Translate

Wednesday, August 22, 2007

கறைகள் கலையுமா ?

பொருப்பிலும் கையூட்டை எதிர்பார்த்து,
பெறுவதில் கண்ணாக,
கடமையையும் தவறவிட்டு,
விபரீதம் பல புரிந்து,
வீணர்களாய் வாழ்கின்றார்.
வீரர்களாய் இல்லாமல்.
கற்றுத் தந்த பாடங்கள் காற்றிலோட,
களவாட கற்றுக் கொண்டார்,
காக்க வேண்டிய இடத்திலிருந்தும்.

பொருள் ஒன்றே குறியாக
பொறுப்பு அதுவே தமதென
பொறுப்புகளைத் தள்ளி விட்டு
பொறுப்பின்றி பணிகளை
புறந்தள்ளி வைத்து விட்டு
காலம் தள்ளும் போக்கிலே
கவலையின்றி செயல்பட்டு
காலந்தனை காட்டி விட்டு
கடமைகளை நிறுத்தி விட்டு
கலைந்துத்தான் செல்கின்றார்
காரிய ஆலயத்திலிருந்தே.

மாசுக் கொண்ட மனங்கண்டு
இரத்தம் சிந்தும் நல்லிதயங்கள்
இன்றும் பல இருந்தாலும்
மாசுக் கொண்ட மனங்களினால்
பரந்துள்ள பாரதத்தின்
விரிந்துள்ள காட்சிகளில்
கறைப் படிந்த இடங்களே
பளிச்சென்று தெரிகிறது.

இந்த நிலை மறையுமோ
என்று தான் மாறுமோ
கொடுப்பதிலும் பெறுவதிலும்
இல்லையென்ற நிலையினையே
இக்கணமே உறுதியினைக் கொள்வீரே.
ஏக்கத்தின் கீழிருக்கும்
பாரதத்தின் புதல்வர்களே !
பாரெங்கும் புகழ் பாடும்
உம் செயல் படுத்தும் முடிவு கண்டு.

No comments: