Translate

Thursday, March 1, 2018

உனைப்போற்றச் சொல்லிக் கொடு.





தங்கத்தமிழன்னை
தமிழால் நீயென்னை
தாங்கிடு உன் பொற்கரத்தால்,
தந்திடு அமுதமாய் தமிழ்தன்னை.

சொல்லாற்றலில் நான் சிறக்க,
சிந்தனையில் புகுந்து கொடு.
தரணியெல்லாம் நனையட்டும்
உன் செழுமையான மொழியாலே.

ஞாலம் சுற்றியும் நீ படர்ந்திருக்க,
நாணி யவர் தலை குனிய,
குனியும் போது குத்தும் ஊருக்குள்ளே
தலை நிமிர்ந்து நீ உலாவ
எனக்குமொரு வாய்ப்புக் கொடு
பாவினால் புரட்டியெடுக்க.

பூவுலகம் வியக்கும் மொழிகளில்
செம்மொழியாய் நீ இருக்க,
செழுமையாய் என்றும் நிலைத்திருக்க,
தமிழன்பர்கள் பிரம்மாக்களாய் வடிவமைக்க,
ஏட்டிலும் எழுத்திலுமின்றி
பிரபஞ்ச துகள்களிலும் நீ மிளிர,

இலக்கணப் பெருங்கடலில்
இயங்குமுன் சொல்லடைகள்.
வற்றாதப் பெருமூ ற்றாய்
சொக்கும் சுவை நீயளிக்க

அறிவுக்கே அரசியானாய்
கண் திறக்கும். கடவுளானாய்
முடி சூடா பேரரசி
உனக்கில்லை ஈடரசி.

வாய் சொல்லில் உனை மெல்லும்
தான்தோன்றியோர் உண்மையறிய,
உம் வாரிசுகளாய் எமையேற்று
உயிர் தந்தருள் அமுதூட்டி..

எழுத்திலே உனைத்துறந்து,
மொழி மாற்றி
எண்ணங்களை புனைந்துரைக்கும்,
எத்தர்களுக்கு சொல்லிக் கொடு.
உன் வளைவுகளை வரைந்திட,
உணர்வுகளைக் கொடுத்து விடு.
தாயிக்கு பின் தாயான தமிழே,
தன்னிகரற்ற உன் முன்னே,
மெய்யாய் சரண்டைந்தேன்
மெய் முழுதும் புவனம் தழுவ.


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: