Translate

Monday, April 28, 2014

அவசரத்திற்கு உதவா தொலைப்பேசி எண்கள்



அரசாங்கத்தாலும், அரசு தொலைப்பேசி நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், ஏர்செல், ஏர்டெல், வோடாபோன், எம்டிஸ் மற்றும் பல தனியார் தொலைபேசி நிறுவனங்களும்  மக்கள் அவசர பயன்பாட்டிற்காக பல  இலவச மற்றும்  சேவை தொலைப்பேசி எண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆனால் அந்த வசதியை பயன்படுத்திக் கொள்வதில், பல சமயங்களில் மிக சிரமம் தான். ஏனென்றால் அந்தந்த நிறுவன தொலைப்பேசிகளில் தான் பயன்படுத்தமுடியும். வேறு நிறுவன தொலைப்பேசிகளிலிருந்து மற்ற நிறுவனங்களின் நமது தொலைபேசி  இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பது பற்றியோ, குறை நிறைப்பற்றியோ, வேறு நிறுவனங்களுக்கு, அவர்களின் கட்டணங்கள் மற்றும் சேவை பற்றி அறிந்து கொள்ளவோ அல்லது அரசாங்கத்தால் மக்களின் அவசர பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ள எண்களையோ பயன்படுத்த முடிவதில்லை.

உ -ம்:
1) அவசர எண்களான 100 - போலீஸ் , 101- தீயணைப்பு, 108 - ஆம்புலன்ஸ் போன்ற  பல அரசு சேவை எண்களை, அரசு நிறுவனமான  பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தொலைப்பேசிகளில் மட்டுமே தொடர்புக் கொள்ள முடியும். அதன் மற்றொரு இணைப்பான கை(அலை)ப்பேசிகளில் பயன்படுத்த முடியுமா என்பதை  யாமறியோம்.  ஆனால் மற்ற தொலைபேசி நிறுவனங்களில் பயன்படுத்த கண்டிப்பாக பயன்படுத்த முடியாத நிலையே.

2) ஆம்புலன்ஸ், பிராணி நல தொலைப்பேசி எண்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டுதா இயங்குகிறது. அதனால் உடனடி சேவையாற்றுவதில் சிறிது தாமதமேற்படுகிறது. மற்ற எண்களைப் பற்றி யாமறியோம். மேற்கண்ட எண்கள் எமது அனுபவத்தில் தெரிந்ததால் குறித்துள்ளோம்.

உ-ம்: எமது தந்தையார் மாரடைப்பினால் மாரனமடைந்து விட்டதை அறியாத நிலையில், தனியார் நிறுவன கைப்பேசி இணைப்பு இருப்பதால், அவசர நிலையில் அதிலிருந்து அரசு  ஆம்புலன்ஸுக்கு தொடர்புக் கொள்ள முடியவில்லை. அரசு நிறுவனமான  பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தொலைப்பேசி தரை வழி இணைப்பு இருந்ததால், நல்லவேளை என கருதி அதில் தொடர்புக் கொண்டபோது, ஆயிரத்தெட்டு கேள்விகள். வீட்டு விலாசத்துடன் முக்கியமான அடையாளங்களை தெரிவித்தும், அது எங்கிருக்கிறது என கேள்விகள்.
ஒரு கட்டத்தில் யாம் வெறுப்படைந்து, ஐயா முக்கியமான அடையாளங்களை சேலத்தில் தெரிவித்தும் தங்களால் அறிய முடியாவிட்டால், தூரப்பகுதிகளை அறிந்து, உங்களால் எப்படி உதவமுடியுமென கேட்டதற்கு, நாங்கள் சென்னையிலிருந்து பேசுகிறோம், சேலத்தில் தெரியாதே என்றார்கள். அவசர உதவி கேட்டால், அறியாத ஊரிலிருந்து உதவமுடியுமா?

ஒரு இடத்திலிருந்து அழைப்பு வந்தால், அடுத்த நொடியே எங்கிருந்து அழைப்பு வருகிறது என்று அறியக்கூடிய வகையில் எவ்வளவோ மின்னணு வசதிகள் வந்துவிட்ட பிறகும் இப்படியா?  அழைப்பு வந்தால் தானாக அந்த இடத்திற்கு அருகில் இருக்ககூடிய உதவி மையத்திற்கு அழைப்பு செல்லும் வகையில் அமைக்க முடியாதா? இதனால் எத்தனையோ விபத்துக்களையும் விபரிதங்களையும் தடுக்க முடியுமல்லவா?

எத்தனையோ புதுபுது சட்டங்களை இயற்றி நாட்டை நிர்வாகிக்கின்ற  அரசு, அரசாங்க நிறுவனம் மற்றும் அனைத்து தனியார் தொலைப்பேசிகளின் இலவச, சேவை மற்றும்    அரசாங்கத்தின் சேவை எண்களை , அனைத்து தொலைப்பேசி நிறுவனங்களும் ஏற்று செயல்படுத்த அவசர உத்திரவு இட்டால் மக்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும். இதை உணர்வார்களா? உணர்ந்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவார்களா?

No comments: