Translate

Monday, August 31, 2015

குடைச்சல் – இன்றொரு தகவல்


இன்று ஒரு பொருள் வாங்க கடைக்கு சென்றிருந்தேன். கூட்டம் சிறிது இருந்ததால், என் முறைக்காக காத்திருந்தேன். எதிர்பாராத நிலையில், எம்மைப்போல் காத்திருந்த ஒருவர் என்னை அணுகி, மெல்லிய குரலில்,
ஏன் பயத்தில் இருக்கிறீர்கள்? என்ன பிரச்சனை? என்றார்.

நானோ, ஒன்றுமில்லையே நன்றாகத்தானே உள்ளேன் என்றேன்.

இல்லை, உங்கள் கைகள் நடுங்குகிறது. என்ன பிரச்சனை? என்றார் மீண்டும்.

உடல் நிலை சரியில்லை என்றேன்   

இருப்பினும் தொடர்ந்து எனை துருவ ஆரம்பித்தார்.

என்னடா இது? நாம் தான் விழிப்புணர்வு ஏற்பட மாற்றுத்திறனாளிகளிடம் கேள்வி மேல்
கேள்வி கேட்போம் என்றால், இன்று நமக்கேவா என்ற எண்ணம் தோன்றி, எதுவாக இருந்தாலும்
உங்களுக்கென்ன என கேட்டுவிட நினைத்தேன்.

ஏதேனும் ஒரு விதத்தில் உதவக்கூட நம்மிடம் கேள்விகள் கேட்கலாம்
என பொறுமையுடன் தொடர்ந்து பதில் அளித்தேன். ஆனால் அவரோ
அப்படி இப்படி சுற்றி வளைத்து மீண்டும் அதே ஆரம்ப கேள்விக்கு வந்தார்.
அதுதாங்க ‘’ஏதோ பயத்திலிருக்கிங்க, என்னான்னு சொல்லுங்க’’

அப்போதுதான் அவரை கூர்ந்தேன். தலைமுடி வெட்டும், உடல்மொழியும்,
குரல் அழுத்தமும். ஓ... தற்போது சீருடை அணியாத  சீருடையாளரோ .
என்று தோன்றிய அதே நேரத்தில், ஏமாற்று பேர்வழியாகவும் இருக்கலாம்
என்று மற்றொரு எண்ணமும் ஓடியது. காரணம் இப்பொழுது தான்
யாரையும் எதற்கும் எப்படியும் தயவு தாட்சண்யம் இல்லாமல்
ஏமாற்றுவதற்கு எத்தனையோ வேடங்கள் இடுகிரார்களே.

என்னை துருவிக்கொண்டிருக்கின்ற இவரை திசை மாற்றும் வகையில்,
ஐயா, எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும்
சேவையில் ஈடுபட்டிருக்கின்றேன். உங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகள்
இருந்தால், இக்கடையில் சொல்லுங்கள்.
இவர்கள் மூலமாக உங்களை தொடர்புக் கொள்கிறேன் என முடித்தேன்.

இதற்குமேல் என்னிடம் துருவ முடியாது என உணர்ந்தவர் போல் பேசாமல் கையசைத்து விடைப்பெற்று போனார்.      

No comments: