உன்னிலே உதித்த போதே
உறவுகளின் தொடக்கமம்மா.
மாதங்கள் பத்து சுமந்தாயே,
மரணத்தை நொடி பத்தில் அளித்தாயே.
பெண்ணாய் நீ இருக்கையிலே,
பெண்ணெனை காக்க மறந்தாயே.
உனை வளர்த்த உதிரத்தை
எனக்காக நீ கொடுத்தாய்.
உன் உதிரம் நானென மறந்து,
உதிர்த்துத்தான் விட்டாயே.
உனக்கிருக்கும் ஆசைத்தான்
எனக்கும் தான் இருக்காதோ.
காமத்திலே உமை இழந்தீர்.
காப்பதற்கு எமை மறந்தீர்.
அறியாமல் நாங்கள் உதித்ததிற்கு
அழித்தீரோ எமை, தண்டனையாய்.
{அளித்தீரோ எமக்கு தண்டனையை.}
பெற்றோர் உரிமையென நினைத்து
பெரும்பாவி ஆனீரே எமைக் கொன்று.
அப்பாவிகளாய் உம் கருவில் உதித்ததினால்
பெருந்தண்டனை அடைந்தோமே.
பாலோ வெளுத்திருக்க,
உம் மனமோ கருத்திருக்க,
பாலிலே நெல் கலந்து
பறித்தீரோ எம் உயிரை.
புண் தீர்க்கும் மருந்தாக
கள்ளிப்பாலிருக்க,
உயிர் போக்கும் மருந்தாக
கொடுத்தீரே எமக்குத்தான்.
நீச்சலறியா எம்மையும்
நீரிலே மூழ்கடித்தீர்.
மண் வாசனை அறியுமுன்னே
மண்ணிலே ஏன் புதைத்தீர்?
நாற்றமென எமை நினைத்தோ
குப்பையிலே வீசிச் சென்றீர்.
கொஞ்ச வேண்டிய எமை
கொடும்வெயிலில் போட்டு சென்றீர்.
மூச்சடங்கி போகவென
மூட்டைக்கட்டி போட்டு சென்றீர்.
மேடுபள்ள வாழ்வென என நினைத்து
தோண்டினீரோ பள்ளமதை நீர் எமக்கு.
முள்ளிலும் கல்லிலும் காயம் பட்டு
எறும்புகளும் பூச்சிகளும் எமை ருசிக்க,
உணவென எமை நினைத்தே
நாய்களும் கடித்துதற,
காத்துக் கொள்ள வழியின்றி
கதறித்தான் துடித்தோமே.
பசிப் போக்கும் பால் வேண்டி
குரல் கொடுத்தேன் அம்மாவென.
அம்போவென போட்டு சென்றீரே
எமை விட்டு வெகுதூரம்.
இறைவனிடம் பிறவி கேட்பேன்
இப்புவியிலே மீண்டும் பிறக்க.
வரமதை வேண்டி நிற்பேன்
உம் உயிரை எம் மடி சுமக்க.
கொஞ்சி நான் மகிழ்விப்பேன்
நான் இழந்த சுகத்தையெல்லாம்.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சேர்த்துத்தான்,
உறவுகள் அனைவரையும் இணைத்துத்தான்,
சொல்ல விரும்புகிறேன் ஒன்றைத்தான்,
செவிக் கொடுத்துக் கேளுங்கள் இதையும் தான்,
கொல்லவென்றே சுமக்காதீர் எமையும் தான்.
உடல்பசி ஆறவென்றே நீர் இணைந்தீர்
உண்டான எமை அழிக்க ஏன் துணிந்தீர்?
இனிய பெற்றோராய் நீர் விளங்க,
உம் செல்லங்களாய் நாங்கள் வளர,
யோசிப்பீர் இணையுமுன்னே எமைத் தடுக்க.
தீட்டாதீர் திட்டங்களை எமை அழிக்க.
அழிக்கவே கருவுகளை சுமக்காதீர்,
இயற்கையின் நடப்பென்றே ஏற்பீரே.
விருப்பமின்றி உதிப்பதை தடுத்திடவே
முறையாக செயல்பட்டு தடுப்பீரே.
ஐய்யகோ.........
எப்படி சொல்வேன் இதற்கும் மேலே.......
No comments:
Post a Comment