Translate

Saturday, July 12, 2008

மணமகளை பார்த்த படலம்

உடலோ இங்கிருக்க,

மனமோ அங்கிருக்க

நடக்கின்ற நிகழ்வுகளை,

கைப்பேசி உதவியுடன்

கேட்டுணர்ந்த செய்திகளை

வண்ணமிகு காட்சிகளாய்

ஓடிடும் திரைபடமாய்

கற்பனையில் உருவாக்கி

களித்திடும் நிலையினிலே

காட்சிகளாய் விவரிப்போம்

நீங்களும் செவிமடுத்து

கேட்டுத்தான் இன்புறுங்களேன்.

காட்சி - 1.

நாட்கள் பல கழிந்த பின்னே,

ஒன்று கூடிய உறவினமோ

நடந்த பல நிகழ்வுகளை

நினைத்து, அதை அசைப்போட்டு

ஆனந்தமாய் உறவாடி

கலகலக்க செய்து கொண்டு,

இரவு பயணத்தையும்,

பகலாக ஆக்கிக்கொண்டு,

நெடுநேரம் கழிக்க,

உடலோ ஓய்வு கேட்டு

கண்களையே கிறங்க வைக்க

ஓடும் வண்டியிலே அமர்ந்தபடி

சிற்றுறக்கம் செய்தனரே.

காட்சி - 2

பயணித்த வாகனமோ,

மணமகளை நாடியே

மணமகனையும்

சுமந்துக் கொண்டு

மேடுப்பள்ள சாலையிலும்

சளைக்காமல் ஓடிச் சென்று

அதிகாலைப் பொழுதினிலே

நகரத்தை அடைந்ததுவே.

கண் விழித்த உறவினமோ,

சுறுசுறுப்பை அடைந்திடவே

சுவைக் குழம்பி வேண்டியே,

குழம்பியகம் தேடியே - கண்களை

அலைப் பாய விட்டனரே.

குளம்பியகம் கண்ட

மகிழ்ச்சியதில்,

கூப்பாடு போட்டதில்,

அதிர்ந்துத்தான் போனதே,

வண்டியும்

குலுங்கித்தான் நின்றதே.

காட்சி - 3.

அவரவர் விருப்பந்தனில்

குழம்பிகளை தேர்ந்தெடுத்தும்!

செல்ல வேண்டிய இடங்குறித்து

உடன் கேட்ட அறிவிப்பால்,

வாய் பொருக்கா சூடிருந்தும்

மனம் விரும்பிய ஆவலினால்

ஊதி ஊதிக் குடித்தனரே.

வேகமாய் -

உறுஞ்சித்தான் குடித்தனரே.

குழம்பிகளை குடித்த பின்னே,

உற்சாகம் வந்த நிலையில்

உடலையும் கைகளையும்

முறுக்கியே உதறி விட்டு,

செல்ல வேண்டிய இடங்குறித்தும்,

செய்ய வேண்டிய செயல் குறித்தும்

திட்டங்கள் தீட்டியபடி

பயணத்தைத் தொடர்ந்து,

இடமதை அடைந்தனரே.

காட்சி -4

சந்துபொந்து பல திரும்பி,

மண்டபத்தின் முன்னதுவே

மணமகனை இறக்கி விட்டு,

ஓயாமல் ஓடி வந்த

வண்டியும்-

களைப்பதனை நீக்கிக் கொள்ள

மகிழ்ச்சியாய் பெருமூச்சை

பலதடவை வெளியிட்டு

இடம் பார்த்து ஒதுங்கியது.

தங்குமிடம் அடைந்ததுமே,

காலைக்கடன் முடித்து கொண்டு,

உடலும் வாயும் கழுவி விட்டு,

ஒப்பனைகள் செய்து கொண்டு,

விரைந்தனரே-

சிற்றுண்டி அருந்திடவே.

காட்சி-5.

சிற்றுண்டி முடிந்த பின்னே,

சிறுபொழுது கழிந்த பின்னே,

மணமகளும் தனைக்காட்ட,

மணமகனை நாடி வந்தாள்,

இருந்த இடம் தேடிவந்தாள்.

இருவீட்டு உற்றாரும் உறவினரும்

புடை சூழ்ந்து பார்த்திருக்க,

அண்ணநடை பயின்ற மகள்-

அரங்கிற்கு, உள் நுழைந்தாள்.

மணமகளைக் கண்டிடவே

காத்திருந்த மணமகனும்,

கண்கொத்தி பாம்பாக

விழிகளையே அசைக்காமல்,

வைத்த விழி மாறாமல்

அவளழகை பார்த்திருந்தான்.

மணமகனின் நிலையறிய

குனிந்த தலையை சிறிதுயர்த்தி

மீன்விழியை ஓட விட்டாள்,

மின்சாரம் பாய விட்டாள்.

விழி நான்கும் ஒரு நொடியே

சந்தித்து பிரிந்தாலும்

உற்றதுணை நமக்கிதுவே

என்றநிலை எடுத்துக் கொண்ட

அவன் முகத்தில்

ஒளிவெள்ளம் பாய்வதையே

கண்டு கொண்டவளோ,

மணமகனை பார்த்தபடி,

ஆனந்த வெள்ளமதில், முகமோ

செவ்வொளி படர்ந்தபடி,

விண்மீன் நிலைப்போல

கண்களையே சிமிட்டி- அவள்

புன்முறுவள் பூத்தாளே.

காட்சி-6

நாமிருவர் இணையும் வரை,

உற்றதுணை இதுவென

கைப்பேசி ஒன்றதனை

ஆவலுடன் பரிசளித்தான்.

என் நினைவு அகலாது

என்றுமே இணைந்திருக்க

அவன் விரலில்- அவளும்

கணையாழி ஒன்றினையே

அணிந்துத்தான் விட்டாளே.

விடைப்பெற்ற நேரத்திலே

கையசைத்த மணமகனை

கண்டு அவள்,

கையசைக்க தயங்கி நின்றாள்.

பிரியவே மனமின்றி,

சில நொடி கடந்த பின்னே,

சிறிதாக கையசைத்தாள்,

விழிகளில் ஏக்கம் காட்டி.

1 comment:

vetha (kovaikkavi) said...

மணமகள் படலம் தொடரட்டும் வாழ்த்துகள். ..
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com