்
மருந்து தெளித்த இடத்தை விட்டு சிறிது தள்ளி
மீண்டும் புதிய வரிசை ஆரம்பமாகி இருக்கும்.
விடுவேனா என்று நான் மருந்து தெளிக்க, அது சிறிது தள்ளி புது வரிசை கட்ட,
இப்படியே நாட்கள் கடந்து, அது படிகளின் இணைப்புகள் இடத்தில் ஓரமாய் சென்றுவர,
நான் படிகளில் இறங்கி ஏறும்போது, என் துணிகள் பட்டு அதன் வரிசை கலைந்தது, கோபம் வந்தது,
பிடித்து கடித்தது. மீண்டும் எங்களுக்குள் யுத்தம் துவங்கியது.

நான் மருந்து தெளிக்க, அது படிகள் மாற, இப்படியே கீழும் மேலுமாக மாறி,
போராட்டம் எங்களுக்குள். ஒவ்வொரு முறையும் கடக்கும்போதும் கவனிப்பேன். அப்படியிருக்கையில்,
இரண்டு நாள் வெளியூர் பயணம் முடிந்து, வீட்டுக்குள் நுழையும்போது
பார்த்தேன் எறும்பு வரிசை காணோம். ஒரு வேளை தூங்கி ஓய்வேடுக்கிறதோ,
நாளை காலை பார்ப்போமென முடிவெடுத்தபடி உறங்கிப்போனேன். மறுநாள்
காலை பார்த்தேன், சுவற்றில் எறும்பு வரிசை இருந்தது. பார்த்தால் அது வாசற்படி
மரச்சட்டத்தை ஒட்டியபடி சுமார் ஒரு அடி உயரத்தில் நுழைந்துக்
கொண்டிருந்தது, வாசற்படியின் அடுத்த பக்கமும் ஒரு வரிசை சென்று
வந்து கொண்டிருந்தது.

அட இது எங்கிருந்து என பார்த்தால், வாசற்படியின் எதிர்புற மரச்சட்டத்தில் வெளிய வந்து உள்  
சென்று கொண்டிருந்தது. அதுவும் எதிர் சட்டத்தில் எந்த உயரத்தில் துளை இருந்ததோ,
 அதே உயரத்தில் துளையைக் கண்டதும் விழிகள் விரிந்தது.
அப்பாடி ஒரு வழியாய் சுரங்கம் அமைத்து விட்டது. சண்டை ஓய்ந்தது.
இனிமேல் வாசலைத் தாண்டும்போது கடிபட்டு அவதிப்பட தேவையில்லை
என நான் நினைக்க, இந்த ராட்சனிடம் மாட்டி நம் கூட்டம் சாக வேண்டியிருக்காது என
அதுவும் நினைத்திருக்கலாம்.

ஆஹா... இந்த நிலை ஒரு சில நாட்கள் மட்டுமே. படியில் புதிதாய் ஒரு வரிசை கண்டதும்,
இது என்ன சோதனை? என்ன ஆனது? ஏனிந்த நிலையென பார்த்தால்,
நதியில் கிளை பிரிவதுபோல பிரிந்து, இந்த பக்கம் வந்தபிறகு,
அந்த வரிசையில் இணைந்தது கூடுதுறை போல.
சுரங்க பாதையில்  டிராபிக் ஜாம் போலிருக்கிறது. ஓ ஓ...  ஐயோ பாவம்.... நானா அதுவா?




No comments: