Translate

Tuesday, January 20, 2009

மனத்தில் பட்டது

யாரும் கவிஞனாகலாம்

ஒரு முறை கவிஞர். திரு.வைரமுத்து அவர்கள் இதழொன்றிக்கு பேட்டி அளித்திருந்ததில், மளிகைக் கடையில் பொட்டலம் கட்டும் பையன் கூட, பொட்டலம் கட்டும் காகிதத்தில் நாலு வரி எழுதி கவிதை என்கின்றான் என பேட்டி அளித்திருந்தார். இக்கருத்திலிருந்து நான் வேறுபடுகின்றேன்.
மளிகைக்கடையில் பொட்டலம் கட்டும் பையன் கூட பொட்டலகாகிதத்தில் நாலுவரியை கவிதையென்ற பெயரில் எழுதுவதற்கு ஒரு ஆர்வமும், அதற்கு ஒரு வடிகாலாய் தமிழ் மொழி இருப்பதை கண்டு பெருமைக் கொள்கிறேன்.
கவிதையாகட்டும்,கதையாகட்டும், வேறு எந்த படைப்பாகட்டும் நம் சமுதாய பண்பாட்டுக்கு ஏற்புடையதான வகையில் தமிழில் அமையப்பெறின் செம்மையான தமிழ்மொழி திக்கெட்டும் பரவ ஏதுவாகும். படைப்புகளில் குறையிருப்பின், மாற்றி திருத்திக் கொள்ள தக்க வகையில் வழி நடத்தும் ஆசிரியப்பணியையும் மேற்கொள்ளலாமே. இதுதான் என் வேலையா என்றால், வேறு எப்படி சொல்ல?. பள்ளியில் சேர்ந்து அனா, ஆவன்னா எழுத படிக்க கற்றுக் கொள்ளும்போதே அக்குழந்தைக்கு இலக்கணத்தை போதித்தால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா? கற்றுக் கொள்ளத்தான் முடியுமா? அவர்கள் எழுதுவதை தட்டிக் கொடுத்து திருத்தியமைக்க ஊக்கப்படுத்துவதை விட வேறு வழி புலப்படவில்லை. ஒரு தச்சனோ, சிற்பியோ அல்லது வேறு வகை கலைஞர்களோ, புதிதாய் கற்றுக் கொள்பவனைப் பார்த்து ''நீ செய்வது சரியில்லை, என்னிடம் விட்டுவிடு'' என்று சொன்னால் ,அவன் எப்படி கற்றுக் கொள்வது? அந்த சிறந்த கலைஞனுக்கு அடுத்து படைப்பதற்கு யார் இருப்பார்கள். எந்த ஒரு கலைஞனும் பிறவியிலேயே கலைஞனாக பிறப்பதில்லை. அவனும் அனா, ஆவன்னாவிலிருந்து தான் வந்து இருக்க வேண்டும். ஆனால் பிறவி கலைஞன் எனப்படுபவன் மற்றவர்களை விட கூடுதலான விரைவுடன் தேர்ந்திருக்கலாம். அதற்காக மற்ற கலைஞர்களையோ, கலைஞனாக முயற்சிப்பவனையோ விமர்ச்சிக்க முடியாதல்லவா!
இவருக்கு கிடைக்க வேண்டிய திரைப்பட கவிதை வாய்ப்புகள் தவறிப்போனதாலோ, தகுதியில்லா நபர்கள் அந்த வாய்ப்பைத் தட்டிப் பறித்ததால் ஏற்ப்பட்ட கோபமோ தெரியவில்லை. அப்படி இவருடைய வாய்ப்பை தட்டிப் பறித்தவரும் மளிகைக்கடையில் பொட்டலம் கட்டும் பையனாக இருந்து, திரைப்பட கவிஞனாக உருப்பொற்றவரோ என்னவோ !. தற்போதய சில,பல திரைப்பட பாடல்களின் பாடல் வரிகளின் அர்த்தங்களே புரிவதில்லை. அப்படியே புரிந்தாலும் விரசமான, மிக கேவலமான நம் சமுதாய கலாச்சாரத்துக்கு ஏற்புடையில்லாத வார்த்தைகள், ஒலிகள், அங்க அசைவுகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
மனத்தில் படுவதையும், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் எழுத வேண்டுமென்ற ஆவல் சிறு வயதிலிருந்தே உடையவன் தான். ஏனோ ஒரு தயக்கம். உதாரணமாக கவிஞர் திரு.வைரமுத்து அவர்களுடய பேட்டியைப் படித்தே மூன்று நான்கு வருடங்களாகிறது, என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்பொழுதே எழுத தோன்றிய எண்ணம், இப்பொழுதுதான் உருப்பெற்றிருக்கிறது. அப்பொழுதெல்லாம் நான் எழுதத் துவங்கவில்லை. இவ்வளவு தூரம் எழுதுவதற்கு மளிகைக்கடையில் பொட்டலம் கட்டும் பையனாக நானும் இருந்ததாலோ!
மனத்தில் பட்டதை எழுதியிருக்கிறேன். கவிஞர் திரு. வைரமுத்து அவர்களை குறை கூறும்பொருட்டோ, அவதூறு கூறும் எண்ணத்திலோ இது எழுதப்படவில்லை. எவ்வகை கலைஞராயிருப்பினும் உணர்ந்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தினால் வெளிப்பட்டதாகும். வருடங்கள் சில கழிந்து விட்டாலும், அந்த பேட்டியிலிருந்த '' மளிகைக்கடையில் பொட்டலம் கட்டும் பையன் கூட பொட்டலம் கட்டும் காகிதத்தில் நாலு வரி எழுதி கவிதை என்கின்றான்'' என்ற இந்த வரிகள் மட்டுமே, இதை எழுதத் தூண்டியது என்பதை பனிவுடன் தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறேன்.

4 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா சொல்லி இருக்கீங்க தவப்புதல்வன் சார்.. நியாயமான வார்த்தைகள்..

ஆதவா said...

நீங்க சொல்வது உண்மைதான்....

நான் பெரும்பாலும் சுமாரான கவிதைகளைக் குத்திக் காட்டுவதில்லை, ஏனெனில் அவர்கள் இன்னும் எழுதி முயன்று நல்ல கவிஞர்களாக வரக்கூடும்... அதனால் ஊக்கம் மட்டுமே தருகிறேன்...

நான் http://www.tamilmantram.com தான் அதிகம் எழுதுகிறேன். அங்கே கவிதை எழுதுவது எப்படி என்று சொல்லித் தருகிறேன்.. நானொன்றும் ஆசிரியர் இல்லை.. எனக்குத் தெரிந்த கவிஞானம், தெரியாத சிலருக்கு ஏற்படவேண்டும் என்ற ஆசை.. தமிழ் கொடுக்கும் வார்த்தைகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது கவிஞர்களுக்கு மட்டுமா தெரியவேண்டும்??

மளிகைக் கடை பையனாக இருந்தால் என்ன, மகாராஜாவாக இருந்தால் என்ன? சொல்ல வரும் கருத்து ஒன்றுதான் அது கவிதையா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தும்..

நல்ல பயனுள்ள கட்டுரை

Dhavappudhalvan said...

கார்த்திகைப் பாண்டியன் said...

"நல்லா சொல்லி இருக்கீங்க" "நியாயமான வார்த்தைகள்"

பாராட்டு என்பது படைப்பாளிகளுக்கு உற்சாகத்தை தரக்கூடியது. நன்றி.

Dhavappudhalvan said...

எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. என்னுடைய படைப்புளை 'பாலு' அவர்களைத் தவிர வேறு யாரேனும் பார்ப்பார்களா? படிப்பார்களா? என்று. இன்று அது தீர்ந்தது. நான் வேறு படைப்புகளை வாசிக்கும் போது ஓரிரு வார்த்தைகளாவது கருத்தை எழுதி விடுவேன். உம்முடைய வலைபக்கத்தையும் வாசித்திருக்கிறேன் என நினைக்கிறேன். உங்களிருவரையும் உங்கள் வலைபக்கங்களில் சந்திக்கிறேன். உமக்கும் எமது நன்றிகள் ஆதவா....