Translate

Sunday, June 8, 2014

உலக சாதனைக் கவியரங்கத்தில்- 2 - அன்னைக்கு சமர்ப்பணம்.




எமது தாயார் எமக்கு கூறிய வார்த்தைகளில் ஒன்று:-
  
   அறிந்த உறவினர்களும், நண்பர்களும் பாராட்டுவதை விட, நம்மை அறியாதவர்கள் நம்மைப் பற்றி பேசுவதும், பாராட்டுவதுமே பெருமை மிக்கதும், நாம் பிறப்பெடுத்ததற்கு ஒரு அடையாளமுமாகும் என்பார். அவ்வகையில் யான் உலக சாதனை கவியரங்கத்தில் கலந்துக் கொண்டு, கவி வாசிக்க கிடைத்த இந்த பேற்றை அவர் நினைவுக்கு சமர்ப்பணம் செய்கிறோம்.



இவன் தான் கவிஞன்

ஆற்றலையும் ஆற்றாதுழல்வதையும்


அழகாக வெளிப்படுத்த,

இன்பங்களையும் துன்பங்களையும்

தனியாளாய் துடைக்க செய்து,

உள்ளிலிருக்கும் திறமையை

ஊக்குவித்து செயல்படுத்த,

கருத்தாழம் கொண்டு, அவன்

கவிதைகளாய் படைத்திடுவான்.


வண்ணங்களை கலந்தே, அவர்

கண் பறிக்கும் ஓவியமாய்

காட்டிடும் ஓவியரைப்போல் ,

வாயசைக்கும் வார்த்தைகளை

மனம் இலயக்கும் கவிதைகளாய்

வரிசைப்படுத்தும் கவிஞனிவன்.



சிற்பியவன் செதுக்கி வைப்பான்,

சிற்றுளி கைக்கொண்டே.

கவியிவன் பாட்டிசைப்பான்

மொழியினைத் துணைக்கொண்டே.


வீணையின் தந்திகளோ

ஒலியெழுப்ப இசையாகும்.

இக்கவியின் வார்த்தைகளோ

கவியாகி உமையிழுக்கும்.


பேசுகின்ற மொழிகளுக்கு அழகு செய்வான்.

மொழியின் பொருளுக்கோ வளம் சேர்ப்பான்.


செல்லுமிடமெல்லாம் நல்ல -

கவிதைகளை இறைத்திடுவான்,

மொழியறிந்த மாந்தரெல்லாம்,

சுவையறிய செய்திடுவான்.


கற்பனை கனவுகளில் தவழுகின்ற
எம் கவிஞர் திருகூட்டம்,
நிசமான நிகழ்வுகளில் நீந்துகின்ற
கூட்டமுமாகுமிது.

No comments: