உயரமாய் உடல் வளர,
சிறுமியாய் நான் இருந்தேன்.
பூப்பதிலே குறையிருக்க,
தாமதமாய் நான் பூத்தேன்.
பெருமூச்சுடன் மகிழ்ந்தனரே
வாழ்வுக்கு வழி பிறந்ததென்று.
எம் மகிழ்வோ மாறுபட, ஈடுப்பட்டேன்
கல்வியே வாழ்க்கையென்று.
எண்ணங்கள் சிதைந்ததம்மா,
என் தாயின் வடிவிலது.
நோயினால் அவள் துவள,
அடுப்பெரிக்க போனேனே.
காலங்கள் தேய்ந்தோட,
முதிர்க்கன்னியாய் நான் மாற,
கைப்பிடித்தால் போதுமென்று,
வந்தவனை நோக்கவில்லை.
திட்டங்கள் தீட்டியவனாய்- எனை
வீட்டுச்சிறையினிலே பூட்டி விட்டான்.
சிந்தித்தே பிடித்தானோ
சிறைக்கு இவள் சரியென்று.
புரியாத புதிருக்கெல்லாம்
விடைக்கிடைத்தது சில நாளில்.
தன் குறையை மறைத்தானே,
என் கரத்தை பிடித்தவனும்.
வருடங்கள் கழிந்த பின்னும்
பூச்சிபுழு இல்லை என்று
வருத்துத்தான் எடுத்துவிட்டார்,
எம்மிதயத்தை கூறுப்போட்டு.
கரம் பிடித்தவனின் குறை இதுவென,
எப்படித்தான் இயம்பிடுவேன் இந்நிலையில்.
ஆண், பெண் இருவரையும்
கரம் கூப்பி கேட்கின்றேன்.
நிலை உணரா நிலையினிலே,
வாயில் வந்த சொல் பேசி,
எமைப்போன்ற பிறவிகளின்
இதயத்தைக் கிழிக்காதீர்.
நடைப்பிணமாய் வாழ்கின்றேன்,
மலடி என்ற பெயரைத் தாங்கி.
எனக்கெதுவும் அமையவில்லை
வாழ்விலே சரியாக.
இறைவனின் படைப்பில்
அல்லல் படும்,
மோகன சுந்தரி @ யவன சுந்தரி.
No comments:
Post a Comment