Translate

Monday, August 31, 2015

நினைத்து பார்க்கிறேன் – இன்றொரு தகவல்


சில நாட்களுக்கு  முன் ஆகஸ்ட் 25, ஒன்பது வருடங்களுக்கு முன்,   2007ல் இதே தேதியில் முன்பே வலைப்பதிவாளராக அறிமுகமான, நேரில் அறிமுகமில்லாத நண்பர் திரு.பாலசுப்ரமணியம் கணபதி (Balasubramanian Coimbatore @ Babu  Madscribbler ) அவர்கள் ஹூப்ளியிளிருந்து தனது மனைவியாருடன் சென்னையில் எம் இல்லத்திற்கு புயற்கற்றாய் வந்து மகிழ்வித்த காட்சி நினைவுக்கு வந்தது.

 வகையில் சந்தித்த முதல் நணபர், இவர் தான் என்பதில் பெருத்த மகிழ்வு எமக்குண்டு. எமது ஆரம்ப எழுத்தை ஊக்குவித்தவர்களில் இவருக்கு பெரும் பங்குண்டு.  

இது குறித்து எமது ஆம்பல் மலர் வலைத்தளத்திலும், கம்போஸ் தமிழ் டாட் காம் என்ற வலை இணையத்திலும் ‘’ ஏற்றமா? ஏமாற்றமா? ‘’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 25, 2007ல்  வெளியிட்டிருக்கிறேன். கீழே உள்ள வலைத்தள பதிப்பை வாசித்து உங்கள் அன்பான  கருத்திடுங்கள்

http://aambalmalar.blogspot.in/search/label/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE%3F%20%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE%3F

குடைச்சல் – இன்றொரு தகவல்


இன்று ஒரு பொருள் வாங்க கடைக்கு சென்றிருந்தேன். கூட்டம் சிறிது இருந்ததால், என் முறைக்காக காத்திருந்தேன். எதிர்பாராத நிலையில், எம்மைப்போல் காத்திருந்த ஒருவர் என்னை அணுகி, மெல்லிய குரலில்,
ஏன் பயத்தில் இருக்கிறீர்கள்? என்ன பிரச்சனை? என்றார்.

நானோ, ஒன்றுமில்லையே நன்றாகத்தானே உள்ளேன் என்றேன்.

இல்லை, உங்கள் கைகள் நடுங்குகிறது. என்ன பிரச்சனை? என்றார் மீண்டும்.

உடல் நிலை சரியில்லை என்றேன்   

இருப்பினும் தொடர்ந்து எனை துருவ ஆரம்பித்தார்.

என்னடா இது? நாம் தான் விழிப்புணர்வு ஏற்பட மாற்றுத்திறனாளிகளிடம் கேள்வி மேல்
கேள்வி கேட்போம் என்றால், இன்று நமக்கேவா என்ற எண்ணம் தோன்றி, எதுவாக இருந்தாலும்
உங்களுக்கென்ன என கேட்டுவிட நினைத்தேன்.

ஏதேனும் ஒரு விதத்தில் உதவக்கூட நம்மிடம் கேள்விகள் கேட்கலாம்
என பொறுமையுடன் தொடர்ந்து பதில் அளித்தேன். ஆனால் அவரோ
அப்படி இப்படி சுற்றி வளைத்து மீண்டும் அதே ஆரம்ப கேள்விக்கு வந்தார்.
அதுதாங்க ‘’ஏதோ பயத்திலிருக்கிங்க, என்னான்னு சொல்லுங்க’’

அப்போதுதான் அவரை கூர்ந்தேன். தலைமுடி வெட்டும், உடல்மொழியும்,
குரல் அழுத்தமும். ஓ... தற்போது சீருடை அணியாத  சீருடையாளரோ .
என்று தோன்றிய அதே நேரத்தில், ஏமாற்று பேர்வழியாகவும் இருக்கலாம்
என்று மற்றொரு எண்ணமும் ஓடியது. காரணம் இப்பொழுது தான்
யாரையும் எதற்கும் எப்படியும் தயவு தாட்சண்யம் இல்லாமல்
ஏமாற்றுவதற்கு எத்தனையோ வேடங்கள் இடுகிரார்களே.

என்னை துருவிக்கொண்டிருக்கின்ற இவரை திசை மாற்றும் வகையில்,
ஐயா, எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும்
சேவையில் ஈடுபட்டிருக்கின்றேன். உங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகள்
இருந்தால், இக்கடையில் சொல்லுங்கள்.
இவர்கள் மூலமாக உங்களை தொடர்புக் கொள்கிறேன் என முடித்தேன்.

இதற்குமேல் என்னிடம் துருவ முடியாது என உணர்ந்தவர் போல் பேசாமல் கையசைத்து விடைப்பெற்று போனார்.      

கிரேட் எஸ்கேப்!


ஒருத்தர் போன இடங்களில் கிடைத்த பிஸ்கோத்துகளை சாப்பிட்டுவிட்டு, என்ன ருசினு, ருசினு.
ஆஹா ஓஹோனு பாராட்டி பேசினவர்,
ஒரு நாள் நம்ம ஊருலேயே பிஸ்கோத்துக்கடை
இருக்கே, வாங்கி சாப்பிடுவோமுனு, பிஸ்கோத்து வாங்கி வாயில போட்டார்.

டிவியிலே மிருகங்கள்  அதுங்க இரைக்காக, மூச்சு புடுச்சிக்கிட்டு ஓடி,
இதோ புடிச்சுனு நினைக்கிறப்போ, இறை காயம் பட்டும் படாமலும் தப்பிச்சு போயிடும்,
அப்போ அந்த மிருகத்தை பாக்குனுமே, அதுமாதிரி அங்கேயே அவரு மூஞ்சி பேஸ்து அடிச்சு போச்சி.

அதை பார்த்ததுமே கடைகாரருக்கு புரிஞ்சு போச்சி, உடனே வேலை
செய்யற ஆளைக் கூப்பிட்டு, அங்கன முன்னாடி நிக்க வெச்சு, உங்களுக்கு பிடிச்ச
இந்த பிஸ்கோத்தை செஞ்சவர் இவர்தான். இவரைதான் நீங்க பாரட்டனுமுனு
சொல்லி, கிரேட் எஸ்கேப் ஆயிட்டாரு. 

பிஸ்கோத்து வாங்கியவரோ மலைத்து நின்றார்  ‘’மவனே! என்னமா டபாய்கிறான்?

Saturday, August 29, 2015

வில்லங்கம்



இதைத் தடவினால்
நரைமுடி இல்லை என்கிறார்
ஏனோ அவர் முடி மட்டும் !
“நரை”

இதை சாப்பிட்டால்
கண்பார்வை கூர்மை என்கிறார் 
ஏனோ அவர் கண்ணாடி மட்டும்
“சோடா புட்டி”

இதை தேய்த்தால்
பற்கள் பளப்பளா என்கிறார்
ஏனோ அவர் பற்கள் மட்டும்
“கரை படிந்து” / “ செயற்கை பற்கள் “

இதை உபயோகித்தால்
சருமம் எவ்வயதிலும் மினுமினு என்கிறார்
ஏனோ அவர் சருமம் மட்டும்
“ களையிழந்து ”


இப்பயிற்சி செய்தால்
நூறிலும் இளமை என்கிறார்
ஏனோ அவர் மட்டும்
“ தளர்ந்தவராய் “

இந்நீர்கருவியின் நீர்
கிருமியில்லா தரத்தில் நூறு என்கிறார்   
ஏனோ அவர் அருந்துவது மட்டும்
‘’ புட்டி தண்ணீர் ‘’

மருத்துவம் செய்துக்கொள்ள
இங்குள்ளதே உயர்வு என்கிறார்
ஆனால் அவர் சிகிச்சை மட்டும்
‘’ மேல் நாட்டில் ‘’

பட்டாசு வெடித்தால்
ஓசான் ஓட்டை என்கிறார்.
ஏனோயில்லை அவர் நினைவில் மட்டும்
‘’ குண்டுகளால் சேதம் ‘’

இலவசங்களை கண்டித்தது
மேடையில் முழங்குகிறார்
ஏனோ அவர் கை மட்டும்
“ மேசை அடியில் ‘’

சுத்தம் சுகாதாரம்
எல்லா இடத்திலும் பேச்சு
ஏனோ அவர் எறியும் குப்பை மட்டும்
‘’ சாலையில் ‘‘

இறைவன் படைத்த நீர்
அனைவருக்கும் பொது என்கிறார்.
ஏனோ அவர் குவளை நீர் தர மறுக்கிறார்
‘’ அண்டை வீட்டுக்கு ‘’

கூப்பாடு போடுகிறார்
குடிநீரில் சாக்கடை என்று.
ஏனோ அவர் சாக்கடை மட்டும்
‘’ ஓடையில் ‘’


இன்னும் ஏதேதோ நீள்கிறது 
இருந்தாலும் மனம் நிறுத்துகிறது. 
எங்கோ இருந்த நினைவுகள் – ஏனோ
உணர்விலே நுழைந்து கேட்கிறது  
நீ செய்வது மட்டும்

‘’ சரியா? ’’

கடவுளே !



உருவொன்று இருந்தாலும்
உயிரில்லா நிலையாலே
குற்றங்களை நீ சுமக்க
விடுதலையாய் நினைக்கின்றேன்.  .

நெஞ்சில், அந்த நினைவுகளோ
மெல்லத்தான் நுழைகிறது
உறுத்தும் அந்நிலையை
நீயென உணராமல்
துரத்திவிட பார்க்கின்றேன்.

கள்ளமில்லா குழந்தை உள்ளம்
உடலைப்போல் வளராமல்
கருகித்தான் போகிறது,
ஆசைகளின் பெருக்கத்தால்.

நினைவுகளில் அடைத்துக் கொண்டு
களைகளாய் வளர்கிறது
நீரின்றி போனாலும் வளமாய் - ஏனோ
அதற்கு மட்டும் விதிவிலக்கு

நீ படைத்த உயிரினமாய்
நானிருக்க,
கட்டுகளை அறுத்துக்கொண்டு
பாய்ந்து செல்ல நினைக்கின்றேன்.

மெல்ல திசைத்திருப்பி
இதுதான் நல்வழியென  விடுவாயோ
செல்லும் வழியே செல் – அது

உன் தலைவிதியென விடுவாயோ  

Thursday, August 27, 2015

ஆண்டவரின் தரிசனம்


ஏதோ சிந்தனை, கலைகிறது காற்றினாலும், அதனால் ஏற்பட்ட சலசலப்பினாலும். ஹாலில் படுத்துக் கொண்டே, தலைக்கு மேல்புறம்  இருந்த காற்றுப்போக்கியில் ( வெண்டிலேட்டர் ) என் கண்கள் பதிகிறது. அங்கு வெளிபுறமிருந்த மரத்தின் கிளைகள் மேலும் கீழும் அசைந்தபடி, இலைகள் சலசலக்கும் காட்சியை வெற்றுப்பார்வையாய் நான் பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் மின்னலடித்தது போன்றதொரு காட்சி.

கிளைகளின் அசைவுகளுக்கிடையே ஏசுபிரானின் திருவுருவம் உச்சியிலிருந்து தொடங்கி பாதம் வரை சிறுகசிறுக தெரிய ஆரம்பித்து முழு உருவமாய் காட்சி தருகிறார், ஒரு குன்றின் மேல் நிற்பது போல, அதை உணர்ந்து மனத்தில் பதித்துக் கொள்ளும் முன்பாகவே, மேலுமிரு திருஉருவங்கள் கண்ணுக்கு புலப்படுகிறது. மூன்று வெவ்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் திரு காட்சியளிக்கிறார்.

1)      பிதாவிடம் இரு கைகளையும் ஏந்தி, மானிடருக்காக யாசிப்பது போலவும்.
2)      கைகளில் ஆட்டுக்குட்டியை ஏந்தியபடி கோலுடனும்

3)      இரக்க பார்வை பார்த்தபடி ஆசிர்வதிக்கும் கோலத்துடனும்  
இப்படி மூன்று திருவடிவங்களில் காட்சியளித்ததும், ஒரு கணம் என்னை மறந்தேன். எங்குமே ஒரு சேர காணக்கிடைக்காத ஆண்டவரின் மூன்று திருகோலங்களை, புகைப்படமெடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமென்று திடிரென மனத்திலே உதயமானதும்,
புகைப்பட கருவியை என் அருகில் மற்றும் அங்கும் இங்கும் தேடுகிறேன். கிடைக்கவில்லை. வீட்டில் உள்ளவர்களிடமும் புகைப்பட கருவியை தேடி எடுத்துத் தர கூறுகிறேன். ஏனிந்த அவசரம் என்ற வினாவிற்கு, விடை பிறகு தருவதாக கூறி, புகைப்பட கருவியை பெற்று, காற்றுப்போக்கியில் காட்சியளித்த ஆண்டவரின்  திரு உருவங்களை, புகைப்படம் எடுக்க முற்படுகிறேன்.
கிளைகள் மேலும் கீழும் அசைகிறது, இலைகளும் சலசலக்கிறது. ஆனால்.... ஆண்டவரின்  திரு உருவங்களில் ஒன்றுகூட, அதிலும் ஒரு பகுதிகூட கண்களுக்கு புலப்படவில்லை. நான் முன்பு படுத்திருந்த கோணத்தில் படுக்கவில்லையோ என இந்த பக்கம், அந்த பக்கமென்று நகர்ந்து, உருண்டு புரண்டு படுத்து பார்க்கிறேன்.  “”ஆண்டவர் தரிசனம்”” மனத்திலே தங்க, விழிகளுக்கு மீண்டும் புலப்படவேயில்லை.  

#இரவின் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டேன்.
#மேலும் நான் கண்ட சில காட்சிகளை எம்மால் விவரிக்க இயலவில்லை. முடிந்தவரை எமக்கு வந்த இக்கனவினை விவரித்திருக்கிறேன்.

  .         

Monday, August 24, 2015

ஒருதலை காதல்


உன் சொற்களில் சுவையிருக்கும்
செயல்களில் அழகிருக்கும் – உன்னிலே
இயற்கையின் மணமிருக்கும் – அத்துடன்  
அருகாமை ஒரு சுகம் கொடுக்கும்

உனை நேசித்தது(ப்பது)
தவறென உணர்ந்தாலும்,
விடுபட மனதுக்கு, ஏனோ  
விருப்பமில்லை.

காலங்கள் கடந்தாலும்
உருவங்கள் சிதைந்தாலும்
என் நினைவுகளில்
மாற்றமது இருக்காது.

என்றேனும், எங்கேனும்  
ஒருதலை காதலை கேட்டாலே
நினைத்துக் கொள்வாய்

நீயுமெனை.

இனிய பெயர் சூட்டிய ( நாமகரண ) நன்னாள் வாழ்த்துக்கள்


அன்று

நீ அறியா நிலையினிலே

ஊரறிய செய்தோம்

உன் பெயரினையே.


இன்று

நீ அறிந்த நிலையினிலே

உலகறிய செய்வாய்

உன் பெயரினையே.


நலனோடும் புகழோடும்

வாழ்கவென வாழ்த்துகிறோம்

நாமகரணம் பெற்ற

இந்நாளில்.


இனிய பெயர் சூட்டிய  ( நாமகரண ) நன்னாள் 

வாழ்த்துக்கள் 

#சென்ற 17-04-15ல் பதிக்க வேண்டியது

நீயின்றி




நிலவென நினைத்த

நீ சுட்டெரிக்கும் நெருப்பாக.

கல்லென நினைத்த நான்

கரைந்துருகும் மெழுகாக.


வாயும் அடைத்து விட்டது (மௌனித்தது)

சொற்களின்றி.

உடலும் துவண்டு விட்டது (துவண்டது)

வலுவின்றி.

மனமும் வரண்டு விட்டது (வரண்டது)

நீயின்றி.

கண்களும் மூடிவிடும்

ஒளியின்றி

இதயமும் வெடித்து விடும்


வெளியேற்ற வழியின்றி.



#03/09/2007 ல் எழுதியது. அடைப்புக்குறிக்குள் இருப்பது இன்றைய (24/08/2015) திருத்தங்கள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் – பிரியா (விடுதி) 24/07/2007

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் – பிரியா (விடுதி) 24/07/2007 

எண்ணங்கள் அனைத்துக்கும்

இன்று மட்டும் விடுதலை.

மூழ்கியெடுத்த முத்துக்களை

மகிழ்ச்சியாய், எண்ணிக்கொண்டிருந்த

எண்ணத்திற்கு தவிர.


அளவுகளில் வண்ணங்களில்

முத்துக்கள் மாறுபட்டிருந்தாலும்

கலவையாய் ஜொலிக்கிறது

மகிழ்ச்சியை மட்டும்.


இம்மகிழ்ச்சி மென்மேலும் பொங்கி வழிய

இனிய பிறந்தநாளில்

அன்புடன் வாழ்த்தும்


தவப்புதல்வன்.

ஒரு காதலி (ன்) (லால்)



என் நினைவுகளோ
உனை சுற்றி வருகையிலே
சிக்காமல் செல்கிறாய்.

எனையறியா உன் நெஞ்சம்
என்று புரிந்து கொள்ளுமோ?
உனை நினைத்து புலம்புகின்றேன்
இரவு பகலென்று இல்லாமல்.

தனிமையில் தவிக்கின்றேன்
தேற்றிவிட யாருமின்றி.
பொன்னாய் உனை நினைக்கும் – எனை
புரிந்துக் கொள்வாயென நினைத்தேன்.


ஏதேதோ நினைக்கின்றேன்
எழுத்திலிட துடிக்கின்றேன்.
நீ அறிந்திட தவிக்கின்றேன்.
ஆலாய் பறக்கின்றேன்.

மரத்து போக செய்கின்றாய்
மறந்து விட சொல்கின்றாய்.
மருந்திட நினைக்காமல்.

வருடங்கள் கடந்தாலும்
விச(ன)மெனக்கு தந்தாலும்
வேண்டுதலில் மாற்றமில்லை.

நாளொன்றும் அதிகமில்லை
நீ புரிந்துக் கொண்டு அல்லாட.
இது உனக்கு
சாபமென கூறவில்லை.

வேதனை நான் பட்டாலும்
வேண்டாம் இந்நிலை உனக்கென்றே
வேண்டிக் கொள்வேன் நானென்றும்.

தொலைந்துத்தான் போகுமோ
தொடரும் நம் உறவுகள்.
தொக்கித்தான் நிற்குமோ
மனத்தில் மட்டும் என்றுமே.


மறந்துறங்கும் நேரத்திலும்
மனித்திலோடும் எண்ணங்கள்
கனவுகளாய் உனை காட்டுதே.

மயங்கி இருக்கும் வேளையிலே
மனத்திலுள்ள நினைவுகள்
மறைந்து  எங்கு செல்லுமோ? – அதுவும்
மரத்து மயங்கி போகுமோ?


விளைநிலத்தில் விரிச்சலிட்டால்
விதைக்கத்தான் முடியுமோ?
விளைச்சலைத்தான் கொடுக்குமோ?
விதியை நொந்து நிற்கிறேன்
 உனை இழந்து

#இது 2007ல் எழுதியது. 9 வருடங்களுக்கு பின் உங்கள் பார்வைக்கு. 

Sunday, August 23, 2015

ஒரு சின்ன கற்பனை



ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் -

ஒவ்வொரு நாள் காலையிலும்

 உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த
 செலவுக்காக வரவு வைக்கப்படும்.
ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள்
 கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற
 முடியாது.

3) அதை செலவு செய்ய
 மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்
 கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்
 வரவு வைக்கப்படும்

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த
 ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ள
 லாம்.

6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால்
 அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும்,
மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்
 மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்
 இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம்
 இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
 அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
 மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -
அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும்
 எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை

- நிதர்சனமான உண்மை

 ஆம்

 நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக்
 கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.
அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்
 போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக
86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம்
 நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.
அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள்
 தொலைந்தது தொலைந்தது தான்.
நேற்றைய பொழுது போனது போனது தான்.
ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம்
 கணக்கில்
86400நொடிகள்.
எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்
 வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான
 அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும்
 மதிப்பு வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின்
 ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க
 மாட்டோமா?

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக
 ஓடிவிடும்.

எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக
 இருங்கள் -
சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் -

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்